செவ்வாய், ஜனவரி 03, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

செப்டம்பர் 8, 2010

புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்)

by
நான் எழுதும் பதிவுகளில் பாதிக்கு மேல் புத்தகம் பற்றிதான். அதனால் புத்தகங்களுக்காக ஒரு தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நாளாக யோசனை. இன்று ஆரம்பித்துவிட்டேன்!
சிறந்த சிறுகதைகள், சிறந்த நாவல்கள் என்று இரண்டு ஸ்டிக்கி பதிவுகள் வைத்திருக்க யோசனை. படிக்கும்போது, நினைவு வரும்போது இந்தப் பதிவுகளில் சேர்த்துவிட எண்ணம்.
ஒரு ப்ளாகையே சமாளிக்கமுடியவில்லை, இதில் இன்னொன்றா என்று சில சமயம் தோன்றுகிறது. ஓடுகிற வரை ஓடட்டும்!
ஜெயமோகன் இந்த தளத்தைப் பற்றி தன் ப்ளாகில் புத்தகங்களைப்பற்றிய ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்கவேண்டிய தளம் என்று குறிப்பிட்டு எங்களை கவுரவித்திருக்கிறார்.
எங்கள் தளங்கள்
ப்ளாக்
அவார்டா கொடுக்கறாங்க?
கூட்டாஞ்சோறு
தொகுக்கப்பட்ட பக்கம்: ப்ளாக் நிகழ்வுகள்
ஜனவரி 2, 2012

ஓபன் ரீடிங் ரூம்

by
இன்னும் ஒரு புத்தகத் தளம். ஓபன் ரீடிங் ரூம் என்ற இந்தத் தளத்தில் காப்பிரைட் முடிந்த, அல்லது நாட்டுடமை ஆன புத்தகங்கள் சேகரிக்கப்படுகின்றன. ரமேஷ் என்பவர் முயற்சி எடுத்துச் செய்கிறார். ரமேஷுக்கு வாழ்த்துக்கள்!
ஓபன் ரீடிங் ரூம், தமிழ் தொகுப்புகள், அழியாச்சுடர்கள் என்று இந்த மாதிரி முயற்சிகள் பெருகிக் கொண்டே போவது நல்ல விஷயம். இப்போது இவற்றை ஒருங்கிணைத்த ஒரு அட்டவணைதான் வேண்டி இருக்கிறது…
தொடர்புடைய சுட்டிகள்:
ஓபன் ரீடிங் ரூம் தளம்
தமிழ் தொகுப்புகள் தளம்
அழியாச்சுடர்கள் தளம்
ஜனவரி 1, 2012

2012 புத்தாண்டு திட்டங்கள் – Bags

by
ஜகா வாங்கிவிட்டான் என்று ஆர்வி சொல்வதால் அதையே சாக்காக வைத்துக் கொண்டு முழுமையாக ஜகா வாங்கிவிடலாமா என்று தோன்றும் என் எண்ணத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டு இந்த பதிவை இடுகிறேன்.
சில மாதங்களாக நான் ஜகா தான் வாங்கியுள்ளேன். அதறக்கு புற காரணங்களும், அகக் காரணங்களும் உண்டு. என்றாலும் இப்பொழுது இரண்டு தான் முன்னால் நிற்கிறது. ஒன்று, ஆர்வமிருந்தாலும் தரமாக எழுத நான் இன்னும் நீண்ட பயணம் மேற் கொள்ள வேண்டும்.  இரண்டாவது, நேரத்தை ஒருங்கிணைப்பது. இரண்டையும் கருத்தில் கொண்டு முயற்சி எடுப்பது தான் இவ்வருட new year resolution.
2011ல் சில முக்கிய நூல்களைப் படித்தேன். ஆழி சூழ் உலகு, Crime and Punishment ( 2009ல் நூலக ebookல் படித்து காலம் கடந்ததால் பாதியில் கைவிட்டது – இப்பொழுது சொந்தமாகவே வாங்கி விட்டேன்) குறிப்பிடத்தக்கது.
இதுவரை பட்டியல் போட்டுப் படித்ததில்லை. என்றாலும் இம்முறை பட்டியல் போடலாமே என்று ஒரு முயற்சி. என் சிந்தனைக்கு உகந்ததாக இருப்பது இவை. இதில் வரிசையெல்லாம் கிடையாது. எந்த புத்தகம் மாட்டுகிறதோ அது தான்.
1. One hundred years of solitude – Gabriel García Márquez
2. The name of the Rose – Umberto Eco
3. War and Peace – Leo Tolstoy
4. The selfish Gene – Richard Dawkins
5. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
6. கொரில்லா – ஷோபா சக்தி
7. பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்
8. வோல்காவிலிருந்து கங்கை வரை – ராகுல் சங்கிரீத்யாயன் (ஆங்கிலத்தில் படிக்கலாமா? தமிழில் படிக்கலாமா?)
9. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு
10. பிறகு – பூமணி
11.  Breaking India – Rajiv Malhotra and Aravindhan Neelakantan
12. The Hindu – Wendi Doniger
13. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
14. உப பாண்டவம் – எஸ் ரா (பாதியில் நிற்கிறது)
15. பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்
பார்க்கலாம் எப்படி போகிறதென்று.
ஜனவரி 1, 2012

2012 புத்தாண்டு திட்டங்கள் – RV

by
புது வருஷம் என்றால் திட்டங்கள் போடுவதும் இரண்டு நாள் போனதும் அவற்றை மறந்துவிடுவதும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து நடந்து வரும் பழக்கம். போன வருஷம் போட்ட திட்டங்கள் சிரிக்கத்தான் பயன்படுகின்றன. வழக்கம் போல கொஞ்சம்தான் நடந்தது. இந்த வருஷம் திட்டம் போட வேண்டிய வேலை மிச்சம்.
2012 -இல் எனக்கு முக்கியமாகத் தோன்றுபவை.
  1. கையில் கிடைத்ததைப் படிப்பதை எல்லாம் குறைத்துக் கொள்ள வேண்டும். பதிவுகளின் quantity முக்கியம் இல்லை, quality-தான் முக்கியம். இந்தத் தளத்தைப் பார்ப்பவர்களுக்கும் அது கொஞ்சம் relief ஆக இருக்கும். :-)
  2. முடிந்த வரை சீரிசாக எழுத வேண்டும். எழுதும் பதிவுகளுக்கு ஒரு தீம் இருக்க வேண்டும். அது என்ன என்று முடிவு செய்யவில்லை. ஜெயமோகன் சிபாரிசு செய்யும் நாவல்கள், எஸ்.ரா. சிபாரிசு செய்யும் நாவல்கள், மகாபாரதப் படைப்புகள், இல்லை நானே படித்த, படிக்க விரும்பும் புத்தகங்களை ஒரு லிஸ்ட் போட்டு அவற்றைப் பற்றி ஒரு சீரிசாக போட்டால் நன்றாக இருக்கும்.
  3. சிலிகான் ஷெல்ஃப் குழுமம் இங்கே ஓரளவு டெவலப் ஆகி இருக்கிறது. ஆனால் இந்தத் தளத்தில் எழுதுவது அனேகமாக நான் மட்டுமே. சக பொறுப்பாளனான பக்ஸ் கூட ஜகா வாங்கிவிட்டான். மற்ற குழும உறுப்பினர்களை எழுத வைக்க வேண்டும். ((அருணகிரி, திருமலைராஜன் ஆகியோர் பல இணைய தளங்களில் அவ்வப்போது எழுதுகிறார்கள். மயிலேறி ஒரு ப்ளாக் நடத்துகிறார்.)
  4. எழுதுவதை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
2011 திட்டங்கள், மற்றும் படிக்க விரும்பும் டாப் டென் தமிழ் புத்தகங்கள் என்று இரண்டு லிஸ்ட் போட்டிருந்தேன். மொத்தமாக 22 புத்தகங்களை சொல்லி இருந்தேன். அதில் படித்தது ஐந்துதான். (ஆழிசூழ் உலகு, வீரபாண்டியன் மனைவி, சுண்ணாம்பு கேட்ட இசக்கி, வீரபாண்டியன் மனைவி, வாசவேஸ்வரம், புளியமரத்தின் கதை (மறு வாசிப்பு). உண்மையில் மிச்சப் பதினேழு மற்றும் விஷ்ணுபுரம், Six Acres and a Third, சாஹேப் பீபி குலாம் புத்தகங்களை மட்டும் இந்த வருஷம் படித்தால் அதுவே போதும். பழக்க தோஷம் விடாது, அதனால் ஜனவரியில் பழைய பாணியில் இரண்டு நாளுக்கு ஒரு பதிவு என்ற பாணி தொடரும். அதற்கப்புறம் தெரியாது.
இந்த வருஷம் படிக்க வேண்டிய புத்தகங்கள்:
  1. வார் அண்ட் பீஸ் (War and Peace)
  2. க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட் (Crime and Punishment)
  3. ஐவோ ஆண்ட்ரிச் எழுதிய ப்ரிட்ஜ் ஆன் தி ட்ரினா (Bridge on the Drina)
  4. கோபோ அபே எழுதிய உமன் இன் த ட்யூன்ஸ் (Woman in the Dunes)
  5. பிபூதிபூஷன் பட்டாசார்யா எழுதிய பதேர் பாஞ்சாலி (Pather Panchali)
  6. கொற்றவை
  7. கடலுக்கு அப்பால் + புயலிலே ஒரு தோணி
  8. ஜே ஜே சில குறிப்புகள் (மறு வாசிப்பு)
  9. சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  10. பாலகுமாரனின் உடையார் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  11. நீல. பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  12. நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  13. வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியார் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  14. பாலகிருஷ்ண நாயுடுவின் டணாய்க்கன் கோட்டை (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  15. பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  16. கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  17. தேவனின் சி.ஐ.டி. சந்துரு (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  18. விஷ்ணுபுரம் (மறுவாசிப்பு)
  19. ஃபகீர் மோகன் சேனாபதி எழுதிய Six Acres and a Third (ஒரிய மொழிப் புத்தகம் – கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  20. பிமல் மித்ரா எழுதிய சாஹேப் பீபி குலாம்
  21. ஜெயமோகனின் இன்றைய காந்தி (முதல் முறை போட்ட லிஸ்டில் விட்டுப்போய்விட்டது, இதுவும் கைவசம் இல்லை)
தொடர்புள்ள சுட்டிகள்:
2011 திட்டங்கள்
படிக்க விரும்பும் டாப் டென் தமிழ் புத்தகங்கள்
December 31, 2011

ரகோத்தமன் எழுதிய “ராஜீவ் கொலை வழக்கு”

by
தமிழர்களுக்கு மறக்க முடியாத அதிர்ச்சி ராஜீவ் படுகொலை. ராஜீவின் உடல் சின்னாபின்னமாகிக் கிடந்த புகைப்படம் மறக்க முடியாத ஒன்று.
அதுவும் ஓரிரு மாதங்களில் சிவராசனைப் பிடித்தார்களா, கேஸ் முடிந்ததா என்றால் அதுவுமில்லை. நாலைந்து வருஷம் ஜெயின் கமிஷன், சந்திரசாமி சதி, சுப்ரமணியசாமியின் “திடுக்கிடும்” குற்றச்சாட்டுகள் என்று ஏதாவது நியூஸ் வந்துகொண்டே இருந்தது. இதில் வெளியே வராத விஷயங்கள் இருக்கிறது என்று தோன்ற வைத்தது.
வழக்கைத் துப்பறிந்த முக்கிய அதிகாரியான ரகோத்தமன் எழுதிய இந்தப் புத்தகம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது. ரகோத்தமன் தலைமை அதிகாரி கார்த்திகேயனுக்கு அடுத்த இடத்தில் இருந்திருக்கிறார். அவருக்கு புலனாய்வில் என்ன நடந்தது, என்ன நடக்கவில்லை என்பதாவது நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.
ராஜீவ் இறந்த அன்று இதைச் செய்தது பஞ்சாப் தீவிரவாதிகளா, அஸ்ஸாம் தீவிரவாதிகளா என்றெல்லாம்தான் யோசித்திருக்கிறார்கள். புலிகளின் பேர் அவ்வளவாக அடிபடவில்லை. ராஜீவைக் கொன்று புலிகள் தமிழகத்தின் ஆதரவை இழக்கமாட்டார்கள் என்று நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த ஒரே க்ளூ ஹரிபாபுவின் காமிரா.
காமிராவை வைத்து ஹரிபாபுவின் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். ஹரிபாபுவை வேலைக்கு வைத்திருந்த சுபா சுந்தரத்தின் மீது கண் விழுந்திருக்கிறது. நளினியைத் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். முருகன், சின்ன சாந்தன், சிவராசன் என்று ஒவ்வொன்றாக கண்ணிகளைப் பிடித்திருக்கிறார்கள். திறமையான சதி, சிறப்பான புலனாய்வு.
ஆனால் ஹரிபாபுவின் காமிரா தற்செயலாகக் கிடைக்கவில்லை என்றால் புலனாய்வு தடுமாறிப் போயிருக்கும், எங்கே ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை என்பதை ரகோத்தமனே ஒத்துக் கொள்கிறார். அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த சதியின் ஒரு முனையை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். சதிகாரர்களுக்கு ஹரிபாபுவின் அவசியம் என்ன? ராஜீவ் துண்டு துண்டாக சிதறி இருப்பதை ஃபோட்டோ பிடித்து வைத்துக் கொண்டு பார்த்து பார்த்து மகிழ்வார்களா? பயங்கர சைக்கோத்தனமாக இருக்கிறது.
ரகோத்தமனுக்கு புலனாய்வின் போக்கில் முழு திருப்தி இல்லை. தனக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்று நினைக்கிறார். குறிப்பாக மரகதம் சந்திரசேகரின் குடும்பத்தவர், கருணாநிதி, வைக்கோ, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை விசாரிக்க வேண்டாம் என்று தான் கட்டுப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார். இது உண்மையாக இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். வைக்கோவுக்கு சதியில் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் நெருக்கமானவர் அவர் என்பது தெரியாத தமிழன் கிடையாது. புலிகள் இப்படி தமிழ்நாட்டில் புகுந்து ராஜீவை படுகொலை செய்திருக்கிறார்கள், உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்றாவது விசாரிக்க வேண்டாமா? நாலைந்து வருஷம் கழித்து ஜெயின் கமிஷன் மட்டும்தான் அவரை விசாரித்ததாம். மரகதம் சந்திரசேகர் இந்திரா-ராஜீவுக்கு நெருக்கமானவராம். ராஜீவ் தமிழ்நாட்டுக்கு வந்ததே ம. சந்திரசேகர் மேல் இருந்த அன்பினால்தானாம். ஆனால் அவரது குடும்பத்தவரை ஏமாற்றிதான் ராஜீவுக்கு அருகே வந்திருக்கிறார்கள் என்பது தெளிவு. அவர்கள் யாரையும் எம்பராஸ் செய்ய வேண்டாமென்று மேல் அதிகாரிகள் நினைத்ததால் அவர்களை நெருங்க முடியவில்லையாம். கருணாநிதி அதே நாளில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கூட்டத்துக்கு சில மணி நேரம் முன்னால் நடக்க இருந்த பொதுக் கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார். மேற்பார்வைக்கு இது ஒரு தற்செயல் நிகழ்ச்சி போலத் தெரியலாம். கருணாநிதியும் இது சாதரணமாக நடப்பதுதானே என்று சொன்னாராம். ரகோத்தமன் அப்படி கருணாநிதி கலந்து கொள்ளும் கூட்டம் ரத்து என்பது நடந்ததே இல்லை என்கிறார். இது நிச்சயமாக ஒரு சந்தேகத்துக்குரிய நிகழ்ச்சி. ஆனால் விசாரிக்க வேண்டாம் என்று முட்டுக்கட்டை போடப்பட்டதாம். சிவராசனை தன்னால் உயிரோடு பிடித்திருக்க முடியும், ஆனால் கமாண்டோ படைகளோடு காத்திருக்கும்படி பணிக்கப்பட்டேன், அதற்குள் சிவராசன் தற்கொலை செய்துகொண்டுவிட்டான் என்கிறார்.
ரகோத்தமன் வைக்கும் இரண்டாவது முக்கியக் குற்றச்சாட்டு மெத்தனம் – குறிப்பாக ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகளில். ராஜீவ் வர வேண்டிய விமானம் சில பிரச்சினைகளால் மெதுவாக கிளம்பி இருக்கிறது, கூட்டத்துக்கு தாமதமாக வந்திருக்கிறார். அவர் அப்படி தாமதமாக வருவது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் போலீசுக்குத் தெரியவில்லை, ஆனால் சிவராசனுக்குத் தெரிந்திருக்கிறது. ராஜீவுக்கு யார் யார் மாலை போடுவார்கள் என்பதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார், என்ன அட்ரஸ் என்று ஒரு அடிப்படை விவரமும் போலீசிடம் கிடையாது.
புத்தகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்படும் விவரங்களை வைத்துப் பார்த்தால்:
  1. ராஜீவைக் கொலை செய்ய இவ்வளவு திறமையாக சதி செய்ய முடியும் என்ற பிரக்ஞையே நமக்கு அப்போது இல்லை. பாதுகாப்பு என்றால் பத்து போலீஸ்காரர்கள் பழைய போல்ட் ஆக்ஷன் துப்பாக்கிகளோடு கீழே நிற்பார்கள். அதி முக்கியத் தலைவர், நிறைய பாதுகாப்பு என்றால் நூறு போலீஸ்காரர்கள். இப்படிப்பட்ட ஒரு சதியை தடுக்கும் வல்லமை நமக்கு அப்போது இல்லை.
  2. ராஜீவ் கொல்லப்படுவதை ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லாவிட்டால், ஃபோட்டோ எடுத்த ஹரிபாபு இறந்திருக்காவிட்டால், காமிரா ஸ்தலத்திலேயே விட்டுப் போயிருக்காவிட்டால், கொலையாளிகள் தப்பி இருக்க நிறைய வாய்ப்பு இருந்திருக்கும்.
  3. தமிழ்நாட்டில் அப்போது புலிகளுக்கு எல்லா லெவலிலும் தொடர்பு இருந்திருக்கிறது – இந்திரா குடும்பத்தின் மீது பக்திப் பரவசத்தோடு இருந்த மணிசங்கர் ஐயர், வாழப்பாடி ராமமூர்த்தி, மரகதம் சந்திரசேகர் உட்பட. அன்று ஈழத் தமிழர்களிடம் இருந்த அனுதாபத்தை எப்படி உபயோகித்துக் கொள்வது என்று புலிகளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.
  4. வைக்கோ போன்றவர்களுக்கு இப்படி ஒரு முயற்சி நடக்கப் போகிறது என்று தெரிந்திருக்கலாம். இல்லை பிரபாகரன் புத்திசாலித்தனமாக யாருக்கும் விஷயத்தைச் சொல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் விசாரிப்பதற்கான முகாந்திரம் இருக்கிறது. அரசியல் தலைவர்களை soft ஆகத்தான் நடத்தி இருக்கிறார்கள்.
  5. எனக்கு இந்திய தரப்பில் சதி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியர்களுக்கே உரிய மெத்தனம், பழைய தொடர்புகள் இன்று வெளியே தெரியக்கூடாது என்ற எண்ணம் இருந்ததாகத் தெரிகிறது.
எது எப்படி இருந்தாலும் சிறப்பாகத் துப்பறிந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ரகோத்தமன் சுட்டிக் காட்டும் குறைகள் இன்றாவது நீக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
நல்ல ஆவணம், சுவாரசியமாகவும் இருக்கிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
தொடர்புடைய சுட்டிகள்:
ஈழத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் பற்றி சில பதிவுகள்
December 30, 2011

சுஜாதாவின் “மேற்கே ஒரு குற்றம்” (கணேஷ்-வசந்த்)

by
மாத நாவலாக வந்தபோது படித்திருக்கிறேன், it was delightful then. நண்பர் கூட்டம் எல்லாருமே சுஜாதா பக்தர்களாக மாறிக் கொண்டிருந்த தருணம் அது. மீண்டும் சமீபத்தில் படிக்க முடிந்தது. இப்போதும் பிடித்திருக்கிறது.
சிம்பிளான மர்மம்தான் என்றாலும் விறுவிறுப்புக்குக் குறைவில்லை. டென்ஷனோடு கணேஷைப் பார்க்க வரும் ஒரு பெண்ணை கோர்ட்டில் பிசியாக இருக்கும் கணேஷ் காத்திருக்கச் சொல்கிறான். கணேஷ் வருவதற்குள் போய்விடும் அந்தப் பெண் அன்றே ஒரு விபத்தில் இறக்கிறாள். அது விபத்தல்ல, கொலை என்று கணேஷ்-வசந்த் கண்டுபிடிக்கிறார்கள். அவள் ஒன்றும் சொல்லாவிட்டாலும் எல்லாவற்றையும் சொல்லிவிட்ட மாதிரி நடிக்கிறார்கள். வில்லன்கள் இவர்களைக் கடத்தி கொள்ளப்போகும்போது அந்தப் பெண் செய்து தருவதாக சொன்ன காரியத்தை தாங்கள் முடித்துத் தருவதாக பேரம் பேசுகிறார்கள். ஜெர்மனிக்குப் போகிறார்கள். என்ன காரியம் என்று அவர்களுக்கே தெரியாது என்பதுதான் ஒரே பிரச்சினை. கணேஷிடம் இருக்கும் ஒரே க்ளூ அந்தப் பெண் கணேஷுக்காக காத்திருக்கும்போது வரைந்துவிட்டுப் போன doodles-தான். வட்ட வட்டமாக வரைந்திருக்கிறது. பிரச்சினையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதை.
கதையில் எப்போதும் ஒரு மெல்லிய நகைச்சுவை ஓடிக்கொண்டே இருக்கிறது. அதுவும் வசந்த் பாத்திரம் அடிக்கும் கமெண்டுகள் சரியான அளவில் எல்லையைத் தாண்டுகின்றன. தமிழுக்கு உயர்தரமான த்ரில்லர். ஆங்கில த்ரில்லர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் படிக்கக் கூடிய த்ரில்லர்தான். ஒரு நல்ல ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் புத்தகம் அளவில் இருக்கிறது. இன்றைக்கும் யாரும் அந்த அளவுக்குக் கூட போகவில்லை என்பது சோகம்தான்.
கிழக்கு பதிப்பகம் மீண்டும் பதித்திருக்கிறது. விலை எழுபது ரூபாய்.
கணேஷ்-வசந்த் ரசிகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
December 28, 2011

க.நா.சு. நூற்றாண்டு

by
காலச்சுவடு இணைய இதழில் பழ. அதியமான் என்பவர் க.நா.சு. எழுதிய நூல்களைப் பற்றி நிறைய விவரங்கள் தந்திருக்கிறார். அந்தக் கட்டுரையிலிருந்துதான் இது க.நா.சு. நூற்றாண்டு என்பதே தெரிந்தது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
நான் படித்த முதல் க.நா.சு. புத்தகம் படித்திருக்கிறீர்களா? அந்தப் புத்தகம் தந்த மகிழ்ச்சிக்கு ஈடாக முதன் முதலாக திலீப்குமாரின் கடைக்குப் போனது, ஜெயமோகனோடு முதல் சந்திப்பு இரண்டையும்தான் சொல்லலாம். ஒத்த ரசனை என்பதெல்லாம் கூட இரண்டாம் பட்சம், தமிழில் அவணிக எழுத்துக்களைப் படித்துவிட்டு அவற்றைப் பற்றி பேச, எழுத, விற்க, பரிந்துரைக்க ஆள் இருக்கிறார்கள் என்று தெரிந்தது பெரிய சந்தோஷம். அதுவும் இணையம் வராத காலத்தில், இணையத்தில் தமிழ் பற்றி அவ்வளவாக தெரியாத காலத்தில் படித்திருக்கிறீர்களா புத்தகமும், திலீப்குமாரும் பாலைவனச் சோலைகள்தான். க.நா.சு. பரிந்துரைத்த புத்தகங்கள் அனைத்தும் பல வருடத் தேடலுக்குப் பிறகும் கிடைக்கவில்லை என்பது சோகமான விஷயம்.
படித்திருக்கிறீர்களா தந்த உற்சாகத்தில் அவர் பேரைப் பார்த்தால் புத்தகம் வாங்கத் தொடங்கினேன். நாவல் கலையாவது கொஞ்சம் பரவாயில்லை, இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1984) எல்லாம் தினமணி மாதிரி பத்திரிகைகளில் படித்துவிட்டு தூக்கிப் போட வேண்டியவை. ஒரு ஐநூறு ஆயிரம் பேராவது புத்தகம் படியுங்கள் என்று கேட்டுக் கொள்வார் அவ்வளவுதான். இதற்கெல்லாம் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது பெரிய சோகம். அதை விடப் பெரிய சோகம் அவ்வளவு committed வாசகர்கள் கூட இல்லாமல் அவர் போன்றவர்கள் கஷ்டப்பட்டது.
அப்புறம் சுந்தரராமசாமியின் நினைவோடை சீரிஸில் அவரைப் பற்றிய ஒரு கோட்டுச்சித்திரம் கிடைத்தது. நினைவோடை சீரிஸ் பொதுவாகவே அருமையானது. இதில் க.நா.சு.வின் ஆளுமை நன்றாகப் புரிகிறது.
க.நா.சு.வின் மாப்பிள்ளை பாரதிமணி எழுதிய ஒரு நினைவுக் குறிப்பும் படிக்க வேண்டியது. படிப்பு, எழுத்து தவிர வேறு எதுவும் தெரியாத மனிதர். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டேன். இன்னொரு நினைவுக் குறிப்பும் சுவாரசியமானது.
தஞ்சை பிரகாஷ் எழுதிய வாழ்க்கை வரலாறும் கிடைத்தது. கொஞ்சம் போர்.
இப்படி அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்ததே தவிர, அவர் புத்தகம் ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியில் பொய்த்தேவு (1946) கிடைத்தது. எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று. ஜெயமோகன் இதைத் தமிழின் ஆறாவது சிறந்த நாவலாக மதிப்பிடுகிறார். (மதிப்பீடு 2000-க்கு அப்புறம் வந்த நாவல்களை கணக்கில் கொள்ளவில்லை.) எஸ்.ரா.வும் இதைத் தமிழின் சிறந்த நூறு நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் இது எல்லாருக்கும் அப்பீல் ஆகும் என்று சொல்வதற்கில்லை. என்னடா சோமு பிறந்தான், வளர்ந்தான், பணம் சம்பாதித்தான், ஓட்டாண்டி ஆனான், பண்டாரம் ஆகிச் செத்தான், இதெல்லாம் ஒரு கதையா என்று நினைக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. சோமுவின் தேடல் உங்களுக்குப் புரிந்தால் அது இலக்கியம். இல்லாவிட்டால் போர்தான். தோழி அருணா கூட இதுல என்ன இருக்கு ஆர்வி என்று கேட்ட ஞாபகம் வருகிறது. (எனக்கு காஃப்கா எழுதிய மெடமார்ஃபாசிஸ் கொஞ்சமும் அப்பீல் ஆவதில்லை. திடீரென்று கரப்பான் பூச்சி ஆனானாம், அதை என்னதான் metaphor என்று வைத்துப் படித்தாலும் கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை)
இன்னும் படிக்க விரும்பும் புத்தகங்கள் இருக்கின்றன. அசுரகணம் (1959), ஒரு நாள் (1950). வேறு நாவல்கள் பற்றித் தெரியவில்லை. அவர் எழுதிய சிறுகதைகள் பற்றி சுத்தமாகத் தெரியவில்லை. ஜெயமோகன் அவரது தெய்வ ஜனனம் என்ற ஒரே ஒரு சிறுகதையை மட்டும் நல்ல தமிழ் சிறுகதைகள் லிஸ்டில் சேர்க்கிறார். எஸ்.ரா.வின் டாப் நூறு தமிழ் சிறுகதைகளில் க.நா.சு. எழுதிய எதுவும் இடம் பெறவில்லை.
புதுமைப்பித்தன் போன்றவர்களுக்கு அடுத்த வரிசைதான் என்றாலும் ஆய்வு செய்யத் தகுதியானவர். அதியமான் எழுதி இருப்பது முதல் படி. இன்னும் நிறைய வரவேண்டும்.
தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்:
அதியமானின் கட்டுரை
பொய்த்தேவு
படித்திருக்கிறீர்களா?
க.நா.சு. பற்றி பாரதி மணி – பகுதி I, பகுதி II, பகுதி III
December 27, 2011

2011-இன் 10 சிறந்த புத்தகங்கள் – நியூ யார்க் டைம்ஸ் தேர்வு

by
2011-இன் நூறு சிறந்த புத்தகங்கள் என்ற பதிவு நினைவிருக்கலாம். நூறு புத்தகங்களைப் படிப்பது இருக்கட்டும், நூறு புத்தகம் உள்ள லிஸ்டைப் படிப்பதே எனக்கெல்லாம் பெரிய கஷ்டம். இவ்வளவு பெரிய லிஸ்ட் எல்லாம் கொடுத்தால் ஏதாவது தெரிந்த பெயர் இருக்கிறதா என்று skim மட்டும்தான் செய்ய முடிகிறது. லிஸ்டில் ஒரு இருபது முப்பது சதவிகிதமாவது தெரிந்த பேர்கள் இல்லாவிட்டால் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவதே இல்லை.
நியூ யார்க் டைம்ஸ்காரர்களுக்கும் இது புரிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அந்த நூறிலிருந்து பத்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து (5 புனைவுகள், 5 அபுனைவுகள்) 2011-இன் 10 சிறந்த புத்தகங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகத்துக்கும் சின்ன குறிப்பும் கொடுத்திருக்கிறார்கள். உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
வசதிக்காக புத்தகங்களின் பேரை கீழே கொடுத்திருக்கிறேன்.
புனைவுகள்:
  1. Chad Harbach, Art of Fielding
  2. Stephen King, 11/22/63
  3. Karen Russell, Swamplandia
  4. Eleanor Henderson, 10000 Saints
  5. Tea Obreht, Tiger’s Wife
அபுனைவுகள்:
  1. Christopher Hitchens, Arguably
  2. Ian Brown, Boy in the Moon
  3. Manning Marable, Malcolm X
  4. Daniel Kahneman (எகனாமிக்ஸ் நோபல் பரிசு வென்றவர்), Thinking: Fast and Slow
  5. Amanda Foreman, A World on Fire
தொடர்புள்ள சுட்டி: 2011-இன் நூறு சிறந்த புத்தகங்கள்
December 26, 2011

நூலகம் தளம் – இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்

by
நூலகம் என்ற தளத்தை சமீபத்தில் பார்த்தேன். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கே சேகரிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்ப் புத்தகங்கள் மட்டுமல்ல, ஆனந்த கெண்டிஷ் குமாரசாமி எழுதிய Dance of Siva போன்ற ஆங்கிலப் புத்தகங்களும் pdf வடிவில் கிடைக்கின்றன. கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
பொதுவாக தமிழகத்து தமிழர்களுக்கு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. நான் ஓரளவாவது படித்திருப்பது அ. முத்துலிங்கத்தை மட்டுமே. படிப்பதை விடுங்கள், எனக்கு தெரிந்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் – அ. முத்துலிங்கம், மு. தளையசிங்கம், டொமினிக் ஜீவா, ஷோபா சக்தி, தேவகாந்தன். (தளையசிங்கம் பற்றி ஜெயமோகன் ஓரளவு எழுதி இருக்கிறார். சிறு வயதில் குமுதத்தில் டொமினிக் ஜீவாவின் எழுத்துகளைப் படித்திருக்கிறேன். ஷோபா சக்தி எழுதிய கொரில்லா புத்தகம் சமீபத்தில் நிறைய பேசப்பட்டது. தேவகாந்தன் கதாகாலம் என்ற மகாபாரதப் புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறாராம்.) சராசரிக்கு சற்று மேம்பட்ட வாசகனான, படிப்பில் மோகம் மற்றும் தேடல் உள்ள என் கதியே இதுதான்.
இந்தத் தளத்தை வைத்துக் கொண்டாவது இலங்கைப் படைப்புலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
பிற்சேர்க்கை: ராஜ்சந்திராவும் சித்திரவீதிக்காரனும் சில புத்தகங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உங்களைக் கவர்ந்த, உங்களுக்கு முக்கியம் என்று தோன்றும் புத்தகங்களை மறக்காமல் குறிப்பிடுங்கள்!
தொடர்புடைய சுட்டி: நூலகம் தளம்
December 25, 2011

ஜேம்ஸ் எம். கெய்னின் இரண்டு நாவல்கள்

by
ஜேம்ஸ் எம். கெய்ன் பல நாவல்கள் எழுதி இருந்தாலும் போஸ்ட்மன் ஆல்வேஸ் ரிங்க்ஸ் ட்வைஸ் (Postman Always Rings Twice), மற்றும் டபிள் இன்டெம்னிடி (Double Indemnity) இரண்டும் புகழ் பெற்றவை. பல விமர்சகர்கள் அவற்றை த்ரில்லர் என்ற genre-ஐத் தாண்டிய இலக்கியம் என்று கருதுகிறார்கள்.
எனக்கு இவை இலக்கியம் இல்லை. இரண்டும் சிறந்த திரைப்படங்களாக வெளிவந்தன. அது இந்தப் புத்தகங்களின் பிரபலத்தை, ஸ்டேடசை, அதிகரித்துவிட்டன என்று நினைக்கிறேன். இரண்டு புத்தகங்களையும் நான் பிரமாத த்ரில்லர் என்று கூட சொல்லமாட்டேன். ஆனால் முப்பதுகளின் பிற்பாதியில் இருந்த அமெரிக்க சமூகத்தை, அதுவும் குற்றங்களின் ஓரத்தில் நடமாடும், ஒயிட் காலர் வேலைக்குப் போகும், சிறுதொழில் செய்யும் மத்தியதர வர்க்கத்தை உண்மையாகப் படம் பிடிக்கின்றன. Great Depression அப்போதுதான் நீர்க்க ஆரம்பித்திருந்தது. அற உணர்வுகள் மழுங்கிப் போன, பணமே பிரதானம் என்று நினைக்கும் ஒரு சூழல். பெண்கள் தனியாக வாழ, வேலைக்குப் போக ஆரம்பித்திருந்த சூழல். அங்கீகரிக்கப்பட்ட உறவுகளுக்கு வெளியே செக்ஸ் என்பது நகர்ப்புறங்களில் புருவத்தைத் தூக்க வைக்காத ஒரு நிகழ்ச்சி. அந்த ambience-ஐ, கசடுகள் நிறைந்த ஒரு சமூகத்தை கெய்ன் உண்மையாகச் சித்தரிக்கிறார். அதுதான் அவரது பலம். குற்றம் எப்படி நடக்கிறது என்பதை விட குற்றவாளிக்கு எப்படி தண்டனை கிடைக்கிறது என்பதுதான் முக்கியமாக இருக்கிறது.
நாவல்களைப் பற்றிய சிறு குறிப்புகள்:
போஸ்ட்மன் ஆல்வேஸ் ரிங்க்ஸ் ட்வைஸ் (1934): சாலையின் ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரு சின்ன ஹோட்டல். ஹோட்டல் முதலாளி நிக். நிக்கின் மனைவி கோரா. ஃப்ராங்க் அங்கே தற்செயலாக வந்து சேர்கிறான். கோராவுக்கும் ஃப்ராங்க்குக்கும் உறவு ஏற்படுகிறது. நிக்கைக் கொன்றுவிட்டு ஹோட்டலை நடத்தத் திட்டம். நிக்கைத் தலையில் அடித்துக் கொன்றுவிட்டு விபத்து என்று செட்டப். கொலையில் அனேகமாக மாட்டிக் கொள்கிறார்கள், ஆனால் தண்டனையிலிருந்து தப்புகிறார்கள். ஆனால் அதே போன்ற ஒரு விபத்தில் கோரா இறக்கிறாள். ஃப்ராங்க் இந்த முறை குற்றம் செய்யாவிட்டாலும் சுலபமாக மாட்டிக் கொண்டு தண்டனை அடைகிறான்.
கவுரவம் திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன் இப்படித்தான் முதல் முறை தப்பித்துக்கொண்டு இரண்டாவது முறை செய்யாத கொலைக்கு தண்டனை அடைவார். இங்கிருந்து திருடிய ஐடியாதான். :-)
டபிள் இன்டெம்னிடி (1936): இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் வால்டர் நெஃப் ஃபைலிசொடு சேர்ந்து பயங்கரத் திட்டம் போட்டு ஃபைலிசின் கணவனைத் தீர்த்துக் கட்டுகிறான். விபத்து என்றுதான் போலீஸ் நினைக்கிறது. இன்ஷூரன்ஸ் பணம் வரக் காத்திருக்கிறார்கள். ஆனால் இன்ஷூரன்ஸ் கம்பெனியைச் சேர்ந்த கெயெஸ் இது கொலை என்று யூகிக்கிறான். நெஃப்புககு தான் கொன்றவனின் பெண் லோலாவோடு காதல் வேறு உண்டாகிறது. கெயெஸ்-நெஃப் இருவருக்கும் நடுவில் உள்ள டென்ஷன்தான் கதையில் சிறந்த பகுதி.
இரண்டு நாவல்களுமே படிக்கலாம் ரேஞ்சில்தான் மதிப்பிடுவேன். ஆனால் அமெரிக்க crime noir-இல் ஆர்வம் உள்ளவர்கள் மிஸ் செய்யக் கூடாது.
தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்
தொடர்புடைய சுட்டிகள்:
ஜேம்ஸ் எம். கெய்ன் விக்கி குறிப்பு
ஐஎம்டிபி தளத்தில் போஸ்ட்மன் ஆல்வேஸ் ரிங்க்ஸ் ட்வைஸ்
ஐஎம்டிபி தளத்தில் டபிள் இன்டெம்னிடி
December 22, 2011

ஜெயகாந்தனின் “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்”

by
புதுமைப்பித்தன், அசோகமித்திரன் மாதிரி பல முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் அவர்களது எழுத்துகளால் மட்டும்தான் அறியப்படுகிறார்கள். ஜெயகாந்தனோ ஹீரோ. சுந்தரராமசாமி ஜெயகாந்தன் ஒரு பொது மேடையில் மந்திரிகள் எதிரில் (காமராஜும் இருந்தாரோ என்னவோ நினைவில்லை) கால் மீது கால் போட்டு உட்கார்ந்திருந்ததை நினைவு கூர்கிறார். அண்ணாதுரை இறந்து தமிழ்நாடே அழுது புலம்பும் வேளையில் நேற்று வரை விமர்சித்தவர் இன்று இறந்துவிட்டதால் பொய்யாகப் பாராட்டிப் பேச முடியாது என்று முழங்கியவர் அவர். விகடனும் குமுதமும் அவர் எழுத்துக்களை விரும்பிப் பதித்தன. அக்னிப்பிரவேசம் போன்ற ஒரு சிறுகதையை விகடனில் பதிப்பதற்குத் தர துணிச்சல் வேண்டும். இன்றும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.
அவருடைய ஆளுமை என்பது என் தலைமுறைக்காரர்களுக்கே அவ்வளவாகத் தெரியாத விஷயம். ஆனால் எழுத்தை மீறிய ஆளுமை உண்டு என்று தெரிந்திருக்கும். இந்தப் புத்தகம் அதை ஓரளவு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
1945-75 காலகட்ட அனுபவங்களை இதில் எழுதி இருக்கிறார். எனக்கு விசேஷமாகத் தெரிவது அவர் உண்டாக்கிக் கொண்ட உறவுகள், சமரசம் அற்ற நேர்மை, தன நிறைகுறைகளை, நெருங்கிப் பழைய நண்பர்களின் குணங்களை மறைக்காமல் பேசும் தைரியம்.
சிறு வயதிலேயே கலை உலகத் தொடர்பு துவங்கிவிட்டது. சின்னச் சின்ன வேஷம் போட்டுப் பார்த்திருக்கிறார். சிறு வயதினருக்கே உரிய naivete இருந்திருக்கிறது. நல்லதம்பி திரைப்படத்தில் மதுவிலக்கைப் பற்றி ஆயிரம் பேசிவிட்டு வீட்டுக்குள் தண்ணி அடிக்கும் பிரமுகர்களை (என்எஸ்கே, அண்ணா?) பேர் சொல்லாமல் சாடுகிறார். தமிழ் ஒளியுடன் நண்பராக இருந்து அவர் போட்ட வேஷத்தை வெளிப்படையாக விவரிக்கிறார். விந்தன், சந்திரபாபு போன்றொரு இருந்த நட்பைப் பற்றி பேசுகிறார். திரைப்படம் இயக்கியது, வெற்றி/தோல்வி அடைந்த படங்கள், செலவு, கதைகளை கொடுத்த அனுபவங்கள், பீம்சிங், சில நேரங்களில் சில மனிதர்கள் என்று பல அனுபவங்களை எழுதி இருக்கிறார். தான் இயக்கிய “யாருக்காக அழுதான்” படத்தையே கிழிகிழி என்று கிழிக்கிறார்.

தியேட்டர்களுக்குச் சென்று ஜனக் கும்பலோடு உட்கார்ந்து படத்தைப் பார்த்தேன். ரசிகர்கள் வாரிக்கொண்டார்களே வாரி! படத்தின் ஆரம்பத்தில் 3 நிமிட நேரம் வெள்ளைத் திரையில் ஒன்றுமே தோன்றாது படம் ஓடும். தேய்ந்த பிரிண்ட்டின் கீறல்களை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அசரீரியாக நான் இந்தப் படத்தைப் பற்றி 3 நிமிட நேரம் பிரசங்கம் செய்வேன். பேச்சைத் தொடர்ந்து கண்ணதாசன் எழுதிய ஒரு நல்ல பாட்டு. ஒரு நல்ல பாட்டைக் கூடக் கேட்க விடாமல் ரசிகர்களை அடித்து விரட்ட முடியும். அதற்கு மேல் படத்தில் நாகேஷை நடக்க வைத்தும் படுக்க வைத்தும் சாப்பிடச் செய்தும் இசைத்தட்டில் இரண்டு பக்கம் வருகிற மாதிரி ஒரு பாட்டுக் காட்சி ரீல்.
புத்தகத்தின் சிறந்த பகுதி என்று சந்திரபாபுவின் நட்பைப் பற்றிப் பேசும் பகுதியைத்தான் சொல்வேன். இரண்டு சுவாரசியமான ஆளுமைகளின் நட்பு அனுபவங்கள் சுவாரசியமாக இருக்கக் கேட்பானேன்? சினிமா ஆசையால் நீர்த்துப் போனவர் என்று விந்தனைப் பற்றி குறிப்பிடுகிறார், அது உண்மைதான் என்று நினைக்கிறேன்.
வேறு சில titbits: விந்தனின் “அன்பு அலறுகிறது” என்ற புத்தகத்தின் முதல் இரண்டு சாப்டர் மட்டும்தான் அவர் எழுதினாராம், மிச்சத்தை எழுதியது ஜெயகாந்தன்தானாம். திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் “பாட்டும் நானே பாவமும் நானே” பாடலை எழுதியது கா.மு. ஷெரிஃப், பேரை வேறு யாரோ தட்டிக்கொண்டு போய்விட்டார்கள் என்று இவர் எழுத, கண்ணதாசன் தான்தான் எழுதினேன் என்று மறுத்திருக்கிறார்.
எனக்கு நா.பா.வின் நினைவு வந்துகொண்டே இருந்தது. அவரது கனவு இப்படிப்பட்ட ஒரு மனிதனாக வாழ்வதுதான் என்று சமுதாய வீதி புத்தகத்திலிருந்து யூகிக்கிறேன்.
முக்கியமான ஆவணம். சுவாரசியமும் இருக்கிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன், சினிமா
தொடர்புடைய சுட்டிகள்:
ஜெயகாந்தனும் சினிமாவும்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம்
சில நேரங்களில் சில மனிதர்கள் பக்சின் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – திரைப்படம்
ஜெயகாந்தனின் ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’
அம்ஷன்குமார் எழுதிய கட்டுரைhttp://siliconshelf.wordpress.com/

கருத்துகள் இல்லை: