ஞாயிறு, ஜனவரி 22, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

த்ரீ இடியட்ஸ் - நண்பன் : சொல்லிய மெசேஜ் உரியவர்களை போய்ச்சேருமா? – பகுதி III


பகுதி I இனைப் படிப்பதற்கு..
த்ரீ இடியட்ஸ் - நண்பன் + ஒப்பீடு + விமர்சனம் - பகுதி I

பகுதி II இனைப் படிப்பதற்கு..
த்ரீ இடியட்ஸ் - நண்பன் : கதாபாத்திர தெரிவின் பொருத்தப்பாடுகள் - பகுதி II


நண்பன் படத்திற்கு பிரமாண்ட இயக்குனர் சங்கர் அவசியமா? என்ற கேள்வியும் பலரிடம் இருக்கின்றது. என்னைக் கேட்டால் ஆம்! என்று தான் சொல்வேன். ‘த்ரீ இடியட்ஸ் படத்தை பலரும் பார்த்திருப்பார்கள்’ இந்த வசனத்தை முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டு இந்திய அன்பர் ஒருவரிடம் செமையாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். “அதென்ன ஹிந்திப்படம் என்றால் நாங்கள் கட்டாயம் பார்க்கவா வேண்டும்?” என அவர் பொரிந்து தள்ளியிருந்தார். இந்தியா தவிர்ந்த உலகளாவிய ரீதியில் பல தமிழர்கள் பார்த்திருப்பார்கள். இந்தியாவிலும் குறிப்பிட்ட சிலர் பார்த்திருப்பார்கள். தமிழ்ப்படங்களின் வசூலில் பெரும்பகுதி புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களில் உண்டு. அந்த புலம்பெயர் மக்களை (படம் பார்த்த) மீண்டும் த்ரீ இடியட்ஸ் கதையைப் பார்க்க வைப்பதற்கு சங்கர் அவசியமாகின்றார். ஒரே கதையானாலும் காட்சிப்படுத்தலில் வித்தியாசத்தைக் காட்டியிருப்பார் எனப்பலரும் நம்பினார்கள். அதை அவர் செய்திருக்கிறார். ஒரே காட்சியானாலும் நட்சத்திரங்கள் கதைக்கும் போது மொழிபெயர்ப்பாக மட்டும் இல்லாமல் சில வசனங்களை புதிதாக சேர்த்திருக்கின்றார். நண்பன் பார்த்த பின்னர் மீண்டும் த்ரீ இடியட்ஸை பார்த்த போது அது புரிந்தது.

சங்கரின் “சக்ஸஸ் பார்முலா” விற்கு ரீமேக்கான நண்பனும் கைகொடுத்து அவரைத் தொடர்ந்தும் வெற்றிப்பட இயக்குனராக வலம்வர வைத்திருக்கின்றது. எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்களை மட்டுமே எடுத்திருக்கும் ஒரே இயக்குனர் சங்கர் என்றால் அது மிகையில்லை. சங்கரையும் கம்பியூட்டர் கிராபிக்ஸையும் பிரிக்க முடியாது. ஆனால் நண்பனில் அது தேவையில்லை “எது நிஜத்தில் சாத்தியப்படாதோ அதற்கு தான் சி.ஜி தேவை” என அவரே சொல்லிவிட்டார். தன் பிரமாண்ட வேலையை காட்சிகளில் காட்ட முடியாவிட்டாலும் கிடைத்த இரண்டு பாடல்களில் காட்டிவிட்டார். கார்க்கியுடன் இணைந்து வசனத்திலும் அசத்திவிட்டார்.

ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்ஸா, ஊட்டியை பலரும் பல கோணங்களில் காட்டிவிட்டனர். எல்லாவற்றையும் தவிர்த்து புதுக்கோணத்தில் காட்டி மனதைக் குளிர்வித்துவிட்டார். ஊட்டி செல்லும் பாதையின் ஏழு வளைவுகளையும் படம்பிடித்த விதம் அருமை. தன்னைக் கூட அழகாக காட்டியது மனோஜ்ஜின் ஒளிப்பதிவு தான் என விஜய் கூட சிலாகித்திருந்தார். காலேஜ், தண்ணீர்தாங்கி என்பவற்றை அழகாக படமாக்கியதுடன் பாடல்காட்சிகளிலும் தன் வித்தையைக் காட்டியிருக்கின்றார்.

இசை ஹாரிஸ் ஜெயராஜ். தன் மெட்டையே திரும்பவும் பாவிக்கின்றார், பிற மொழிகளில் இருந்து காப்பியடிக்கின்றார் என்றெல்லாம் விமர்சனங்களை அதிகமாக எதிர்கொள்ளும் இசையமைப்பாளர் இவர். நண்பனில் கூட அவ்வாறான விமர்சனங்கள் எழுந்தது. அதையும் தாண்டி ஜெயித்துவிட்டார். ‘அஸ்கு லஸ்கா..’ பாடலில் மீண்டும் தன்னை ‘மொலோடி கிங்’ என நிரூபித்திருக்கின்றார். டைட்டில் ஸோங் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் ஹிந்தி பாடலுடன் ஒப்பிடும் போது மெலோடி மிஸ்ஸாகிறது. டைட்டில் ஸோங்கின் இசையே முன்பாதியில் பல இடங்களில் பின்னணியாக ஒலிப்பதால் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

கலை முத்துராஜ். சங்கர் படங்கள் பிரமாண்டம் என்ற பெயர் வரக் காரணம் கலை இயக்குனர்கள் தான். இங்கு பிரமாண்ட செட்களைப் போடுவதற்கு பதிலாக பெரிய உதடு, பெரிய கண் என உருவாக்கியதாக முத்துராஜ் சிரித்துக் கொண்டே பேட்டியொன்றில் சொன்னார். அஸ்கு லஸ்கா பாடலில் வரும் ட்ரெயினும், இருக்கானா பாடலில் வரும் செட்டும் பிரமிப்பூட்டுகின்றது. எடிட்டிங் ஆன்டனி. தமிழ் சினிமாவின் முன்னணி படத்தொகுப்பாளர். ரீமேக் படத்தை அளந்து அளந்து படம் பிடித்ததால் வெட்டிக்கொத்த வேண்டிய தேவையே இருந்திருக்காது.

சரி, நண்பன் படம் போகிற போக்கில் இளையோருக்குத் தேவையான பல கருத்துக்களை அள்ளித் தெளித்துச் சென்றிருக்கின்றதே! அதைத்தான் முக்கியமாகப் பார்க்க வேண்டும்




“வெற்றிக்குப் பின்னாடி போகாதை, உனக்கு பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுத்துக்கோ, அதில உன் திறமையை வளர்த்துக்கோ, கடுமையா உழைத்துக்கொண்டிரு, வெற்றி ஆட்டமற்றிக்கா உன் பின்னால வரும்”.

இதை முதல்ல என் வாழ்க்கையோட சம்பந்தப்படுத்திப் பார்த்தேன். எனக்குப் பிடித்த துறை என்ன தெரியுமா? சமையல் கலை. அது என்னவோ தெரியலீங்க சின்ன வயசில இருந்தே அம்மாவுக்கு சமையலில் உதவி செய்து செய்து சமைப்பதில் அலாதிப்பிரியம் வந்து விட்டது. தவிர, பிரதி ஞாயிறு தோறும் தூர்தர்ஸன் சானலில் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பப்படும் ‘சமைக்க சுவைக்க’ நிகழ்ச்சியைப் பார்த்தே வளர்ந்தவன் நான். அதில் செய்து காட்டும் உணவுகளை நானே செய்து பார்ப்பேன். இட்லி, தோசை என நம்மூர் சாப்பாடுகளில் இருந்து பீஸா வரை எனக்குச் செய்யத் தெரியும். இதில் உச்சக்கட்ட காமெடி என்னவெனில், லண்டனில் நான் பகுதிநேரமாக வேலை பார்ப்பது கே.எப்.ஸி எனும் உலகளாவிய பிரபல்யம் பெற்ற பாஸ்ட்பூட் கடை. மனம் போல் வாழ்வு அமையாவிட்டாலும் மனதுக்கு பிடித்த வேலையாவது அமைந்ததே. கே.எப்.ஸி சிக்கனுக்கு என தனித் தயாரிப்பு முறை உண்டு. அதை வெளியில் இருப்பவர்கள் செய்ய முடியாது. அந்த டெக்னிக்கை கூட அறிந்து விட்டேன். மீண்டும் ஊர் திரும்பினால் அதையே முதலீடாக இட்டு தொழில் தொடங்கும் ஐடியா தான் எனக்கு. ஆனால் யாழ்ப்பாண சமூகம் என்னை ஏற்குமா? என் பெற்றோர் தான் அதைச் செய்ய விடுவார்களா? ‘சமையல்காரன்’ என்ற பெயரை மட்டும் தான் தர முடியும்.

ஒரு ரெஸ்ட்டோரன்ஸை ஆரம்பிப்பதன் மூலம் ஒரு லட்சாதிபதியாகவோ என் திறமை மூலம் கோடீஸ்வரனாகவோ ஆகமுடியும். ஒரு கே.எப்.ஸி போல உலகளாவிய ரீதியில் ஒரு கம்பனியை உருவாக்கா விட்டாலும் இலங்கையிலாவது உருவாக்க முடியும். ஆனால் அதையெல்லாம் விடுத்து எம்மவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயில் பார்க்கும் அரசாங்க உத்தியோகம் தான் கௌரவமானது. எங்கள் விருப்பத்தின் படி வாழ விடாது சமூக அமைப்புக்கள் எங்களைத் தடுக்கின்றது. மீறினால், ஒதுக்கப்பட்டவர்களாவோம்.

“மனம் ஒரு பயந்தாங்கொள்ளி. அதைத் தைரியப்படுத்துவதற்காக மனதைத் தொட்டு அடிக்கடி ஆல் இஸ் வெல் சொல்ல வேண்டும்”

மனம் பயந்தாங்கொள்ளி என்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையே! சின்ன உதாரணம், நாங்கள் முதன் முதலில் சைக்கிள் ஓடப்பழகும் போது யாராவது பின்னால் பிடித்துக் கொண்டு வருவார்கள். அவர்கள் வருகிறார்கள் என்ற தைரியத்தில் நாங்களும் சந்தோசமாக மிதித்து ஓடுவோம். இடை நடுவில் அவர்கள் கையை விட்டு விடுவார்கள். ஏதும் அறியாத நாங்கள் தடங்கலின்றி சென்று கொண்டிருப்போம். திடீரென திரும்பிப்பார்க்கும் போது சைக்கிளைத் தள்ளி வந்தவர் இல்லை எனத் தெரிய கீழே விழுந்து விடுவோம். இதனால் மனதை எப்பொழுதும் தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். “எங்களால் முடியும்” என நினைக்க வேண்டும். அந்த தைரியம் என்னிடமும் இன்னும் சரியாக வளரவில்லை.

பிரதானமான விடயம், எங்கள் கற்பித்தல் முறையில் உள்ள குறைபாடுகள். 

எம்மில் பலரும் முதலிடத்தைப் பெறவேண்டும் அல்லது பாஸ் பண்ண வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே படிப்பார்களே தவிர எவ்வளவு தூரம் விளங்குகின்றது. இதைப்படிப்பதன் மூலம் எங்கள் வாழ்க்கையில் என்ன பிரையோசனம் என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள். முக்கியமாக “சொய்ஸ் வைத்துப் படிக்கும் முறை”. இதை ஆசிரியர்களும் ஊக்குவிக்கின்றார்கள். முழு பாடப்பரப்பையும் கற்பிக்காது பரீட்சைக்கு எது வரும் என ஊகிக்கின்றார்களோ அதை மட்டும் படிப்பிப்பது. சிந்தித்துப் பாருங்கள், கணித – விஞ்ஞானத்துறையில் கெமிஸ்ரியை ஒரு பாடமாக கற்கும் மாணவன் ஓகானிக், இன்னோகானிக் இரண்டு பாடப்பரப்பையும் தவிர்த்துப் படித்து பட்டம் பெறுவதால் அவன் முழுமையானவன் ஆகின்றானா?

90 நிமிடத்துக்கு ஒரு மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றான்.

பரீட்சையில் சித்தியடையத்தவறும் போது, அல்லது எதிர்பார்த்த பெறுபேற்றைப் பெறாத போது மாணவர்களின் மனம் சோர்வடையும், விரக்தி நிலைக்குச் செல்லும். அந்தவேளை கூட இருப்பவர்கள் “சரி விடு அடுத்தமுறை பார்க்கலாம்” என தைரியம் கூறவேண்டும். அதை விடுத்து, “நீயெல்லாம் இருந்து என்னத்தை கிழிக்கப்போறாய்?” என கேட்டால் தவிக்கும் மனதுக்கு எப்படியிருக்கும். இந்த தவறை அதிகளவில் பெற்றோரே செய்வார்கள். பிறகு பிள்ளையை இழந்து தவிப்பவர்களும் அவர்கள் தான்.

இன்று மாணவனாக இருக்கும் நிலையில் நண்பன் படத்தில் கூறப்பட்ட விடயங்கள் எங்களுக்கு சாதகமாக இருக்கும். நாளை பெற்றோராக மாறும் போது நாங்களும் இதே தவறைச் செய்யலாம். இன்று காதலித்து திருமணம் முடிப்பவர்கள் தான் நாளை பெற்றோராக மாறி தங்கள் பிள்ளைகளின் காதலுக்கு தடை விதிப்பார்கள். இதுவே உலக நியதியும் கூட.

போகிற போக்கில் பல அரிய கருத்துக்களை அள்ளித் தெளித்துச் சென்றிருக்கின்றது நண்பன் படம். இதை மாணவர்கள் - பெற்றோர்கள் இருவருமே பார்க்க வேண்டும். முக்கியமாக, பதிவர் ஜி குறிப்பிட்டதைப் போல யாழ்ப்பாணத்துப் பெற்றோர் பார்க்க வேண்டும்.

இந்த விமர்சனத்தை அடுத்த பாகத்துக்கும் நீட்டினால் ராஜ் மற்றும் யோகா ஐயா ஆகியோர் “விமர்சனப் பீரங்கி” பட்டத்தை வழங்கி விடுவார்கள். எனக்கு பட்டம், பதவிகளிளெல்லாம் ஆசையில்லை அதனால்…

முற்றும்..
http://shayan2613.blogspot.com/2012/01/iii.html

கருத்துகள் இல்லை: