ஞாயிறு, ஜனவரி 01, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
டின்டின்http://kanuvukalinkathalan.blogspot.com/2011_11_01_archive.htmlபழைய பொருட்கள் விற்கும் சந்தை ஒன்றில் யுனிகார்ன் எனும் பெயர் கொண்ட அழகான ஒரு பாய்மரக்கப்பலை வாங்குகிறான் டின்டின். அவன் அப்பாய்மரக்கப்பலை வாங்கிய நிமிடத்திலிருந்து அதனை அவனிடமிருந்து கைப்பற்றிவிட முயலுகிறார்கள் சில ஆசாமிகள். இதனால் ஆர்வமாகும் பத்திரிகையாளன் டின்டின் அக்கப்பலை பற்றிய வரலாற்றை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான். அது அவனை ஒரு சாகசப் பயணத்திற்கு இட்டுச் செல்கிறது…..
ஒரு ரெயின் கோட், வெள்ளைக் காலுறைகளிற்குள் செருகப்பட்ட பேண்ட், சூப்பிய பனங்கொட்டை சிகையலங்காரம், கூடவே ஒரு சிறு வெள்ளைநாய் சகிதம் 88 வருடங்களாக உலகை வலம்வரும் காமிக்ஸ் பாத்திரமான டின்டின் குறித்து அறியாதவர்கள் எண்ணிக்கை அரிதாகவே இருக்ககூடும். Hergé என செல்லமாக அழைக்கப்படும் பெல்ஜியத்தை சேர்ந்த ஜார்ஜ் ரெமி எனும் கலைஞரால் உருவாக்கப்பட்ட பாத்திரம் அது.
உலகம் சுற்றும் வாலிபன் என தலைப்பு வைத்துக் கொள்ளுமளவு ஊர் சுற்றி சாகசம் செய்திருக்கும் டிண்டின் மீது புகழ் மட்டுமல்ல சர்ச்சைகளும் வந்து சேர்ந்திருக்கின்றன. சர்ச்சைகளை தாண்டியும் இன்றும் அவர் சாகசங்கள் சிறுவர்களால் படிக்கப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட முறையில் நான் இப்பாத்திரத்தின் ரசிகன் அல்ல. சிறுவயதிலிருந்து அப்பாத்திரத்தினை விட காப்டன் ஹடோக் எனும் அப்பாத்திரத்தின் நண்பன் மீதே எனக்கு பிடிப்பு இருந்து வருகிறது. நிச்சயமாக ஹடோக் கையில் பெரும்பாலும் இருக்கும் பொருள் அதற்கு காரணமாக இருக்க முடியாது.
தொலைக்காட்சி அனிமேஷன் வடிவம், திரைவடிவம் என முன்பே டின்டின் சாகசங்கள் வெளிவந்திருந்தாலும் இவ்வருடம் வெளியாகியிருக்கும் வடிவம் பலத்த எதிர்பார்ப்பை பெற்றது. அதற்கு காரணம் இரு பெயர்கள். கோயாவி மற்றும் வவ்வாலான். அல்லது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மற்றும் பீட்டர் ஜாக்சன். ஸ்பீல்பெர்க் இயக்கி தயாரிக்க, ஜாக்சன் தயாரிப்பில் பங்கேற்றிருக்கிறார், அவர் கடமை அத்துடன் நின்றிருக்காது என்பது ரசிகர்கள் எல்லாரிற்கும் தெளிவாக தெரிந்த ஒன்று.
les-aventures-de-tintin-le-secret-de-la-licorne-2011-14794-224173399The Adventures of Tintin: The Secret of The Unicorn என தலைப்பிடப்பட்டிருந்தாலும் சீக்ரெட் ஆஃப் யுனிகார்ன் கதையை சிறிது மாற்றியும் தாண்டியும், சில சம்பவங்களையும், சில பாத்திரங்களையும் பிற ஆல்பங்களில் இருந்து கதையில் அருமையாக கோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது கதைக்கு அதிக சாகசச்சுவையை சிறப்பாக இட்டு வந்திருக்கிறது. மேலும் படம் திரையாக்கப்பட்டிருக்கும் விதம் அசர வைக்கிறது. கண்களிற்கு விருந்து என்பார்கள் அல்லவா அப்படி ஒரு விருந்து இப்படத்தில் ரசிகர்களிற்கு காத்திருக்கிறது. எனவே நல்ல பிரதிகளில் படத்தை பார்ப்பதே சிறந்தது என்பதை கண்டிப்பாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
படத்தின் மிகச்சிறப்பான பாத்திரம் என நான் ஹடோக்கைதான் சொல்வேன். அவரின் அட்டகாசங்கள் இரு வேறுபட்ட கால இடைவெளிகளிலும் ரசிக்க வைக்கின்றன. 17ம் நூற்றாண்டு காப்டனின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை என்னவென்று சொல்வது. சில நிமிடங்கள் வந்தாலும் பிரான்சிஸ் ஹடோக் பாத்திரம் மனதை அழகான இளம் வாலிபி போல் கொள்ளை கொண்டு விடுகிறது. டின்டின் பாத்திரம் ஹெர்ஜெ படைத்த பாத்திரத்தைவிட அழகாகவும், உயிர்ப்புடனும் திரைப்படத்தில் உலாவருகிறது, ஹெர்ஜெ படைத்த ஸ்னொவியிடம் இருந்த குறும்புத்தனமும் மென்மையும் சற்று குறைந்த ஸ்னொவியை திரையில் காணலாம்.
பகார் எனும் மரொக்க துறைமுக நகரில் நடக்கும் துரத்தல் காட்சிகள், 17ம் நூற்றாண்டில் கடலில் நிகழும் கடற்கொள்ளையர்களுடான மோதல் என்பன அசரவைக்கும் ஆகஷன்ரகம். மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும் இக்காட்சிகளிற்கு நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு சேர்த்திருக்கும் தரத்தையும் அதற்கு காரணமானவர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
இயக்குனர் ஸ்பீல்பெர்க்கிற்கு சாகசத்திரைப்படங்கள் என்றால் அல்வா செய்வது போல. மனிதர் தேங்காய் எண்ணெய், சிகப்பு அரிசி மா, கருப்பட்டி, தேங்காய்ப்பால் சகிதம் கோதாவில் குதித்து உருவாக்கியிருக்கும் இந்த சாகச அல்வா, பனித்துளி போல் ரசிகர்கள் மனதில் கரைகிறது. திரையரங்கில் அனைத்து வயதிலும் டிண்டின் ரசிகர்களை காணக்கூடியதாக இருந்தது என்பதும் மகிழ்ச்சியான ஒரு விடயமே. சிறுவயது நாயகர்கள் அவ்வளவு இலகுவில் மனதை விட்டு நீங்கி விடுவதில்லை என்பது உண்மைதான் போலும். முதல் காதலின் தலைவிதி என்பது இதுதானோ. [****]

கருத்துகள் இல்லை: