வெள்ளி, ஜனவரி 20, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
     



மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

 

 

 

http://www.thinakaran.lk/2012/01/19/?fn=f1201191

எட்டு வயதுச் சிறுவன் அவன். அவனுடைய ஆறு வயதுத் தங்கைக்கு லூகேமியா நோய் இரத்தம் மாற்றினால் தான் அவள் உயிர்ப் பிழைப்பாள் என் கின்றனர் மருத்துவர்கள், சிறுவனுடைய இரத்தம் ஒத்துப் போகுமா என சோதித்தார்கள். சரியாக பொருந்தியது.
'தங்கைக்கு இரத்தம் கொடுக்க சம்மதமா?' மருத்துவர்கள் கேட்டார்கள். கொஞ்ச நேரம் யோசித்த சிறுவன் 'சரி' என்றான். அவனிடமிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக எடுக்கப்பட்டது. அது சிறுமியின் உடலுக்குச் சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்துக்குப் பின் அருகில் இருந்த தாதியை அழைத்த சிறுவன் கேட்டான். 'நான் எப்போது சாகத் தொடங்குவேன்?'
தாதி அதிர்ச்சியடைந்தார்.
தனது இரத்தத்தைக் கொடுத்தால் தங்கை பிழைத்துக் கொள்வாள். ஆனால் தான் இறந்து விடுவோம் என சிறுவன் நினைத்திருக்கிறான். தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது தங்கை பிழைக்கட்டும் என முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இதுதான் தன்னலமற்ற அன்பின் வடிவம்.
இன்றைய இளைஞர்கள் பல விடயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். தொழில் நுட்பங்களில் அவர்களுடைய கை ஓங்கியிருக்கிறது. திரை கடலோடியும் திரவியங்களை அள்ளி வருகிறார்கள். சவால்களின் முதுகில் ஏறி சாதனைச் சந்திரனையே கிள்ளி வருகிறார்கள். ஆனால் வாழ்க்கையில் சுயநல ஓட்டுக்குள் முடங்கி விடு கிறார்கள்!
எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும் அது நமக்கு எப்படிப் பயன ளிக்கப் போகிறது என்பதைத்தானே நாம் பார்க்கிறோம்? அந்த சிந்தனை யிலிருந்து விலகி, அடுத்த நபருக்கு அது என்ன பயன்தரும் என்பதைப் பார்ப்பது தான் சுயநலமற்ற மனதின் வெளிப்பாடு. இந்த செயல் அடுத்த நபரை காயப்டுத்துமா? பலவீனப் படுத்துமா? என பிறரை மையப்படுத்தி எழுகின்ற சிந்தனைகள் மகத்துவ மானவை!
"சுயநலமற்ற அன்பு என்றதும் நம் கண்ணுக்கு முன்னால் என்ன வருகிறது? பிறருக்கு கொஞ்சம் பொருள் உதவி செய்வது தானே? பெரும்பாலான மக்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். 'இருந்தா கொடுத்திருக்கலாம்.. இல்லையே' என தங்களையே தேற்றிக் கொள்கிறார்கள். உண்மை அதுவல்ல. பிறருக்கு பயன்படக் கூடிய எந்த விடயத்தையும் 'நமக்காக மட்டுமே' பயன்படுத்துவது சுயநலமே!
ஒரு சின்ன உதாரணம் 'நேரம் கொஞ்சம் ஓய்வு எடுப்போம் என தொலைக்காட்சி முன்னால் வீணடிக்கும் நேரம் கணக்கில் அடங்குமா? அல்லது அலங்காரம் செய்கிறேன் என கண் ணாடி முன்னால் வீணடிக்கும் நேரம் தான் கொஞ்ச நஞ்சமா? இந்த நேரங்களையெல்லாம் பிறருக்காய் பயன்படுத்தலாமே என எப்போதாவது யோசித்ததுண்டா? இதுவரை யோசிக்காவிட்டால் இப்போது யோசிக்கலாமே?
உதவி தேவைப்படும் ஒரு நண் பருக்காக அந்த நேரத்தை பயன் படுத்தலாம். ஒரு மருத்துவமனைக்குச் சென்று ஒருவருக்கு ஆறுதல் சொல்லலாம். ஒரு அனாதை விடுதியில் உங்கள் மாலை வேளையைச் செலவிடலாம். முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களோடு பேசிக் கொண்டிருக்கலாம்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். நம்மைச் சுற்றி ஆயிரம் ஆயிரம் தேவைக் கரங்கள் நிமிடம் தோறும் நீண்டு கொண்டே இருக் கின்றன. சுயநலத்தின் இமைகளை விரித்து அன்பின் அகக்கண்ணால் உலகத்தைப் பார்க்கத் தெரிய வேண்டும் அவ்வளவுதான்.
சுயநலம் உறவுகளுக்கி டையே உருவாகும் போது வாழ்வில் அடிப்படையான அன்பே சிதிலமடைகிறது. அன்பும் சுயநலமும் ஒன்றில் ஒன்று கலப்பதில்லை. கணவனோ, மனைவியோ சுயநலவாதியாய் இருக்கும் போது அந்தக் குடும்பம் பலவீனமடைந்துவிடும். பிள்ளைகள் சுயநலவாதியாய் இருந்தால் பாசப்பிணைப்பு பலவீனமடையும், நண்பர் களிடையே எழுகையில் நட்பே உடைந்துவிடும்.
'நான்' என்பதை பின்னால் நிறுத்தி 'நீ உனது விருப்பம்' என்பதை முன்னில் நிறுத்துகையில் உறவுகள் செழிக்கத் தொடங்குகின்றன. ஒரு குடும்பத்தில் அனை வரும் அத்தகைய சிந்தனை கொண்டிருந்தால் அந்தக் குடும்பம் ஆனந்தத்தின் சோலையாகவே பூத்துச் சிரிக்கும்.
மாட மாளிகைகள் அல்ல பாக்கியம் செய்தவை. எந்த குடும்பத்தில் சுயநலமற்ற அன்பு உலவுகிறதோ, அது தான் பாக்கியம் செய்த குடும்பம். அது குடிசையாகவும் இருக்கலாமம். மாடி வீடாகவும் இருக்கலாம். அல்லது சாலையோர கோணிக் கூடாரமாகவும் இருக்கலாம்.
நான் எனும் சுயநலத்தின் அடுத்த வட்டமாக 'எனக்கு என் குடும்பத்துக்கு என் பிள்ளைகளுக்கு' என சுயநலம் தனது எல்லைகளை அமைக்கிறது. தனது வட்டத்தைத் தாண்டிய சக மனிதன் மீதான கரிசனை காணாமல் போய்விடுகிறது.
சுயநல சிந்தனைகளை விட்டு வெளியே வர முதல் தேவை. 'நாம் சுயநலவாதி' என்பதை ஒத்துக் கொள்வதுதான். பலவேளைகளில் !நான் சுயநலவாதியல்ல' என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். உதா ரணமாக நீங்கள் பொறாமை குணம் படைத்தவர் என வைத்துக் கொள் ளுங்கள். உங்களுக்குள் சுயநலம் ஒளிந்திருக்கிறது என்று அர்த்தம். உங்கள் நண்பரோ விரோதியோ சக பணியாளரோ உங்களை விடப் பெரிய பதவிகளை சட்டென அடைந் தால் உங்கள் மனதில் பொறாமை எழுகிறதா? அவர்களுடைய தகுதியை தரக்குறைவாய் விமர்சிக்கத் தோன்றகிறதா? ஊஷாராகிவிடுங்கள். இவையெல்லாம் சுயநலத்தின் வெளிப் பாடுகள்!
அதேபோல, கோபம், எரிச்சல், வெறுப்பு எல்லாமே சுயநலத்தின் வேறு வேறு வடிவங்களே. நாம் சக மனித கரிசனையில் நடக்கும் போது நம்மைத் தாண்டிய உலகமும் நமக்கு முன்னால் அழகாகத் தெரிகிறது.
ஒவ்வொரு நாளும் சுயநலமற்ற ஒரு நல்ல செயலையாவது புதிதாய்ச் செய்ய வேண்டும் என நினைத்துப் பாருங்கள். பாரம் சுமக்கும் மனிதராய் இருந்தாலும் சரி வெறுமனே தனிமையில் இருக்கும் ஷிதியவராய் இருந்தாலும் சரி. எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாத ஒரு துளி அன்பை அவர்களுக்கும் அளித்துப் பாருங்கள். அதன் ஆனந்தம் அளவிட முடியாதது.
'தனக்கென மட்டுமாய் வாழ்பவன் இறக்கும் போதுதான் உலகம் பயனடைகிறது என்கிறார் தெர்தூலியன். மன மகிழ்வுடன் பெகடுப்பது நல்ல மனதின் பண்பு. பிறருக்குக் கொடுக்கும் போது உங்களுடைய வாழ்க்கை செல்வச் செழிப்பால் நிறைவடைகிறது.
பிறருடைய பார்வையில் நல்லவனா ய்த் தெரியவேண்டும் என்பதற்காக சிலர் நல்ல செயல்களைச் செய்வார்கள். அது தவறு. செயலும் அதன் பின் னணியில் இருக்கும் சிந்தனையும் தூய்மையாய் இருக்க வேண்டியது அவசியம்.
சிறிய வயதிலேயே குழந்தைகளுக்கு சுயநலமற்ற பண்பை கற்றுக்கொடுத்தால் அவர்களுக்கு அது பழகிப் போய் விடுகிறது. பெற்றோரைப் பார்த்துத்தான் பிள்ளைகள் கற்றுக் கொள்ளும் எனும் பால பாடத்தை மறக்க வேண்டாம்.
விழாக்கள், கொண்டாட்டங்கள் என்று வரும்போது ஏகப்பட்ட பணம் செலவழிக்கிறோம். பெரும்பாலும் நம் குடும்பம் நமது நண்பர்கள் நமது உறவினர்கள் இவ்வளவுதான் நமது எல்லை! இந்த எல்லையை விட்டு வெளியே வந்து ஒரு முறை விழா கொண்டாடிப் பார்க்க நினைத் ததுண்டா? முதியோர் இல்லங்கள் எதிர்தெரு ஏழைகள் அருகில் வாழும் எளியவர்கள் நோயாளிகள் இவர்க ளோடு சேர்ந்து ஒரு விழாவைக் கொண்டாடிப் பாருங்களேன். சுயநலமற்ற அன்பின் உண்மை விஸ்வரூபத்தை அப்போது கண்ட டைவீர்கள்.
பிறருக்குக் கொடுத்து வாழ்பவர்களை ஆனந்தம் நிழல் போல் தொடரும். எப்போதுமே நீங்காது என்கிறார் புத்தர். சுயநலம் துறந்தால் கர்வம் நம்மை விட்டுக் கடந்து போய்விடு கிறது!
சுயநலமற்ற அன்பு தாயன்பு போல தூய்மையானது.
உணவு பற்றாத போது 'என்னவோ தெரியவில்லை இன்று பசிக்கவில்லை எனப் பொய் சொல்லிவிட்டுப் பிள் ளைகளுக்கு உணவு ஊட்டும் அன்பு தாயன்பு!
தனக்குக் பற்றாத போது 'என்னவோ தெரியவில்லை. இன்று பசிக்கவில்லை' என பொய் சொல்லிவிட்டுப் பிள் ளைகளுக்கு உணவு ஊட்டும் அன்பு தாயன்பு!
தன்னிடமிருக்கும் கடைசிச் சொட்டு வலிமையையும் வசதியையும் பிள்ளைகளுக்குத் தாரை வார்க்கும் தாயன்பு இதைவிட புனிதமான ஒரு உதாரணத்தை சுயநலமற்ற அன்புக்காய் காட்ட முடியுமா? அடுத்தவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என நாம் நினைக்கும் எதுவும் நமக்குக் கிடைக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது' என்கிறார் ஸ்பினோஸா.
சுயநலமற்ற, ஒவ்வோர் செயலும் இன்னொரு நபருடைய வாழ்வின் மிகப்பெரிய மாற்றத்தையும் உற்சாகத்தையும் கொண்டு வரும். அந்த செயல் பல்கிப் பெருகி பூமியை நிரப்பும்.
ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும் இது ¨எனது சுமநல எண்ணத்தின் வெளிப்பாடா?' எனும் ஒரு கேள்வியைக் கேட்டாலே போதும். உங்களுடைய செயல்களி லிருந்து சுயநலம் கொஞ்சம் கொஞ் சமாய் வெளியேறத் தொடங்கும்.
அன்பைக் கெடுக்கும் சுயநலம்- அதை
விட்டு விலகுதல் வெகுநலம்!

கருத்துகள் இல்லை: