இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மக்கள் திலகம்...

சட்டசபை
தேர்தலில் அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெற்று, தமிழக முதல்வராக, ஜூலை 30,
1977 -இல் பதவி ஏற்றார் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் சரித்திரத்தில் புதிய
சகாப்தம் உருவான நாள் அது. அண்ணா சமாதியில் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு
விழாவுக்கு வந்தார். தமிழக கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி, சென்னை ராஜாஜி
ஹாலில் எம்.ஜி.ஆருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதை
அடுத்து, அதுவரை தமிழகத்தில் எந்த முதல்வரும் செய்திராத சாதனையை செய்தார்
எம்.ஜி.ஆர். பல லட்சக்கணக்கான மக்களை ஒருங்கே சந்தித்து, அவர்களுக்கு நன்றி
கூறி, அவர்களின் நல் ஆசியுடன் தன் ஆட்சியை ஆரம்பித்தார்.
ராஜாஜி
ஹால் நிகழ்ச்சியை அடுத்து, அண்ணா சாலையில், அண்ணாதுரை சிலைக்கு மாலை
அணிவித்து, அருகே அமைக்கப்பட்டிருந்த பெரிய மேடைக்கு வந்தார். பதவி
ஏற்றதுமே, மக்களைச் சந்திக்கவேண்டும், அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்
என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார் எம்.ஜி.ஆர்.
அமைச்சர்கள்,
எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் அங்கே
இருந்தனர். தமிழகமெங்கும் இருந்து மக்கள் பலர் லாரி, வேன் பிடித்து சென்னை
வந்து சேர்ந்தனர்.
பெரும்பான்மையினர்
எம்.ஜி.ஆரை நேரில் பார்க்க முடியாத நிலைமை இருந்தாலும், அவர் பேசுவதை
நன்றாக கேட்கும் வகையில் மைக் ஏற்பாடுகள் எல்லா இடங்களிலும் சிறப்பாக
செய்யப்பட்டிருந்தன. பேச ஆரம்பிப்பதற்கு முன்னர், மேடையின் எல்லா
பக்கங்களுக்கும் சென்று, மக்களைப் பார்த்து கை அசைத்தார். அவர் கை
அசைத்ததும், விசில் சத்தம், கை தட்டல், ஆரவாரம் பல நிமிடங்கள் தொடர்ந்து
வானை பிளந்தன.
குறைந்தபட்சம்
என்று கணக்கெடுத்தாலும் பத்து லட்சம் பேருக்கு அதிகமாக இருக்கும் தார்
ரோடுகளிலும் கட்டிடங்கள் மேலேயும், மரங்களிலும், தரையிலும்
எங்கிருந்தெல்லாம் எம்.ஜி.ஆரை அன்று பார்க்க முடியுமோ, அவர் பேசுவதை கேட்க
முடியுமோ, அங்கெல்லாம் வேறு எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாது மக்கள்,
எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருந்தார்கள்.
'மதிப்பிற்கும்
பாசத்திற்கும் உரிய தமிழக அமைச்சர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, சட்டசபை
அங்கத்தினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே' என்று எம்.ஜி.ஆர் பேச
ஆரம்பித்தார். அடுத்து 'என் ரத்தத்தின் ரத்தமான என் அன்பு
உடன்பிறப்புக்களே' என்று எம்.ஜி.ஆர் சொன்னதும் மீண்டும் கரகோஷம் விண்ணைத்
தொட்டன. எங்கும் மகிழ்ச்சி, எங்கும் ஆரவாரம்.
கே.ராஜாராம்,
காளிமுத்து, ராஜா முகமது, பி.டி.சரஸ்வதி, அரங்கநாயகம், ராகவானந்தம்,
நாஞ்சில் சம்பத், எட்மன்ட் உட்பட அனைத்து அமைச்சர்களும், எம்.ஜி.ஆரின்
பர்சனல் டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் அங்கு இருந்தார்கள்.
மேடையில்,
'இந்த வெற்றி என் வெற்றி இல்லை; இது உங்கள் வெற்றி. நான் உங்களில் ஒருவன்;
உங்களுக்காகவே பாடுபடுவேன். இது உங்கள் ஆட்சி; மக்கள் ஆட்சி. மக்களுக்கு
செய்கிற தொண்டே, மகேசனுக்கு, ஆண்டவனுக்கு செய்கிற தொண்டு என்று நான்
நம்புகிறேன். தமிழகமும், தமிழக மக்களும் செழிப்பாக இருக்க வேண்டும்; அது
தான் என் லட்சியம். என் லட்சியத்தில் நான் வெற்றி பெற, உங்களுடைய ஆசிகளை
வேண்டுகிறேன்...' என்று பேசினார் எம்.ஜி.ஆர்.
மக்களின் பெருத்த ஆரவாரத்தின் இடையே அவர்
பேசிக்கொண்டு இருந்தார். அவ்வளவு மக்கள் பாசத்துடன், அன்புடன் அவரைப்
பார்க்க, பேசுவதை கேட்க கூடி இருந்தது எம்.ஜி.ஆர் வாழ்க்கையிலேயே அவருக்கே
மறக்க முடியாத நாள் என்றே நான் சொல்வேன்.
மக்களுக்கு
நன்றி சொல்லிவிட்டு, முதல்வர் பதவியை ஏற்க முதல்முறையாக அங்கிருந்து,
தமிழக அரசின் நிர்வாக மையமும், தலைமைச் செயலகமான கோட்டைக்குச் சென்றார்
எம்.ஜி.ஆர். தன் அறையில், சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை சந்தித்து நிர்வாகம்
பற்றி பேசிக் கொண்டிருந்தார். மாலை நான்கு மணிக்குத் தான் வீட்டுக்கு
திரும்பினார்.
தமிழகத்தின்
முதல்வராக மூன்றாம் முறையாக எம்.ஜி.ஆர் பதவி ஏற்ற நிகழ்ச்சியும், அதற்க்கு
சில தினங்களுக்கு முன் பரங்கிமலையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.ஜி.ஆர்
கலந்து கொண்டதும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள்...
அமெரிக்காவின்
நியூயார்க் நகரில் ப்ரூக்ளின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, Feb 1985
இல் சென்னை திரும்பினார் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆர் உடல்நிலை பற்றி
தவறான வதந்திகள் பரவி கொண்டிருந்த நேரம்.
அமெரிக்காவிலிருந்து
திரும்பியதும், ஒரு பொதுக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்கிறார்
என்று அறிந்ததும், பல மாதங்களாக அவரை பார்க்க முடியாத மக்கள், தமிழகம்
முழுவதும் இருந்து பஸ், லாரி, வேன் பிடித்து வந்துவிட்டனர். சென்னை
பரங்கிமலையில், இந்திய ராணுவத்திற்கு சொந்தமான மிகப்பெரிய மைதானத்தில்,
பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஆர்வத்தோடு கூடியிருந்தனர்.
அவரால்
நடக்க முடியாது; கை, கால்கள் செயலிழந்து விட்டன என்றெல்லாம் அவரது அரசியல்
எதிரிகள் புரளிகளை கிளப்பிவிட்டிருந்த நேரம் அது. விமானம் வந்து
நின்றதும், தானே விமானப் படிகளில் யார் துணையும் இன்றி இறங்கி வந்தார்.
அவர் முழு பொலிவுடன், சிரித்த முகமாக விமான படிகளில் இறங்கி வந்த காட்சி
இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.
விமான
நிலையத்திலிருந்து நேராக மிலிட்டரி மைதானத்திற்கு எம்.ஜி.ஆரும், அவரது
துணைவி ஜானகியும் காரில் வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு
செல்லும் படிகளில் எப்போதும் போல வேகமாக ஓடி ஏறினார். அவர் நன்றாக
இருக்கிறார், உடல் வலிமையோடு இருக்கிறார் என்பதையெல்லாம் பார்த்ததும்
அங்கிருந்த லட்சக்கணக்கான மக்கள் மிகவும் உற்சாகமாயினர்.
புரட்சித்தலைவரின் மனிதநேயம்:
1977
இல் எம்.ஜி.ஆர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகப்
பதவி ஏற்றிருந்த சமயம். எம்.ஜி.ஆருக்கு எல்லா மட்டங்களிலும் ரசிகர்கள்
உண்டு. எம்.ஜி.ஆரின் உயர்மட்ட விசிறிகளில் குறிப்பிடத்தக்கவர் கர்நாடக
மாநிலத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த
குண்டுராவ்.
பெங்களூரில்
உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று குண்டுராவ் எப்போதும்
அழைத்துக்கொண்டே இருப்பார். குண்டுராவின் பிறந்த நாளன்று, பெங்களூருக்கு
நேரில் சென்று, அவரை வாழ்த்தவேண்டும் என்று முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.
பிற்பகலில்
TMX 4777 என்ற எண்ணுள்ள பச்சை அம்பாசிடர் காரில் கிளம்பினார் எம்.ஜி.ஆர்.
அவருடன், அவரது மனைவி ஜானகி அம்மா, ஜானகி அம்மாவின் சகோதரர் நாராயணனின்
மகள் லதா இருவரும் வந்தனர். மற்றொரு வேனில் நாங்கள் அவர் வண்டியை
பின்தொடர்ந்தோம்.
பெங்களூரை
அடைந்ததும் எம்.ஜி.ஆரும், அவரது குடும்பத்தினரும் அங்கு 'வெஸ்ட் எண்ட்'
என்கிற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். நாங்கள் அதற்க்கு அருகே வேறொரு
ஹோட்டலில் தங்கினோம்.
மறுநாள்
காலை ஒன்பது மணிக்கு கர்நாடக முதல்வர் குண்டுராவ் வீட்டுக்கு சென்றோம்.
பெரிய பார்சல் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின்
உதவியாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பரமசிவம், செக்யுரிட்டி ஆபிசர் கண்ணுசாமி உடன்
இருந்தனர். பால் பாயாசத்தோடு எங்கள் அனைவருக்கும் நன்றாக சைவ சாப்பாடு
அளிக்கப்பட்டது. சாஷ்டாங்கமாக எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து நமஸ்கரித்தார்
குண்டு ராவ். அவரை மனதார வாழ்த்தினார் எம்.ஜி.ஆர்.
பத்து
மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினோம். அப்போது எம்.ஜி.ஆர் தான் வரும்
அம்பாசிடர் காரில் என்னை வரச் சொன்னார். 11 மணிக்கு மேல் ஓசூர் வரும்போது
நல்ல வெயில். காரில் பயணம் செய்யும்போது எம்.கே.தியாகராஜ பாகவதர் படிய
பாடல்களை எப்போதும் ரசித்துக் கேட்பார் எம்.ஜி.ஆர்.
ஓசூர்
தாண்டியிருப்போம். இடது பக்கம் நெடுஞ்சாலை ஓரத்தில் வயதான கிழவி மற்றும்
பத்து வயது சிறுமி இருவரும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறே காலில்
செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் நடந்து,
பிறகு வெயிலுக்காக ஓரமாக நின்று மீண்டும் நடை.
'ராமசாமி,
காரை நிப்பாட்டு...' என்று டிரைவர் ராமசாமியிடம் சொன்னார் எம்.ஜி.ஆர்.
'ராமு, போய் அவங்களை விசாரித்துவிட்டு வா...' என்றார் என்னிடம்.
ராமகிருஷ்ணன் என்ற என் பெயரை பல நேரத்தில் 'ராமு' என்று சுருக்கியே அவர்
கூப்பிடுவார்.
'கால்
சுடுதய்யா நிற்கிறோம்...' என்றார் அந்தக் கிழவி. 'தூரத்திலிருந்து புல்லை
அறுத்து, கட்டி சுமந்து சென்று விற்றால் தலைச்சுமைக்கு பன்னிரெண்டு அணா
கிடைக்கும்...' என்றார். எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.
தன்
மனைவி ஜானகி அம்மா, லதா இருவரிடம் அவர்கள் அணிந்திருந்த செருப்புகளைக்
கழற்றச் சொன்னார். காரில் பயணம் செய்யும்போது எப்போதும் ஒரு கருப்பு
பேட்டியில் பணம் வைத்திருப்பார். அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து,
'அவர்களிடம் கொடு...' என்றார்.
இரு
ஜோடி செருப்புகளையும் எடுத்துக் கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்து,
எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னார் என்று ஆயிரம் ரூபாயையும் கொடுத்தேன்.
அப்படியே நெகிழ்ந்து போயினர். எதிர்பாராமல் பணம் கிடைத்ததில் அவர்களுக்கு
ஒன்றுமே புரியவில்லை. நன்றிகூட சொல்லாமல் அப்படியே நின்றனர்.
காரின் கண்ணாடியை இறக்கி வணக்கம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம்.
தன்னிடம்
உதவி கேட்டவருக்கு மட்டும் என்று இல்லாமல், உதவி கேட்காதவர்களுக்கும்
குறிப்பறிந்து உதவி செய்வதுதான் எம்.ஜி.ஆரின் குணம். இந்த மனிதநேயம் தான்
அவரை உயரத்தில் வைத்தது. தனக்கு உதவியவர் தமிழக முதல்வர் என்று அந்த
கிழவிக்குத் தெரியுமா, தெரியாதா? எனக்குத் தெரியவில்லை. எந்தப் பிரதிபலனும்
பாராமல் செய்யப்பட்ட மனிதநேய செயல் அது.
தகவல்களுக்கு நன்றி: 'எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்', விகடன் பிரசுரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக