வியாழன், டிசம்பர் 15, 2011

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

போராளி - குடிக்காத நாயகனின் கதை. 

 

போராளி - குடிக்காத நாயகனின் கதை.

தமிழகத்தில் - எப்படி குடிக்காதவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டுமோ - அப்படி தான் தமிழ் திரைப்படங்களிலும் - குடிக்காத கதா நாயகர்களையும் தேடி தான் கண்டுபிடிக்க வேண்டும். குடிப்பது ஆண்மையின் அடையாளம் என்றாகிவிட்டது. குடிக்காதவனை கிறுக்கனாக பார்க்கிறது சமுதாயம். "அளவாக குடித்தால் தப்பில்லை" என்று சொல்லப்படும் சூழலுக்கு வந்துவிட்டோம் இல்லையா? "ஆம்பிளைங்க தான் குடிக்கணும்மா... நாங்க குடிக்க கூடாதா" என்று பெண்களும் கேட்க துவங்கி விட்டார்கள்.

அந்த வகையில் போராளி திரைப்பட நாயகன் குடிக்காதவனாக படம் முழுவதும் வருவதை பார்க்க ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பொறுக்கித்தனமான வேலைகளே "கதாநாயக லட்சணம்" என்கிற சூத்திரத்துக்கு தமிழ் சினிமா தயாராகி விட்ட வேளையில் - ஐந்தாம் வகுப்பே படித்த, சமூகத்தின் பால் அக்கறை கொண்ட ஒரு எளியவனை நாயகனாக பார்ப்பது மேலும் ஆறுதலே.

ஒரு காட்சியில் - டாஸ்மாக் வாசலில் இருக்கும் கூட்டத்தை பார்த்து, "வருஷத்துக்கு பதின்காயிரத்தி ஐநூறு கோடி" கிடைப்பது பற்றி நாயகன் உண்மையை பேசுவது மகிழ்ச்சியாக இருந்தது. சென்ற வாரம் "மயக்கம் என்ன - ஒரு குடிகாரரின் கதை" என்று பதிவு போட்டதற்கு ஒரு "குடிமகன்" அநாகரீகமாக பின்னூட்டம் போட்டு இருந்தார். உண்மையை தானே சொன்னோம்.

 மயக்கம் என்ன - குடிகாரரின் கதை என்றால், போராளி குடிக்காதவரின் கதை என்று தானே சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் - எளிய கதாநாயகர்களையோ, யதார்த்தமான கதைகளையோ பார்க்க முடிவதில்லை. நாயகிகளை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தமிழுக்கு சம்மந்தமில்லாத முகங்களாய்... இசை அதற்கு மேல்... கடித்து துப்பப்படும் தமிழ் வார்த்தைகள் காதில் திராவகத்தை ஊற்றுவது போல உள்ளது.

போராளி ஒரு தமிழ் படம் பார்க்கிற சூழலையே தந்துள்ளது. பக்கத்து வீட்டு அண்ணாவை போல உள்ள சசிகுமார், பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் அந்த பெண்... சென்னைக்கு வந்து முன்னேறுகிற நாயகனின் கதை தான். படம் ஆகா, ஓகோ ரகம் இல்லை என்றாலும் -வருகிற பிற படங்கள் மிக மோசமாக உள்ள போது, போராளி மெச்ச வேண்டிய படமே.

சமுத்திரகனியின் முந்தைய படமான நாடோடிகளின் கதையில் - ஒரு அருமையான கதை இருந்தது. அது காட்சிகளை அழகாக நகர்த்தியது - ஒரு சிறந்த படத்திற்குரிய அத்தனை அந்தஸ்த்தையும் பெற்றது. அது போராளியில் மைனஸ். இடைவேளை வரை யதார்த்தமாக செல்லும் படம் - பிறகு தமிழ் சினிமாவின் வேலையை காட்டி விடுகிறது.

சித்தி கொடுமை, சொத்து ஆசை போன்றவைகளை தவிர்த்து - நாயகனை பைத்தியமாக்குவதற்கு வேறு மாறுப்பட்ட காரணங்களை வைத்திருந்தால் - படம் இன்னும் வெகுவாக மக்களை கவர்ந்திருக்க கூடும். ஆனாலும் மனநிலை பாதிக்கப்பட்டு தெருவில் அலைபவர்கள் குறித்து யோசிக்க வைக்கிறது - படம். நான் முன்பே தெருவில் சுற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் போது நினைப்பேன்.

இந்த பத்து வருஷத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ரெம்பவும் அதிகரித்துள்ளதோ என்று. முன்பெல்லாம் எங்கேயோ அரிதாக தோன்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இன்று நிறைய தெரிகிறார்கள். ஏன்? போதை வஸ்து அதிகம் புழங்குவது மிக பெரிய காரணமாக இருக்கலாம். நிச்சயம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் - குடி அல்லது கஞ்சா போன்றவைகளினால் புத்தி கெட்டிருக்கலாம்.

போராளி  மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பரிவோடு பார்க்கிறது படம். மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு உணவு வாங்கி தரும் நாயகன்... நிஜ வாழ்க்கையிலும் நிறைய பேரை பார்க்கலாம். ஒரு பெரியவர் தினசரி கோவிலுக்கு போவார். பூஜை செய்வார். வெளியே வந்ததும் வாழைப்பழத்தையும், தேங்காயையும் எப்போதும் கோவில் வாசலிலேயே இருக்கும் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு கொடுப்பார்.

என் நண்பரின் சகோதரிக்கு திருமணமாகி பல வருஷங்களாகியும் குழந்தைகள் இல்லை. செய்யாத வைத்தியம் இல்லை. பார்க்காத மருத்துவர்கள் இல்லை. பலன் பூஜ்யம். தனக்குள் பேச துவங்கியவர் - இன்று மனநிலை பாதிக்கப்பட்டு. திரைப்படங்கள் சுலபமாக தீர்வை தந்து விடுகிறது. ஆனால் யதார்த்தம் அவ்விதம் இல்லை. படம் பார்க்கலாம்.



குழந்தைகளின் உலகத்தை பதிவு செய்த "பசங்க" போன்ற அரிதான படத்தை எடுத்ததற்காகவே சசிகுமார் தயாரிப்பில் வருகிற படங்களை வரவேற்க வேண்டும். மேலும் சில படங்கள் கொடுப்பாரே.
  1/1  

கருத்துகள் இல்லை: