புதன், டிசம்பர் 14, 2011

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அண்ணா நூற்றாண்டு நூலகம்



வெயில் குறைந்த அழகான மாலை நேரம் 4 .35 மணி... கிண்டியிலிருந்து 21 G என்ற பஸ்ஸில் ஏறி கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூலகத்துக்கு ரிக்கற் எடுத்தோம். கிண்டியிலிருந்து மூன்றாவது பேரூந்து நிறுத்தம் என்றார் கண்டெக்டர்.
பஸ் வளைந்து நெளிந்து அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி சிறுவர் பூங்காவைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. வீதியைப் பார்த்துக் கொண்டே போகும் போது இடதுபக்கத்தில் கம்பீரமாக காட்சியளித்து அந்த அறிவுச் சுரங்கம்..
அண்ணா நூலகத்தை அடுத்து சிக்னலைத் தாண்டி தான் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு இறங்கி நூலகத்தைப் பார்க்கும் ஆவலில் வேகமாக நடந்தோம்.

உண்மையில் இதனை ஒரு ஆசியாவின் அதிசயம் என்று சொன்னால் மிகையில்லை. இந்த நூலகம் தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழன் நிச்சயம் பெருமையடைய வேண்டும்.
சென்னை போன்ற சன நெருக்கடி மிக்க நகரத்தில் விலாசமாகவும் 8 ஏக்கர் பரப்பளவில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகம் தரைதளத்துடன் 8 மாடிகள் கொண்ட கட்டிடமாக எழுந்து நிற்கின்றமை மூலம் தமிழனின் புலமையை பெருமையை உலகெங்கும் பறைசாற்றுகின்றது.
இப்போது சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
இப்படியானதொரு சிறப்பு வாய்ந்த நூலகத்தைத் தான் தமிழக முதலமைச்சர் ஆன ஜெயலலிதா கடந்த 2 ஆம் திகதி நவம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டு அன்று குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றும் அரசு ஆணை ஒன்றை வெளியிட்டார்.

இதற்கு பல்வேறுபட்ட தரப்புக்களில் இருந்தும் பலத்த எதிர்ப்புக்கள் எழுந்தமை யாவரும் அறிந்ததே.
ஆனாலும் எவ்வித சலனமும் இன்றி அமைதியாக இருக்கிறது இந்த அறிவாலயம்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் உள்ளே நுழைந்ததும் அதன் வெளிப்புற அழகு சென்னை விமான நிலையத்தை விட பிரமிக்கத்தக்க வகையில் அழகாகவும், சுததமாகவும் இருந்தது.
நாங்கள் சென்னையில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் இருந்தது.
"வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைகளுக்கு தரப்பட வேண்டும்" என்று நுழை வாயிலில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் கம்பீரமான சிலைக்கு கீழே எழுதப்பட்டிருந்தது.
மக்களால் போற்றப்பட்ட முன்னாள் தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாத்துரையின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 15 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் 2010 அன்று முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதியால் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நூலகமே இதுவாகும்.

பாதுகாப்பு சோதனைகளைக் கடந்து உள்ளே சென்றால் நீங்கள் இன்னொரு உலகத்தில் இருப்பது போல் உணர்வீர்கள். முதலில் பார்வையற்றோர் படிப்பதற்காக சிறப்பு வசதிகளுடன் கூடிய படிப்பகம் உள்ளது.
அதற்கு அடுத்ததாக வெளியில் இருந்து புத்தகம் கொண்டு வந்து படிப்போருக்கான அறை உள்ளது. அங்கு ஏராளமான மாணவர்கள் படித்துக் கொண்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.
இங்கு உள்ள விசேடம் என்னவென்றால் நூலகத்தின் அனைத்தப் பகுதிகளிலும் குளிரூட்டி வசதி செய்யப்பட்டிருந்தது.குளிரூட்டிகள் கொளுத்துகிற சென்னை வெயிலுக்கு இதமாக இருந்தது.
முதல் தளமானது குழந்தைகள் படிப்பதற்கான ரம்மியமான இயற்கைச் சூழலைக் கொண்ட படிப்பகமாக அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு தான் நாளிதழ்கள் பிரிவும் அமைந்துள்ளது. இந்தியா மட்டுமல்ல உலகின் பல பாகங்களில் இருந்து வரும் நாளிதழ்களையும் இங்கு படிக்கக் கூடியதாக உள்ளது.
‘நல்ல வெளிச்சம், இதமான குளிர், அற்புதமான மேசை, நாற்காலிகள் என்று வாசிப்பவர்களுக்கான சொர்க்கம் இது.
இங்கு வருவோர் எல்லாக் கவலைகளையும் தூர எறிந்து விட்டு இன்னொரு உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள். அப்படி ஒரு அமைதியும் நிசப்தமும் அங்கே நிலவுகின்றது.
இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான வரலாற்று நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று பல்வேறு வகையான நூல்களும் காணப்படுகின்றன.
கூடுதலாக ஒவ்வொரு புத்தகத்திலும் நான்கு பிரதிகள் காணப்படுகின்றன. புத்தகங்களை எடுத்து அங்கேயே படிக்கலாம், குறிப்பும் எடுத்துக் கொள்ளலாம்.

"படித்தவுடன் அங்கேயே வைக்கவும்" என்று படிக்கும் மேசையில் எழுதப்பட்டு உள்ளது.
தற்போது ஞாயிற்றுக் கிழமைகளில் சராசரியாக 3000 பேர் வந்து செல்வதாக அங்குள்ள வருகைப் பதிவேட்டில் பதிவாகியுள்ளது.
கருணாநிதி எழுதிய புத்தகங்களைத் தவிர எல்லாப் புத்தகங்களும் அங்கே இருக்கின்றன.
மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது தளங்களில் ஒவ்வொரு துறைகளுக்குமான புததகங்கள் காணப்படுகின்றன.
ஆங்கிலம், கணிப்பொறி, அறிவியல், தத்துவம், சமூகவியல், உளவியல், மருத்துவம், தொழினுட்பம், விவசாயம், உணவு அறிவியல், மேலாண்மை, இலக்கியம், சுற்றுலா என்று எராளமான துறைகளுக்கான புத்தகங்கள் ஆங்கில மொழியில் இருக்கின்றன.

இங்கு உள்ள ஊழியர்கள் வரும் வாசகர்களிடம் அன்பும், பரிவுடனும் நடந்து கொள்வது நூலகத்துக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.
50,000 சதுர அடி பரப்பளவில் 1100 பேர் அமரக் கூடிய பெரிய கலையரங்கமும், 800 பேர் அமரக்கூடிய திறந்தவெளி ஒலி-ஒளி அரங்கும் , 151 நபர்கள் அமரும் வசதி கொண்ட கருத்தரங்கு மண்டபமும், 30 பேர் அமரக்கூடிய சிறிய கருத்தரங்க அறையும், நூல் வெளியீட்டு விழா நடத்தக் கூடிய கருத்தரங்க அறைகளும் உள்ளன.

மிகவும் நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையும் அமைந்துள்ளது இது சென்னையில் எங்கும் காணாத சிறப்பம்சம்.
பாலவகுப்பு படிக்கும் மாணவனில் இருந்து பேரறிஞர் வரை வந்து செல்லும் அறிவுக்கூடத்தை மூட உத்தரவிட ஜெயலலிதாவுக்கு எப்படி மனது வந்ததோ தெரியவில்லை.
அங்கு பணிபுரியும் பாதுகாப்பு ஊழியருடன் பேசிய போது அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
சிறு வயதிலிருந்து சாகும் வரை தொடர்ந்து படித்தால் கூட இங்குள்ள பாதிப் புததகங்களைக் கூடப் படித்து முடிக்க முடியாது. அப்படியான ஒரு அறிவுச் சொத்தை மூட நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்?
இளைஞர்களாகிய நீங்கள் இந்த நூலகத்தை மாற்றும் முடிவுக்கு எதிராக போராட வேண்டும். எனக்கு இங்கு இல்லாவிடில் வேறு ஒரு இடத்தில் வேலை செய்து விட்டுப் போவேன் ஆனால் நாளைய இளம் சந்ததியின் எதிர்காலம் என்னவாவது... இப்படியாக கவலையுடன் கூறினார் அவர்.
அங்கு சீரியஸாக படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவனிடம் கருத்துக் கேட்டோம்,
உண்மையில் நினைக்கும் போது கவலையாக இருக்கிறது. முதல்வர் தனது முடிவை மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அங்குள்ள மாற்றுத் திறனாளி ஊழியர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எனக்கு இந்த நூலகம் என்றால் உயிர். ஊழியர் என்பதையும் தாண்டி உண்மையான பற்றுதலோடு வேலை செய்கிறேன். இங்கு பணியாற்றுவதால் உண்மையில் மனதுக்கு நிறைவாக உள்ளது. முதல்வரின் மனதில் நல்லதொரு மாற்றத்தை இறைவன் தான் கொண்டு வர வேண்டும் என்றார்.
புத்தகம் வாங்கி படிக்க முடியாத அடித்தட்டு மக்களின் வரம் தான் இந்த நூலகம். ஏராளமான வறிய நிலையில் உள்ள மாணவர்கள் இந்த நூலகத்தை தக்க முறையில் பயன்படுத்துகிறார்கள்.

"1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் நூலகம் ஒன்று சிங்களர்களால் கொளுத்தப்பட்டது. இதோ தமிழகத்தின் தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஜெயலலிதா அரசால் சிதைக்கப்படுகிறது." இவ்வாறு உணர்ச்சி படக் கருத்துத் தெரிவித்தார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளரான சு. ப வீரபாண்டியன்.
180 கோடி செலவில் கட்டியிருக்கும் ஒரு கட்டிடம்.. அது முழுக்க, முழுக்க நூலகத்திற்கான வடிவமைப்பில் கட்டப்பட்டது. அதனை எதற்காக மருத்துவமனையாக மாற்ற வேண்டும்..?
மருத்துவமனை வேண்டுமென்றால் புதிதாக ஒன்றைக் கட்டிக் கொள்ளலாமே. ஜெயலலிதா ஒரு முறையாவது நூலகத்தை வந்து பார்க்க வேண்டும். அதன் அருமை பெருமைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கருணாநிதி திறந்து வைத்தார் என்ற ஒரே காரணத்துக்காக நூலகத்தை மூடி விடுவது என்று சொன்ன ஜெயலலிதாவின் சிறுபிள்ளைத் தனமான முடிவை என்ன வென்று சொல்வது?
கருணாநிதி என்றைக்குமே ஈழத்தமிழர்களின் நிரந்தரத் துரோகி என்பதை மறக்கவுமில்லை, மறைக்கவுமில்லை...
ஆனால்,அண்ணா நூற்றாண்டு நூலகம் நிச்சயமாக கருணாநிதியின் வாழ்நாள் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்று தான். ஆனால் நூலகத்தை அழிப்பதன் மூலம் கருணாநிதியின் பெயரையும் அழித்து விடலாம் என்று ஜெயலலிதா நினைத்தால் அதைப் போல அடி முட்டாள்தனம் வேறு எங்கும் கிடையாது.
ஒரு நூலகம் திறக்கப்படும்போது 100 சிறைகதவுகள் மூடப்படுகிறது....!!! ஒரு நூலகம் மூடப்படும்போது 1000 சிறைக்கதவுகள் திறக்கப்படும்..!!!
-தமிழ் சி.என்.என் இன் விசேட செய்தியாளர் குழு -





மேலும் சில முக்கிய செய்திகள்.... தமிழ் சி.என்.என் இன் விசேட செய்தியாளர் குழு



"

கருத்துகள் இல்லை: