வியாழன், ஜனவரி 12, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

பொழிலனின் கதை நேரம்!! (ஒளி/ஒலி வடிவில்)

அமெரிக்காவில் ஆரம்பக்கல்வி!!

பொழிலனை இங்கே ஒரு நல்ல பள்ளியில்( விசாரித்த வரை) சேர்த்திருக்கிறோம்... நான் அந்தப் பள்ளிக்குச் சென்று அவனுடைய வகுப்பறைக்கும் சென்று நன்கு பார்த்துவிட்டுதான் அந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தேன்... எனக்கு இங்கே மிகவும் பிடித்த ஒன்று குழந்தைகளை எதற்காகவும் கட்டாயப்படுத்துவதில்லை... அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை நம் வழிக்குக் கொண்டுவருவதைக் கடைப்பிடிக்கின்றனர்... அதிலும் பள்ளிகளிலும் அதே வழிமுறைதான்!


குழந்தைகளின் கருத்துக்களுக்குப் பெரிதும் மதிப்பளிக்கப்படுகிறது.... இது அவர்களை இன்னும் மேம்படுத்தவும், தன்னம்பிக்கை உருவாவதற்கும் பெரிதும் உறுதுணையாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது!!

அவனுக்குப் பள்ளி துவங்கியதும் முதல் ஒரு வாரம் முதல் இரு வாரங்கள் வரை நானும் அவனுடன் சென்று அவன் அருகில் இருக்கலாம் அவன் மனம் புதிய இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வரை.... ஆனால் இரண்டு மூன்று நாட்களிலேயே குழந்தைகள் தாயைப் பிரிந்து புதிய தோழர், தோழிகளிடம் பழகிவிடுகின்றனர்... பொழிலனும் அவ்வாறு மாறிவிடுவான் என்று எண்ணுகிறேன்....

ஒரு வாரத்திற்கு ஒரே ஒரு புதிய குழந்தை பள்ளிக்கு முதன் முதல் வகுப்பிற்கு என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல முறையாகத் தோன்றுகிறது.... அந்த ஒரு வாரம் முழுவதும் அந்த குழந்தையை நன்கு கண்காணித்து, புரிதலுடன் அந்த குழந்தையை ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவும் குழந்தையும் ஆசிரியருடன் எளிதில் நெருங்கிப் பழகவும் இது உதவும்.... நம் ஊரில் எப்படி என்று தெரியவில்லை.... நம் ஊரிலும் இதே வழக்கம் இருந்தால் மிக்க மகிழ்ச்சிதான்.... இல்லையென்றாலும் இப்படி சில மாற்றங்கள் வந்தால் வரவேற்போம்...

இங்கே தமிழ் மொழி பயிலவும் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை தமிழ் வகுப்புகள் தனி "தமிழ் பள்ளியாக" இருக்கின்றன...

ஆனால் பொழிலுக்கு தமிழ் கற்பிக்க தற்சமயம் நானே போதும் என்று எண்ணுகிறேன்... அவன் அழகாக தமிழிலும் பேசுகிறான்... எழுதவும் முயற்ச்சிக்கிறான் :)

மொத்தத்தில் தேசம் விட்டு தேசம் வந்தாலும் தமிழ் என்றும் நம்மிடம் வாழ்கிறது...

Tuesday, July 19, 2011

Sweet Moments -4

இன்னைக்கு எம் பொண்ணுக்கு செகண்ட் யூனிட் டெஸ்ட் ஆரம்பம் ,முதல் நாள் மேத்ஸ் டெஸ்ட் ,நேத்து நல்லா Revisionபண்ணிட்டா ,டெஸ்ட் எழுத சொல்லி கரெக்சன் பண்ணி முடிச்சதும் எனக்கு திருப்தியா இருந்தது,எல்லாத்தையும் விட காலைல குளிச்சு கிளம்பினதும் வேன் க்கு போறதுக்கு முன்னால அம்மா ,அப்பா இங்க வாங்கன்னு கூப்ட்டா .

"டைம் ஆச்சு ஹரிணி வேன் வந்துடும் சீக்ரம் வா "ன்னு கத்திட்டு இருந்தேன் நான்.காலை நேர டென்சன் !


"இரும்மா வரேன் ..அப்பா ப்ளீஸ் சீக்கரம் வந்து அம்மா கிட்ட நில்லுங்களேன்ப்பா"


"என்னடி குட்டி இது இந்நேரம் விளையாடிட்டு இருக்க ,இங்க வா நான் கீழ போறேன் TIME ஆச்சு ."


"இரேன்ம்மா ..."


அவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் முகத்தை சுருக்கிக் கொண்டு தேவ் இடம் போய் அவரது கையைப் பிடித்து எழுப்பி அழைத்துக் கொண்டு வந்து என் அருகில் நிற்க வைத்தாள். தேவ் என்னவோ ரிபோர்ட் அனுப்பிக் கொண்டிருந்தார் அவரது ஹெட் ஆபிசுக்கு .அந்த டென்சன் அவருக்கு .


"என்னடா இப்டி பண்ற ஸ்கூல் க்கு கிளம்பற நேரத்துல என்ன விளையாட்டு இது? " - மனமில்லாமல் சொல்லிக் கொண்டே எழுந்து வந்தார் .


ஒருவழியாக நாங்கள் சேர்ந்து வந்து அவள் முன் நின்றதும் ;


ஹரிணியின் முகத்தில் சிரிப்பு குமிழியிட்டது .


"எங்க தீபா மிஸ் EXAM DAY அன்னைக்கு பேரன்ட்ஸ் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னாங்க , என்ன Bless பண்ணுங்கம்மா ,Bless பண்ணுங்க டாடி ."


"ஹேய் ...குட்டி என்னடா இது ! "எனக்கு உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டியது போல அத்தனை சந்தோசம் அப்பிக் கொண்டது. தேவ் பற்றி சொல்லவே வேண்டாம்.


"ஹே குட்டி இதெல்லாமா உங்க மிஸ் சொல்லித் தராங்க ,நல்ல மிஸ் தாண்டா .... " சிரித்துக் கொண்டே மகளிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்த பார்வை சொன்னது ,


"எம்பொண்ணாக்கும்! "


ஐயே ...நல்ல அப்பா நல்ல பொண்ணு ரொம்பத் தான் அலம்பல். :)))

Thursday, February 24, 2011

குழந்தைகளின் ஆச்சரியமூட்டும் மொழிகளைக் கற்கும் திறன் - The linguistic genius of babies

Cross posted


எல்லாக் குழந்தைகளுக்கும் பல மொழிகளை முழுதாகக் கற்றுக்கொள்வதற்குரிய திறமை உள்ளதெனப் பலருக்குத் தெரியும். அத்திறமை 10-12 வயதிலிருந்து மிக வேகமாகக் குறைந்துவிடும். சிறு வயதிலிருந்து தமிழில் மட்டுமே படித்து விட்டு பின் வெளிநாடு செல்பவர்களுக்குத் தெரியும் அதன் அருமை. மொழியைக் கற்கும் திறன் எல்லா மனிதக்குழந்தைகளுக்கும் இயற்கையிலேயே உண்டெனிலும் மொழியை யாரும் கதைக்காவிடின் அந்த மொழித் திறன் வரவே வராது.

மனிதர்களுக்கு இயற்கையாகவே இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, கிறிஸ்தவராகவோ வரும் 'வல்லமை' உள்ளதா என அறிய, அக்பர் சக்கரவர்த்தி சில குழந்தைகளைப் பிறந்தவுடன் எந்தவொரு மனிதத் தொடர்பும் இல்லாமல், ஒரு மௌனமான வளர்ப்புத் தாயாரால் மட்டும் அவர்களின் மற்றைய அத்தியாவசியத் தேவைகளைக் கவனிக்க அனுமதியளித்தாராம். அக்பர் சக்கரவர்த்திக்குக் கிடைத்ததெல்லாம் ஊமையான மனிதர்களே.
கீழ் வரும் காணொளியில் Patricia Kuhl எனும் ஆய்வாளர் குழந்தைகளுக்கு இருக்கும் ஆச்சரியமான மொழிகளைக் கற்கும் திறனை அவர்கள் செய்த ஆய்வுகளினூடு விளக்குகின்றார். குழந்தைகள் tv, radio இல் கேட்டு மொழியை அறிவதைவிட மனிதர்களிலிருந்தே மிக அதிகமாக கற்கிறார்களென்றும், பிறந்த முதல் வருடத்திலேயே வெவ்வேறு மொழிகளைப் பிரித்தரியக்கூடிய குழந்தைகளின் வல்லமையையும் காட்டுகின்றார். பிறந்த குழந்தைகளுக்கு எம்முடன் communicate பண்ணத்தெரியாவிடினும் எம்மிடமிருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே உள்ளனர். குழந்தைகளிடம் இயலுமானவரை கதைப்பது மிக மிக அவசியம்.

எம்மாதிரி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் குழந்தைகளுக்கு தமிழ்த்திறனை வளார்க்க, பிறந்ததிலிருந்தே குழந்தைகளுடன் வீடுகளில் தமிழில் மட்டுமே எந்தளவு முடியுமோ அந்தளவிற்குக் கதைப்பதன் அவசியத்தையும் இது விளக்குகிறது.


Tuesday, February 22, 2011

அம்புலிமாமா

அம்புலிமாமா ப‌ழைய‌ ப‌திப்புக‌ளை இணையத்தில் பார்த்தவுடன் மகிழ்ச்சி. தமிழ் புத்தகங்கள் 1947 முதல் 2005 வரை கிடைக்கின்றன. தமிழ், ஆங்கிலம், கன்னட, மலையாளம், பெங்காலி, மராட்டி, ஒரியா போன்ற முக்கிய மொழிகள் அனைத்திலும் கிடைக்கின்றன. எனக்குத் தான் இது புதிய தகவலா என்று தெரியவில்லை. என் பால்யத்தில் முக்கிய இடம் கண்டிப்பாக அம்புலிமாமாவுக்கு உண்டு. http://www.chandamama.com/archive/storyArchive.htm வில் அனைத்து பழைய எடிசன்கள் உள்ளன. விளம்பரங்களும் தனியாக உள்ளன.

இது என் ப்ளாகில் எழுதிய‌து

Friday, December 31, 2010

Happy New Year 2011 :-)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....


Sunday, December 19, 2010

மகனே லட்சுமணா !...

ஆராயாத செய்கையும் அவகாச அழுகையும் : (சிறுகதை - Moral story )

ஒரு ஊரில் ஒரு அந்தணர் இருந்தாராம்,அவருக்கு பல வருடங்களாக குழந்தையே இல்லாமலிருந்ததால் அவரும் அவரது மனைவியான லக்ஷ்மியும் போகாத சேத்திரங்கள் இல்லை வேண்டாத தெய்வங்கள் இல்லை. ஒரு குழந்தைக்காக பல காலம் தவமிருந்தனர் .ஆனாலும் அவர்களது அழகான் வீட்டில் குழந்தை இல்லாத நிலையே தொடர்ந்து நீடித்தது ,

இந்த சந்தர்பத்தில் ஒரு நாள் வயலுக்குப் போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தணர் தான் வந்து கொண்டிருந்த பாதையோரம் ஒரு கீரிப்பிள்ளை பாம்புடன் சண்டையிட்ட காயங்களோடு துவண்டு கிடப்பதைக் காண்கிறார். அந்த கீரிப்பிள்ளைக்கு மனமிரங்கி "ஐயோ பாவம் சின்னஞ்சிறு ஜீவன் ...இதன்காயதிற்கு மருந்திடா விட்டால் அது இறந்து போகக் கூடும் என்றெண்ணி " தன வீட்டுக்கு அதை தூக்கி வந்து அதன் காயங்களுக்கு பச்சிலை வைத்துக் கட்டி போஷிக்கிறார்.

நாட்கள் நகர்கின்றன. பிள்ளையில்லாத வீட்டில் கீரி பிள்ளை ஆனது,துள்ளி விளையாடியது .அந்தணரும் அவரது மனைவியும் கீரிக்கு லட்சுமணன் என்று ஆசை ஆசையாய் பெயரெல்லாம் சூட்டி வளர்த்து வந்தனர். அவர்கள் குழந்தை வரம் வேண்டி எங்கு சென்றாலும் இப்போது கீரிப்பிள்ளையும் உடன் சென்றது சேத்ராடனங்களுக்கெல்லாம். அந்தணர் வயலுக்குப் போனால் லக்ஷ்மிக்கு துணையாய் வீட்டில் இருந்து கொண்டது கீரிப்பிள்ளை.

பழகப் பழக உற்ற துணையாய் அந்த தம்பதிகளின் வாழ்வில் சின்னதாய் ஒரு சுவாரசியம் சேர்த்துக் கொண்டிருந்தது அந்த கீரிப்பிள்ளை.
லட்ச்சுமணா என்றழைத்து விட்டால் போதும் கீரி எங்கிருந்தாலும் தலை நீட்டி எட்டிப்பார்க்கும் அந்த அளவுக்கு அந்தணர் அதை பாசமும் பரிவுமாய் பழக்கி வைத்திருந்தார்.

வராது வந்த மாமணி போல கிருஷ்ணனின் சமந்தக மணி போல இந்த அந்தண தம்பதிகள் செய்த சேத்ராட னங்களின் பலனோ இல்லை கீரி வீட்டுக்குள் நுழைந்த சுபயோக புண்யமோ மிக நீண்ட காத்திருப்பின் பலனாக அந்தணரின் மனைவி லக்ஷ்மி ஒருநாளில் கர்பவதி ஆனார்.

பத்து திங்கள் கழிந்த பின் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.பல புண்ய ஸ்தலங்களுக்கு கால் தேய நடையாய் நடந்ததன் பலனாகப் பிறந்த குழந்தை என்று எண்ணியதால் அந்தணரும் அவரது மனைவியும் அந்தக் குழந்தையின் மீது தங்களது உயிரை வைத்தனர்.

கீரிப்பிள்ளை அந்தக் குழந்தைக்கு அண்ணனானது.

அக்கம் பக்க வீடுகளில் இருந்தோறேல்லாம் ,

"இதுநாள் வரையிலும் நீங்கள் கீரிப் பிள்ளை வளர்த்ததெல்லாம் சரி தான் ,இனி அதை காட்டில் விட்டு விடுங்கள்,கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி ஒரு காட்டு விலங்கை எல்லாம் போஷித்து வருவது அத்தனை உசிதமானதல்ல,கீரிப் பிள்ளை பாம்பையே எதிர்த்து சண்டையிட்டு வெல்லக் கூடியது,என்ன தான் வீட்டில் வைத்து வளர்த்தாலும் அதன் புத்தி மாறி விடுமா?! "

என்று அந்தண தம்பதிகளை குழப்பவாரம்பித்தனர்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளர்ந்தது ஒரு கோடைநாளில் அதற்கு ஒரு வயது முடியுந் தருவாயில் அதிகாலையில் அந்தணர் வழக்கம் போல தன குழந்தையைக் கொஞ்சி விட்டு வயலுக்குப் போகிறார்.அவரது மனைவி தன் குழந்தைக்கு அமுதூட்டி அது தூங்கியதும் தொட்டிலில் கிடத்தி விட்டு வழக்கம் போல குடிக்க தண்ணீர் சேந்தி வர அருகாமைக்கிணற்றுக்குப் போகிறார்.

வழியில் அண்டை அசலில் குழந்தை எங்கே என்று விசாரித்தவர்களிடம் எல்லாம் ;
"அவன் தூங்குகிறான்,அவனது அண்ணன் லட்சுமணன் அவனுக்கு காவலிருக்கிறான் " என்று சொல்லியவாறு செல்கிறார் அந்த அம்மாள்.

பெரிய காவல் தான் என்று முகவாயில் கை வைத்து அதிசயித்துக் கொண்டார்கள் அந்த அண்டை அசலார் அனைவரும்.

இந்தம்மால் வீடு வந்து சேரும்முன்னே வயலுக்குப் போன அந்தணர் காலை போஜனத்துக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பாதையில் முன் போலவே ஒரு கீரியைப் பார்கிறார். வெறும் கீரியை மாத்திரம் அல்ல ,இந்தக் கீரி ஒரு பாம்புடன் படு ஆக்ரோஷமாக சண்டையிடுவதைப் பார்க்க நேர்கிறது அவருக்கு.

வீரியமிக்க அந்தச் சண்டையில் கீரி ஜெயிக்கிறது,வாயெல்லாம் ரத்தக் கரையோடு பாம்பைக் கொன்று விட்டு தலை தூக்கிப் பார்த்த அந்தக் கீரியை கண்டதும் அந்தணரும் மெல்லிய மனம் ரத்தம் கண்ட பயத்தில் சட்டென்று துணுக்குற்றுப் போகிறது .

"என் லட்சுமணன் இத்தனை பயங்கரமான கீரி இல்லை, அவன் வீட்டுக் கீரி அவனுக்கு இத்தனை ஆக்ரோஷம் எல்லாம் இருக்க சாத்தியமில்லை"
என்று தன் மனதுக்குள் பலவாறு சமாதானம் சொல்லிக் கொண்டே பார்வை தழைத்துக் கொண்டு விடு விடுவென தனது வீட்டுக்கு நடையை எட்டிப் போடுகிறார் அந்த அந்தணர்.

வேக வேகமாய் வீட்டுக்குள் நுழைந்த அந்தணரின் கண்ணில் பட்ட முதல் காட்சி ...

குழந்தையின் தொட்டில் மீது வாயெல்லாம் ரத்தக் கறை படிந்து போன கீரிப்பிள்ளை லட்சுமணனின் முகம் தான்.

வழியில் கண்ட கீரி பாம்புச் சண்டையால் மனதை அலைக்கழித்த சில நிமிட பயம் மூளைக்கு ஏற அந்தணர் அதீத உணர்வுக்கு ஆட்பட்டு சுவற்றில் அலங்காரத்துக்கு சாற்றி வைத்த வாளை கண்ணிமைக்கும் நேரத்தில் உருவி எடுத்தார் தொட்டில் ஊஞ்சல் கட்டையில் அமர்ந்திருந்த லட்சுமணனை இரண்டு ஒரே போடில் துண்டுகளாகப் பிளந்தார்.

தன் எஜமானன் ... தகப்பன் ஸ்தானம் அளித்த ஆருயிர் அந்தணரின் அற்புத வாள் வீச்சில் திக்கித்து உறைந்த கண்களோடு உயிர் விட்டது கீரி.

" நீயோ என்னைக் கொன்றது !?"

தண்ணீர் குடத்தோடு வீட்டுக்குள் நுழைந்த லக்ஷ்மி அம்மாள் நிகழ்ந்த சம்பத்தில் அதிர்ந்து குடத்தை நழுவ விட்டார்.மண்குடம் உடைந்து சிதறியது நீர் வழிய வழிய....;

என்ன காரியம் செய்தீரோ என் அருமை கணவரே!

அந்தணர் பேசவில்லை அவர் ... கண்கள் பேசின ;

"ஒழிந்தாய் காட்டுக் கீர்ரியே என் குழந்தையையா கடித்தாய்! " தாவி ஓடிப் போய் தொட்டிலில் கிடந்த குழந்தையை அள்ளி எடுத்தார். தகப்பன் வாடை கண்டு மெல்லச் சிணுங்கி விழித்த குழந்தை முக மலர்ந்து சிரிக்கவும் உச்சந்தலையில் இடி விழுந்தது அந்தணருக்கு.

குழந்தைக்கு ஒன்றுமில்லையா!

அப்படியானால் லட்சுமணன்! பாதையில் கண்ட கீரி நீயோ! என் குழந்தையின் பொருட்டு உன் உயிரை மதியாது அத்தனை வீரியமாய் சண்டையிட்டது நீயே தானா!

ஐயோ லட்சுமணா....என் மகனே! உன்னை நான் கொன்றேனே!
அலறித் துடித்தார் அந்தணர்.

"ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வதுண்டோ!"

மாரல் ஃஆப் தி ஸ்டோரி :

ஆராயாது ஒரு விஷயத்தை செய்து விட்டு,அதன் பலனை எண்ணி அவகாசத்தில் அழுது கொண்டே இருப்பது நல்லதல்ல,எந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன்பே ஒன்றுக்கு இருமுறை யோசித்தே செய்தல் நலம்.

கருத்துகள் இல்லை: