ஞாயிறு, டிசம்பர் 11, 2011

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

பிரிந்த தம்பதியினரை சேர்த்து வைக்க நீதிபதி கையாண்ட வைத்தியம்

"எங்கள் குடும்ப நீதிமன்றங்களுக்கு உப்புசப்பில்லாத ஏராளமான வெட்டி வழக்குகள் வருகின்றன" என்று கவலையுடன் கூறும் நீதிபதிகளுக்கு 'பிரியாணி மற்றும் ஐஸ்கிரீம்' முறை தீர்வு பற்றி கூறுகிறார் போபால் குற்றவியல் நடுவர் (மாஜிஸ்டிரேட்) திரு. கங்காசரண் தூபே. 

தம்பதிகள் ஏன் பிரிகிறார்கள் ?

இந்த நீதிபதி பிரிந்து போகவிருந்த ஒரு தம்பதியினரை பிரியாணி கொண்டும், மற்றொரு தம்பதியினரை ஐஸ்கிரீம் கொண்டும் சேர்த்து வைத்திருக்கிறார். இவர், தம்பதிகளுக்குள் தகராறு என்பது மிகச் சிறிய (ஒன்றுக்கும் பெறாத)  பிரச்சனைகளில் இருந்தே பூதாகரமாக கிளம்புகின்றன என்று தாம் நம்புவதாக கூறுகிறார். 

குடும்ப வழக்குகளை தீர்ப்பதில் குற்றவியல் நடுவர் கங்காசரண் தூபேவின் அணுகுமுறை மிகச் சாதாரணமானது, வெகு இயல்பானது. இவர் அண்மையில் தீர்த்து வைத்த மூன்று வழக்குகள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். 

'பிரியாணி வழக்கு':

இந்த வழக்கில், தன்னை கொடுமை செய்த குற்றத்திற்காக விமான ஓட்டியாக இருக்கும் தனது கணவனை குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று ஓரளவு வசதி படைத்த 22 வயது பெண் ஒருவர் புகார் செய்கிறார். 2009-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டிருந்த இத்தம்பதியினர் திருமணம் முடிந்த சில வாரங்களுக்குள்ளாகவே பிரிந்து விட்டனர்.    

இந்த வழக்கு அண்மையில் குற்றவியல் நடுவர் தூபே தலைமை வகித்த மக்கள் மன்றத்தின் (லோக் அதாலத்) முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பெண் கொடுத்திருந்த புகாரை தூபே பரிசீலனை செய்தார். சுமார் 10 பக்கங்களில் இருந்த அப்புகாரில், கொடுமை, தாம்பத்திய உரிமைகளை தர மறுத்தல், வரதட்சணை கோரிக்கை என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் அப்பெண் சகட்டுமேனிக்கு எழுதித் தள்ளி இருந்தார். 

புகார் குறித்து தூபே விசாரிக்கும் போது, முதலிரவின் போது தனது கணவனுக்கு ஒரு பெண் நண்பரிடம் இருந்து தொலைபேசி வந்தது என்றும், அதை தான் ஆட்சேபணை செய்ததாகவும் அப்பெண் கூறினார். மேலும் தேனிலவுக்காக பாங்காக் செல்லும் வழியில் வேறு சில பெண் நண்பர்களிடம் இருந்து தந்து கணவனுக்கு இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்தன என்றும், எனவே பாதி வழியில் திரும்பி விட்டதாகவும், பின் தனது கணவன் அசாமில் உள்ள தனது பணியிடத்திற்கு சென்று விட்டதாகவும், தான் போபாலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டதாகவும் அப்பெண் கூறினார். தனது புகாரில் உள்ள வேறு சில விஷயங்கள் பற்றி தனக்கு சரியாகத் தெரியாது என்றும், ஆனால் அதில் உள்ள கையெழுத்து தன்னுடையதுதான் என்றும் அவர் மேலும் கூறினார். 

இந்த தம்பதியினர் இடையே உள்ள பிரச்சனை அற்பமானது என்பதை அறிந்த நீதிபதி தூபே, "உங்கள் கணவரை நீங்கள் எங்கு முதலில் சந்தித்து, என்ன சாப்பிட்டீர்கள்" என்று அப்பெண்ணிடம் வினவினார்.  மேலும் அவர்கள் இருவரையும் ஒரு நாள் மாலை வேளையில் அதே இடத்திற்கு சென்று, முன்பு சாப்பிட்ட அதே உணவை சேர்ந்து சாப்பிடும்படி ஆலோசனை வழங்கினார். அந்த நேரத்தில் அவர்கள் இருவரும் அந்த நேரத்தில் 'கோழி பிரியாணி' சாப்பிட்டதாக ஒரே குரலாக கூறினார். 

இதை அடுத்து அத்தம்பதியினர் போபாலில் உள்ள புகழ் பெற்ற Bada Talaab - ஐ நோக்கி உள்ள Noor-us-Sabah  என்ற உணவகத்திற்கு சென்று, கோழி பிரியாணி  உண்டனர். இந்த இடம்தான் அவர்கள் தங்கள் திருமணதிற்கு முன் முதலில் சந்தித்த இடமாகும். அவர்களை நீதிமன்ற பணியாளர் ஒருவர் தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

என்னே வியப்பு ! அடுத்த நாள் அப்பெண் நீதிமன்றத்திற்கு வந்து தான் தனது கணவர் மீது கொடுத்திருக்கும் வழக்கை திரும்பப் பெற விளைவதாக (வாபஸ்) கூறினார். மேலும் தங்கள் இல்வாழ்க்கை உறவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்புவதாகவும் கூறினார். 

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், 2005-இன் பிரிவு 28-ஆனது, வழக்குகளை முடிக்க தங்கள் சொந்த நடைமுறைகளை வகுத்துக் கொள்ள நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது என்று தனது சட்டப் படிப்பின் போது தங்க பதக்கம் வென்ற நீதிபதி தூபே கூறுகிறார். 

'ஐஸ் கிரீம்' வழக்கு:

இந்த வழக்கில் இளம் குழந்தைக்கு தாயாக உள்ள ஒரு பெண்ணின் வழக்குரைஞர்கள் அவரது கணவனுக்கு எதிராக சித்திரவதை, கொடுமை, துர்நடத்தை, மேலும் பல கடுமையான குற்றச்சாட்டுக்களை அதே குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் முன் வைக்கின்றனர்.  இதன் பொருட்டு அப்பெண்ணை நீதிபதி தூபே விசாரணை செய்தார். அப்போது அப்பெண்ணுக்கு ஐஸ்கிரீம் மீது கொள்ளைப் பிரியம் உள்ளதையும், அதை அவரது கணவர் வாங்கித் தர மறுப்பதையும் பெருங் குறையாக கூறினார். கணவரிடம் விசாரித்த போது, "தனது மனைவி குழந்தைக்கு தாய்ப் பால் கொடுத்து வருவதால், அவர் ஐஸ் கிரீம் சாப்பிட்டால் அதனால் குழந்தைக்கும்  சளி பிடிக்க வாய்ப்பு உண்டு என்றும், எனவே தான் ஐஸ் கிரீம் வாங்கித் தரவில்லை என்றும்," அவர் தனது தரப்பு நியாயத்தை சொன்னார். 

இதற்கு நீதிபதி தூபே என்ன ஆணையிட்டார் தெரியுமா? "ஒரு வார காலத்திற்கு தினமும் மாலை வேளையில் கணவர் தனது மனைவியை நகரின் பல்வேறு ஐஸ்கிரீம் பார்லர்களுக்கு அழைத்துச் சென்று மனைவிக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தந்து, அதற்கான பில்களை நீதிமன்றத்தில் தாக்கல் வேண்டும்" என்று ஆணையிட்டார். 

ஏழு தினங்கள் சென்றன. கணவன் - மனைவி இருவருக்கிடையேயும் இருந்த கருத்து வேற்றுமை மறைந்து போனது. பல்வேறு பயங்கர குற்றச் சாட்டுகளை உள்ளடக்கிய தனது புகார் மனுவை மனைவி திரும்ப பெற்றுக் கொண்டார். விடயம் முடிந்தது.

'சந்நியாசி' வழக்கு :

ஒரு மனைவி முதலிரவின் போது "உங்களை திருமணம் செஞ்சுகிட்டதுக்கு பதிலா நான் பேசாம போலீஸ் வேலைக்கே போயிருக்கலாம்" என்று தனது கணவனிடம் கூறுகிறார். இதனால் மனமுடைந்த கணவன் சந்நியாசி ஆகி விடுகின்றார். சில ஆண்டுகளுக்கு அவர் எங்கிருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியவில்லை. பின் ஒரு நாள் மதுராவில் காவி உடை தரித்து அவர் சந்நியாசியாக வாழ்ந்து கொண்டிருப்பது தெரிய வருகிறது. இவர்கள் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த போது, தான் சம்சார வாழ்வைத் துறந்து விட்டதாகவும், சந்நியாசி ஆகி விட்டதாகவும்  கணவர் கூறினார். நிலையை ஆராய்ந்த நீதிபதி தூபே, முதலில் அவரை சம்சார வாழ்வை அனுபவிக்கும்படியும், அதற்கு நன்கு முடி வெட்டிக் கொண்டு, ஜீன்ஸ் பண்ட், டீ சர்ட் போட்டுக் கொண்டு வரும்படியும் கூறினார். இவ்வாறு வந்த அவரிடம், நீதிபதி தூபே தனது பைக்கை கொடுத்து, "உங்களை கட்டிக்கிட்டதுக்கு பதிலா போலீஸ் வேலையில் சேர்ந்து இருக்கலாம்" என்று கூறிய அவரது மனைவியுடன் உல்லாசமாக ஒரு ரவுண்டு அடித்து விட்டு வரும்படி கூறினார். பல ஆண்டுகள் பிரிந்து இருந்த அத்தம்பதி இந்த மோட்டார் பைக் ரவுண்டுக்கு பிறகு, தாங்கள் தாங்கள் குடும்ப வாழ்வை ஒரு புதிய உற்சாகத்துடன் தொடங்க விரும்புவதாக கூறினார், என்கிறார் நீதிபதி தூபே.

நீதிபதி தூபே முன் வைக்கும்  கேள்விகள் :

இவ்வாறு குடும்ப பிரச்சனைகளின் வேரைக் கண்டறிந்து அதை எளிய முறையில் தீர்த்து வைக்கும் நீதிபதி திரு. கங்காசரண் தூபே, "வழக்குரைஞர்களும் காவலர்களும் விரிவானதும் புனைவானதுமான குற்றப்பத்திரிக்கைகளை தயார் செய்து ஏன் குடும்பத்தை பிரிப்பவர்களாக செயல்பட வேண்டும்?" என்று கேட்கிறார். 

மேலும் "ஊழல், குற்ற நடத்தை போன்ற மிகக் கடுமையான வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்களுக்கும், நீதித்துறைக்கும் அதிக நேரமும் கவனமும் தேவைப்படுகிறது. அப்படி இருக்கும் போது இப்படிப்பட்ட ஒன்றுக்கும் பெறாத அற்ப வழக்குகளை விசாரணை செய்வதில் அவை ஏன் தாங்கள் நேரத்தை செலவிட வேண்டும் ?" என்றும் அவர் வினவுகிறார். 

இப்படிப்பட்ட நீதிபதிகள் இன்றைய காலகட்டத்திற்கு இன்றியமையாதவர்கள். இத்தகு அணுகுமுறை குடும்ப வழக்குகளில் தரப்பினர்களின் மனதை மாற்றும்.

நிற்க:

வஞ்சக மனைவிகள் :

நீதிபதி தூபே அவர்களின் தீர்வு முறை உள்ளபடியே பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட தம்பதியினரிடையே கொஞ்சமாவது அன்பு அல்லது பாசம் அல்லது மன்னிக்கும் தன்மை என்பது ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் இந்த தீர்வு முறை வேலை செய்யும். மாறாக, எப்போது சமயம் கிடைக்கும், எப்போது கைவரிசையை காட்டி ஆதாயம் தேடலாம் என்று 'செட்டு' சேர்த்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கும் வஞ்சக, மோசடி மனைவிகளுக்கு இந்த அணுகுமுறை வேலை செய்யுமா? நிச்சயம் செய்யாது.

அச்சுறுத்தும் மனைவிகள் :

இ.த.ச. பிரிவு 498ஏ அல்லது குடும்ப வன்முறை சட்டம் அல்லது வேறு குற்ற சட்டப் பிரிவுகளை முன்னிறுத்தி, கணவனையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தி, நிறைய தொந்தரவுகளை கொடுத்து, வலுக்கட்டாயப்படுத்தி, அவமானப்படுத்தி ஒரு பெருந்தொகையுடன் பரஸ்பர மணமுறிவு எனும் சமரசத்திற்கு இழுக்கும் மனைவிகளிடம் இந்த வைத்தியம் பலிக்காது. 

காரணங்களை புனையும் ஏமாற்று மனைவிகள் :

இ.த.ச. பிரிவு 498ஏ -இன்படி ஒரு புகார் இருக்க வேண்டுமா? அதற்கு இதெல்லாம் நடந்திருக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் உள்ளது. இவற்றை கொண்டு குடும்ப வன்முறை சட்டத்திலும் புகார் செய்யலாம். ஆரம்பத்தில் 5  வகையான உரிமையியல் தீர்வழிகளை கொடுக்கும் சட்டமாக இருந்த இச் சட்டம் இப்போது மெல்ல மெல்ல முற்றிலும் குற்றவியல் நடவடிக்கை சட்டமாக மாறி வருகிறது. இச்சட்டப் பிரிவு அல்லது சட்டத்திற்கு பொருந்தும் வகையில் காரணங்களை ஜோடிப்பது ஒரு "குடும்ப பெண்ணுக்கு" மிக எளிது. உடனே சட்டமானது, கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாய்ந்து விடும். இப்படி பாய வைத்து, வாழ்க்கை பொருளுதவித் தொகை அல்லது நிரந்திர பிரிமனைப் பணம் என்ற பெயரில் பணம் பறிக்கும் மனைவிகளிடம் மேற்கண்டவாறான பஞ்சாயத்துகள் எடுபடுமா? 

திட்டமிடும் சதிகார மனைவிகள் :

முன்னரே திட்டமிடும் இத்தகு மனைவிகள் முதலில் ஆலோசனைக்கு தேடுவது ஒரு நல்ல, தேர்ந்த குடும்ப வழக்கு வழக்குரைஞர். அவரது ஆலோசனைபடி காரணங்களை சோடித்தல். இதற்கு நடுவே கணவனுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று பட்டியல் தயாரித்து அவர்களில் தனக்கு தோதானவர்களிடம் உறவாடல். இவர்களை வழக்கிட்ட பிறகு மெல்ல ஒவ்வொரு சீட்டாக களமிறக்க மனைவிக்கு உதவும். மொத்த நடவடிக்கைக்கும் ஒரு மிகப் பெரிய மாஸ்டர் பிளான். அதற்கு சதி.

கபட நாடகம் ஆடும் மனைவிகள் :

இவ்வாறு ஏமாற்ற நினைக்கும் மனைவிகள் திடீரென வீட்டை விட்டு ஓடிப் போவர்கள் அல்லது ஏதோ காரணம் ஒன்றை சொல்லி பெற்றோர் வீட்டில் போய் அமர்ந்து கொண்டு புகார் அல்லது வழக்கு போடுவார்கள். இதற்கு முன் இவர்களது நடவடிக்கைகள் பலவும் விசித்திரமாக இருக்கும். இயல்பானதாக இருக்காது. அடிக்கடி செல்பேசியில் உரையாடிக் கொண்டு இருப்பார்கள். ஏதோ காரணம் சொல்லி விட்டு வெளியே சென்று விட்டு வருவார்கள். அதாவது தனது பிந்தைய திட்டத்திற்கு அடித்தளம் இடுகிறார்கள் என்று பொருள். கணவனை தவறு செய்யத் தூண்டுவார்கள். கோபமூட்டுவர்கள், பேச வைப்பார்கள். "இதெல்லாம் எனக்கும் ரொம்ப பிடிக்கும்" என்று சொல்லி விட்டு, புகாரில் "அவர் அப்படி செய்யச் சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்" என்று கதை அளந்து வைத்திருப்பார்கள். 

தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு பல்வேறு கபட நாடகம் ஆடுவார்கள். இன்று நிழற்படம் எடுப்பதும், உரையாடல்களை பதிவு செய்வதும் செல்பேசி காரணமாக மிக எளிதாகிவிட்டது. எனவே கணவன் அறியாமல் எல்லாம் பதிவாகிக் கொண்டிருக்கும், கஷ்ட காலம். (ஆனால் வழக்கு நடந்தால் மனைவி மாட்டிக் கொள்வர் என்பது வேறு விஷயம் !). 

எனவே மனைவின் நடவடிக்கைகள் விசித்திரமானதாக, விபரீதமானதாக இருந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நன்று. 

பிரிவு 498A, உச்ச நீதிமன்றம், இந்திய சட்ட ஆணையம் :

இ.த.ச. பிரிவு 498A -இன் கீழான புகார்களில் உண்மை இருப்பதில்லை, அதை  மனைவிமார்கள் உள்நோக்கம் கருதி  தவறாக பயன்படுத்துகின்றனர் என்று நமது மாண்பமை உச்ச நீதிமன்றம் Preeti Gupta v. State of Jharkhand (decided on August 13, 2010) and Ramgopal v. State of M.P. (Order dated July 30, 2010) என்ற இரு வழக்குகளில் கருத்துரைத்தது. மேலும் இந்த சட்டப் பிரிவின் கீழான புகார் மனுக்களை  தரப்பினர்கள் சமரசம் செய்து கொள்ளும் வழக்காக (Compoundable) ஆக்க வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையத்திற்கும் பரிந்துரை செய்தது. இது குறித்த கேள்வி ஒன்றுக்கு சட்டம் மற்றும் நீதிக்கான அமைச்சர் திரு சல்மான் குர்ஷித் மக்களவையில் நேற்று எழுத்துப் பூர்வமான பதில் அளிக்கையில், மேற்கண்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துகளை இந்திய சட்ட ஆணையம் பரிசீலித்துள்ளது என்றும், அது பெற்ற தகவலின்படி, இரு இலட்சத்திற்கும் மேலான பிரிவு 498A -வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், கடந்த 31-10௦-2011-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பிரிவு 498A - தொடர்பான விடயங்கள் விவாதிக்கப்பட்டன என்றும், அதன் அடிப்படையில் சட்ட ஆணையம் அறிக்கை தயாரிக்கும் என்றும், அதில் பிரிவு 498A -கீழான குற்றத்தை 'சமரசம்' செய்து கொள்ளும் குற்றமாக ஆக்க வேண்டியதின் அவசியத்தை விளக்கியுரைக்கும் என்றும் கூறினார். மேலும் அந்த அறிக்கையானது பிரிவு 498A -தொடர்பான இதர சங்கதிகளை அதாவது அதை பிணைவிடு குற்றமாக ஆக்குதல், கைது செய்யும் நடைமுறை, சமரசத் தீர்வு போன்றவற்றையும் விளக்கும் என்றும் அவர் தனது பதிலில் கூறினார்.

முடிவாக:

கடந்த மாதம் ஆண்கள் தினம் வந்தது. அதற்காக சென்னையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் திரளாக கலந்து கொண்டிருந்தனர். அதில் பேசப்பட்ட பல்வேறு விடயங்களில் ஒரு விடயம் பரிசீலனைக்குரியது. அதாவது  பிரிவு 498A -இன் கீழ் வழக்கிடும் மனைவிகள் கணவனுக்கு எதிராக குற்றத்தை மெய்ப்பிக்கத் தவறினால், கணவன் மீது பொய் வழக்கிட்ட குற்றத்திற்காக அம்மனைவிக்கும், அவரது பெற்றோருக்கும் பாதி சிறைத் தண்டனையாவது நீதிமன்றம் அதே நடவடிக்கையில் வழங்க வேண்டும் என்றும், அப்போதுதான் கணவனையும், அவரது குடும்பத்தினரையும் குற்றவியல் வழக்கு கொண்டு இம்சை செய்து பெருந் தொகை பறிக்க திட்டமிடும் மனைவிகள் திருந்துவர், பொய் வழக்கிட தயக்கம் காட்டுவார் என்றும் பேசப்பட்டது. 

இது நடக்குமா என்பது ஒரு புறம். அதே நேரம் குறைந்தபட்சம்  பிரிவு 498A -இன் வகைமுறைகளை மனைவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பொருந்தும் வண்ணம் மாற்ற வேண்டும். அதாவது அப்பிரிவில் வரும் 'கணவன் அல்லது அவரது உறவினர்' என்பதை 'இல்வாழ்க்கை துணை அல்லது அவரது உறவினர்' என்று மாற்றினால் அதுவே கூட போதுமானது. இந்த மாற்றத்தை பெண்கள் தொடர்பான அத்தகு எல்லா சட்டங்களிலும் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் சட்டத்தின் முன் கணவனும் மனைவியும் சமம் என்பது நிலை நிறுத்தப்படும்.
jayarajan * Name : P.R.Jayarajan, M.L., D.A.D.R.,

கருத்துகள் இல்லை: