புதன், ஜனவரி 04, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


தனுசின் கொலைவெறியும், தமிழ் உணர்வும்...
http://eppoodi.blogspot.com/2012/01/blog-post.html





பிரபலமான ஒருவரது அல்லது ஒன்றினது வெற்றியை, வளர்ச்சியை விமர்சிப்பது ஒன்றும் கடினமான விடயமில்லை!!! எதிர்மறையாக விமர்சிக்கப்படாத எந்த பிரபலத்தையோ, அல்லது படைப்பையோ காட்ட முடியாது. இதைத்தான் தமிழில் "காய்த்த மரம்தான் கல்லடி படும்" என்று அழகாக சொல்வார்கள். அதிகமான எதிர்மறை விமர்சனங்கள் பொறாமை, ஆற்றாமை, தமக்கு பெருமையை தேடும் எண்ணம் போன்றவற்றாலேயே உருவாகின்றன. அந்தவகையில் தற்போது பிரபலாமாகி எதிர்மறை விமர்சனங்களை வாங்கிக் கட்டியிருக்கும் படைப்புத்தான் 'கொலைவெறி'பாடல்.

'கொலைவெறி'யின் வெற்றி உலகம் முழுவதும் பரவ பரவ உள்ளூரிலே பல வயிறுகளும் கருகத்தொடங்கின. கொலைவெறியை விமர்சிக்க நமது வயித்தெரிச்சல் சாமானியர்களும் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள அடுத்தவனை எதிர்மறையாக விமர்சிக்கும் அறிவு ஜீவிகளும் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் 'தமிழ்க்கொலை'. தமிழை வைத்து அரசியல்வாதிகளும், சினிமா நடிகர்களும், இயக்குனர்களும் செய்யும் அட்டகாசம்தான் தாங்க முடியவில்லை என்றால்; இப்போது சமூக தளங்களில் தங்களை தமிழ் உணர்வாளர்களாக காட்டிக்கொள்ள எத்தனிக்கும் இளசுகளின் உணர்வுகளும் பொங்குகின்றன. ஒரு விடயத்தை ஆதரிக்க ஏற்படாத தமிழ் உணர்வு, ஒன்றை எதிர்க்கும்போது மட்டும் எப்படி பீறிடுகின்றது என்பதுதான் புரியவில்லை!!!!!

தனுஷ் 'கொலைவெறி' பாடல் மூலம் தமிழை கொலை செய்துவிட்டார்; தமிழ் உணர்வாளர்கள் இரத்தத்தை கொதிப்படைய செய்திருக்கும் நிகழ்வு இதுதான்!! பாடலை உருவாக்கியவர்களே என்ன நடந்தது என்று சுதாகரிக்கும் முன்பே பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகிய நிலையில் பாடலை தமிழுக்கு எதிராக திட்டமிட்டே உருவாக்கியது போன்று சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்கிடமானவை. குறிப்பட்ட 'கொலைவெறி' பாடல் உலக மக்களை குறிவைத்து சர்வதேசரீதியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பாடல் அல்ல. இந்தப்பாடல் இந்தளவிற்கு பிரபலமாகும் என்பதை கனவிக்கூட அதை உருவாக்கியவர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு பெண்ணால் பாதிக்கப்பட ஆண் பெண்களை கிண்டல் செய்யும் ஒரு சாதாரண பொழுதுபோக்கு பாடலாக உருவாக்கப்பட்ட 'கொலைவெறி' பாடலில் ஒருசில வார்த்தைகள் தவிர்த்து மிகுதி அனைத்துமே ஆங்கில சொற்கள்தான்; இதுதான் பிரச்சனையே!!!!!

திரைப்பாடல்களில் ஆங்கில சொல்லாடல் இருப்பது தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல!!!! எத்தனையோ பாடல்களை எம்.எஸ்.வி, இளையராஜா, ரகுமான் போன்றோர் ஆங்கில சொற்களால் சரணம் போட்டு ஆரம்பித்திருக்கின்றார்கள்; அப்போதெல்லாம் எங்கே போனது இவர்களது தமிழ் உணர்வு என்று தெரியவில்லை!!! இன்று 'கொலைவெறி' பாடலால் தமிழ் கொலை செய்யப்பட்டதாக கூக்குரல் போடுபவர்கள் இதே பாடல் பத்தோடு பதினொன்றாக போயிருந்தால் இதே கூக்குரலை எழுப்பியிருப்பர்களா? நிச்சயமாக இல்லை; எமக்கு வெற்றியைத் தானே எதிர்மறையாக விமர்சித்துப் பழக்கம்!!!

யாரோ கவிஞர்களும் 'கொலைவெறி' பாடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்களாம்!! அண்ணன் விவேகா எழுதிய "டாடி மம்மி வீட்டில் இல்லை", அண்ணன் சினேகன் எழுதிய "கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" பாடல்களுக்கு கொலைவெறி எவளவோ பரவாயில்லை; அந்தப் பாடல்கள் ஒருவேளை 'கொலைவேறி' போல பிரபலமாகி அதன் அர்த்தத்தை சர்வதேசமூகம் தெரிந்து கொண்டிருந்தால் தமிழ் கலாச்சாரத்தை காறி துப்பியிருக்காதா? சரி, இதுவரை 10,000 க்கும் மேற்ப்பட்ட தமிழ்ப்பாடல்கள் வெளிவந்துள்ளன; ஏன் அந்தப்பாடல்கள் எவையுமே 'கொலைவெறி' போல பிரபல்யம் ஆகவில்லை?

காரணம் கொலைவெறியில் இருந்த ஆங்கில சொற்கள்தான்; அதிலும் மிகவும் இலகுவான இலக்கண கோர்வையில்லாத எளிய ஆங்கில சொற்கள்தான்; அதனால்த்தான் ஆங்கிலம் ஓரளவு தெரிந்த நபர்களாலும் கொலைவெறி உச்சரிக்கப்படுகின்றது, ஆங்கிலம் பேசாத ஜப்பானிலும் பாடல் பிரபலமாகியது. இந்தப்பாடல் ஒருவேளை இதே மெட்டில் தமிழ் வார்த்தைகளால் நிரப்பப்பட்டிருந்தால் தமிழ் மக்களைத் தாண்டி அயல் மாநிலம்வரை சென்றிருக்கவே வாய்ப்பில்லை. பாடலில் தமிழ் இருக்கின்றதோ இல்லையோ, இன்று உலகம் முழுவதும் 'கொலைவெறி' பிரபல்யம் ஆகியிருக்கின்றது; கொலைவெறியை அனைவரும் 'தமிழ் திரைப்பட' பாடலாகவே அறிகின்றார்கள்; குறைந்தபட்சம் மூன்று நான்கு தமிழ்ச் சொற்களாவது உலகளவில் அறியப்பட்டுள்ளதே!!!!

எனக்கும் முழுவதும் தமிழில் எழுதப்பட்ட பாடல் உலகம் முழுவதும் பிரபலம் ஆகவேண்டும் என்று விருப்பம்தான், அதற்க்கு முதல்ப்படியாக மூன்று நான்கு சொற்க்களிலாவது ஆங்கிலத்தோடு கலந்து உலகிற்கு தமிழ் தெரியட்டுமே!!! தமிழ்ப் பாடல்களின் உலகளாவிய தாக்கத்தின் ஆரம்பமாக 'கொலைவெறி' அமைந்துள்ளது என்பதை மறக்க முடியுமா? இன்றைக்கும் தையத்தக்க என்று குதிப்பவர்கள் நாளை முழுவதுமாக தமிழ் சொற்களாலான பாடல்களை உருவாக்கி உலகளாவிய ரீதியில் எடுத்துச் செல்லாலாமே! எதற்குமே ஒரு ஆரம்பம் வேண்டும், 'கொலைவெறி' அந்த ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

'கொலைவெறியை பார்த்து இனிவரும் காலங்களில் பல தமிழ்ப் பாடல்கள் உருவாகும் சாத்தியமும் உண்டு, எனவே தமிழ் பாடல்களில் ஆங்கிலம் அதிகமாகும் வாய்ப்புள்ளது; அதற்க்கு கொலைவெறி முன்னுதாரணமாகி விடப்போகின்றது' என்பது சிலரது கவலை. மீண்டும் சொல்கிறேன் 'கொலைவெறி' பாடல் இந்தளவுக்கு பிரபலமாகும், பலருக்கும் முன்னுதாரணமாகும் என எண்ணி உருவாக்கப்பட்டதல்ல, இது தற்செயலான அதிஸ்டவசமான வெற்றி. அடுத்துவரும் பாடல்களை இதேபாணியில் உருவாக்க வேண்டாமென்று எதிர்கால படைப்பாளிகளை கோருவதை விடுத்து உருவாகி தற்செயலாக வெற்றிபெற்ற பாடலை குத்தி குதறுவதில் என்ன பலன்!!!

பாடலை தமிழில் எழுதவில்லை என 'தமிழ்க்கொலை' பட்டத்தை தனுசிற்கு கொடுத்தவர்கள் அனைவரும் தமிழின காவலர்களா? ஒரு வெற்றிபெற்ற படைப்பில் தமிழை காரணமாக காட்டி குறைகூறும் நீங்கள் எத்தனையோ சிறந்த தமிழ் பாடல்கள் காணமல் போகும்போதெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? தற்போதுகூட 'முப்பொழுதும் உன் கற்பனையில்' திரைப்படத்தில் 'கண்கள் நீயே' எனும் ஒரு தாய் தன் பிள்ளைக்கு பாடும் பாடல் மிகச்சிறந்த வார்த்தைகளில் உருவாகியுள்ளதே, அதை எத்தனை தமிழ்க் காவலர்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்? தேசியவிருதுகி கிடைக்கும்வரை தென்மேற்கு 'பருவக்காற்று' திரைப்படத்தின் 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே' பாடல் எத்தனை தமிழ் உணர்வாளர்களுக்கு தெரியும்?

தன்னால் தன் மொழிக்கு பெருமை சேர்ப்பவன்தான் உண்மையான மொழிப்பற்றாளன், தன் மொழியால் தனக்கு பிரபல்யம் சேர்ப்பவன் அல்ல!!! எம்மில் இன்று பலர் இரண்டாவதையே சீரும் சிறப்புமாக செய்கின்றார்கள்; அதிலும் அடுத்தவனை விமர்சித்து, தூற்றி, கேவலப்படுத்தி தமிழ்மொழி கொண்டு தம்மை முன்னிறுத்தவே எத்தணிக்கின்றார்கள்; காரணம் இந்தவழி இலகுவானது. குற்றம் கண்டு பிடிப்பது, அதைவைத்து எதிர்மறையாக விமர்சிப்பது என்பது மிகச்சுலபமான விடயம்; கொலைவெறிக்கும் இன்று அதே நிலைதான். 'ழ'கரத்தையே உச்சரிக்க தெரியாத கூட்டமெல்லாம் தமிழுக்கு காவலுக்கு வருவது சந்தானம் 'பாஸ் என்கின்ற பாஸ்கரனில்' சொன்ன "பன்னிக்குட்டி எல்லாம் பஞ்சு டயலாக் பேசுதடா" வசனத்தை நினைவுபடுத்துகின்றது.

கொலைவெறி பாடலின் மெட்டிலேயே கொலைவெறி பாடலை கேவலப்படுத்தி தமிழ் உணர்வை சித்தரித்து தூய தமிழில் யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள ஒரு வீடியோ சமூகத்தளங்களில் தற்போது அதிகம் உலாவுகின்றது. நம் பசங்களுக்கும் உடனே தமிழ் பற்று வந்துவிட அதை தமது பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். 'கொலைவெறி' பாடலை உருவாக்கியவர்களை கேவலப்படுத்தக்கூட அவர்களுக்கு அதே மெட்டுத்தான் தேவைப்பட்டிருக்கின்றது!!! புதிதாக தமிழில் எழுதிய மொழிப்பற்றாளருக்கு எதுக்கு 'கொலைவெறி' மெட்டு? புதிதாக ஒரு மெட்டை போட்டிருக்கலாமே?? பாரதி பாடல்கள், சிறந்த எத்தனையோ தமிழ்ப் பாடல்களின் மெட்டில் சொல்லியிருக்கலாமே? கொலைவெறி பாடல் ஹிட் ஆகாமல் பத்தோடு பதினொன்றாக போயிருந்தால் இந்த பாடல் உருவாகியிருக்குமா? தோல்விகள் எப்போதும் அநாதை, வெற்றிகள் இப்போது பொறாமை என்றாகிவிட்டது!!!

இந்த பாடலை உருவாக்கிய கனவான்களுக்கு எனது விண்ணப்பம் ஒன்றே ஒன்றுதான்; அடுத்தவன் வெற்றியில் தமிழுணர்வை தேடிப்பாக்காது எத்தனையோ பாரதி, கம்பன் பாடல்கள் உள்ளது அவற்றை தங்கள் புதிய மெட்டிட்டு செந்தமிழால் இவ்வையகம் முழுவதும் ஒலிக்கச் செய்யவேண்டும் என்பதுதான்!!! 'கொலைவெறி'யை ஒருவன் மோசமாக உருவாக்கியுள்ளான் என தாங்கள் உணர்ந்தால் ஏன் அதனுடன் மல்லுக்கட்டி தமிழை வீணடிக்கின்றீர்கள்? அந்த நேரத்தில் கொலைவெறியை விட பிரபல்யமாகும் வண்ணம் புதிய செந்தமிழ் பாடல் ஒன்றை உருவாக்கலாமே!!!!! சிறந்த படைப்புக்களை தமிழ் கொண்டு உருவாக்குங்கள், உங்களுக்கு தோள்கொடுக்க காத்திருக்கின்றேன்.......

நான் ஒன்றும் கொலைவெறி பாடலின் வெறியனுமல்ல, தனுசின் தீவிர ரசிகனுமல்ல; மயக்கம் என்ன, ஆடுகளம் தவிர்த்து இறுதி மூன்றாண்டுகளில் எந்த தனுஷ் திரைப்படத்தையும் முழுமையாக பார்த்ததில்லை. எனக்கு கொலைவெறி பாடல் ஆரம்பத்திலேயே கேட்பதற்கு நன்றாக இருந்தது, ஆனாலும் அதிக ஈடுபாடு இருந்ததில்லை; ஆனால் you tube இல் அதன் சாதனைகளை அறிய அறிய பாடலின்மீது ஈடுபாடு அதிகரித்தது. ஒரு தமிழ்த் திரைப்படப் பாடல் 30 மில்லியன் ஹிட்ஸ் பெறுவதென்பது சாதாரண விடயமல்ல;

தற்செயலோ அதிஸ்டமோ 'கொலைவெறிக்கு' அது அமைந்துவிட்டது. வட இந்தியா பாடலை கொண்டாடுகின்றது 'லண்டன் ஐ' யில் புதுவருட கொண்டாட்டங்களில் 'கொலைவெறி' பாடல் இசைக்கப்படது, ஜப்பானில் வானொலிகளில் இசைக்கப்படுகின்றது; இப்படியாக தமிழ்த் திரைப்பட பாடலாக 'கொலைவெறி'யின் சாதனைகள் எனக்கு மகிழ்ச்சியையே கொடுத்தன. பாடல் முழுவதும் தமிழ் வார்த்தைகளாக இருந்திருந்தால் இன்னமும் மகிழ்ந்திருப்பேன்; பரவாயில்லை அடுத்த தடவை ஒரு தமிழ்த்திரைப்பட பாடல் உலகம் முழுவதும் வெற்றிபெறும் போது அந்தப்பாடலாவது முழுவதும் தமிழ் வார்த்தைகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்பதே எனது அவா....

தத்துவம் நம்பர் 178324 :p

உருவாகியதில் குறைதேடாதே, அது உருவாக்கப்பட்டுவிட்டது;
உருவாக்குவதை குறையில்லாமல் உருவாக்க வழிசொல், அதுதான் உருவாகவுள்ளது.


தத்துவம் நம்பர் 178325 :p

உன்னால் முடிந்தால் தமிழுக்கு பெருமை சேர்;
தமிழ் கொண்டு உனக்கு பெருமை சேர்க்காதே!




You might also like:

கருத்துகள் இல்லை: