வியாழன், பிப்ரவரி 16, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

இவர்தான்(டா) போலீஸ்!

Wednesday, February 15, 2012 at 6:41 pm | 1,103 views
கடமையை உணர்ந்து செய்த ஒரு நேர்மையான மாவட்ட எஸ் பி!

துரையை அடுத்துள்ள திருப்பாலையில் கடந்த 9-ம் தேதி மாலை ஒரு கொலை. வீரணன் என்பவரை அவரது மனைவி உஷாராணி, கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றுவிட்டார். காரணம், பெற்ற மகள் மீதே வக்கிர எண்ணத்தோடு கைவைத்தது அந்த மிருகம்.
இந்தக் கொலையில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் வழங்கிய தீர்ப்பு, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தீர்ப்புக்கு ஆதரவாக பலர் கருத்து கூறி வருகின்றனர். ஒரு சிலர், அப்புறம் எதுக்கு நீதிமன்றம் என முணுமுணுக்கவும் செய்கின்றனர்!
வட்டித் தொழில் செய்துவந்த வீரண​னுக்கும் உஷாராணிக்கும் 22 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் வீட்டுக்குப்போன உஷா​ராணியிடம், முதல் இரவன்றே வரதட்சணை போதவில்லை என்று கேட்டு வீரணன் தொடங்கிய கொடுமை வருடக் கணக்கில், நான்கு பிள்ளைகள் பிறந்த பிறகும்கூட தொடர்ந்திருக்கிறது.
குடித்துவிட்டு வருவதும், உஷாராணியை கொடுமைப்படுத்தி அடிப்பதையும் வீரணன் நிறுத்தவே இல்லை. ஒரு சமயம் உஷாராணியைக் கட்டிப்போட்டு, அரிவாளால் காலை வெட்டி, துடிப்பதைப் பார்த்து சிரிக்கும் அளவுக்கு வக்கிர மன நிலைக்குப் போனார். பொறுக்க முடியாத உஷாராணி காவல் நிலையத்துக்குப் போனார். வீரணன் மீது புகார் கொடுக்க, அந்த வழக்கு இன்றும் நடந்து​ வருகிறது. இதையடுத்து வீரணனிடமிருந்து விவாகரத்தும் வாங்கினார்.
குழந்தைகளுடன் தனியே வாழ்ந்துவந்த உஷாராணிக்கு விவாகரத்து கிடைத்த பிறகும் நிம்மதி கிடைக்கவில்லை. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு முன் நின்று ரகளை செய்வார் வீரணன். இதுகுறித்து, போலீஸில் புகார் செய்தும், வீரணன் மாறவே இல்லை. இந்த நிலையில் திடீரென, ‘நான் திருந்திவிட்டேன். சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்’ என்று கடந்த நவம்பரில், வந்திருக்கிறார் வீரணன்.
முதலில் தயங்கினாலும்… குழந்தை​களுக்காக சேர்த்துக்கொண்டார் உஷாராணி. கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த வீரணன் மீண்டும் குடிக்கத் தொடங்கினார். மீண்டும் அடி… மீண்டும் கொடுமை என்று நரகமாகிப் போன நிலையில்தான், கடந்த வாரம் வீரணனைக் கொலை செய்து தலைப்புச் செய்தியில் இடம்பெற்றுவிட்டார் உஷாராணி.
கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால், உஷாராணி கைது செய்யப்பட்டார். மறுநாள் உஷாராணியிடமும் கொலை நடந்தபோது வீட்டில் இருந்த அவரது இரண்டாவது மகள் கோகிலப்பிரியாவையும் தனியாக அழைத்து விசாரணை நடத்தினார் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அஸ்ரா கர்க். இந்த சந்திப்புதான் அதிரடித் தீர்ப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது.
”வழக்கம் போல குடிபோதையில் தகராறு செஞ்ச மனுஷன், திடீர்னு வெறிபிடிச்ச மிருகமா மாறிட்டார். எதிர்ல நிக்கிறது தான் பெத்த மகள்னுகூட பாக்காம அவளைப் பலாத்காரம் பண்ண ஆரம்பிச்சிட்டார். எம் புள்ளயும் நானும் கையில கால்ல விழுந்து எம்புட்டோ கெஞ்சிப் பார்த்தோம்; கேக்கல. இதுக்கு மேலயும் தாமதிச்சா, புள்ளய நாசம் பண்ணினாலும் பண்ணிருவான்னு தோணுச்சு. பக்கத்துல கெடந்த கிரிக்கெட் மட்டையால மண்டையில ஓங்கி அடிச்சுட்​டேன். அந்தாளு செத்துப்போகணும்னு நெனச்சு நான் அடிக்கலை. ஆனா, அந்த நேரத்துல அதைத்தவிர எனக்கு வேற வழி தெரியலை சார்” என்று எஸ்.பி-யிடம் கதறி இருக்கிறார் உஷாராணி.
கோகிலப் பிரியாவும்  தன் தகப்பனின் அரக்கத்தனத்தை திக்கித்திக்கி விவரித்து இருக்கிறார். அந்தப் பெண்ணின் உடலில் பல இடங்களில் கீறல்கள், காயங்கள். இருவரின் வாக்குமூலங்களிலும் கண்ணீரிலும் உண்மை இருப்பதை உணர்ந்த ஆஸ்ரா கர்க் தயக்கமின்றி நிதானமாக தமிழில் பிறப்பித்த உத்தரவு:
”இவங்க மேல எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம்; வீட்டுக்கு அனுப்பிடுங்க..”
போலீஸ் அதிகாரிகள் தயங்கி நிற்க, எந்தச் சட்டத்தின் பிரகாரம் உஷாராணியை விடுதலை செய்கிறோம் என்பதைத் தெளிவாக அவர்களுக்கு விளக்கி வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார் அஸ்ரா கர்க்.
”உஷாராணியை வீரணன் பல வருடங்​களாகக் கொடுமைப்படுத்தியதற்கு சாட்சி​யங்கள் போலீஸிடமே இருக்கு. ‘இனிமேல் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டேன்’ என போலீஸில் எழுதிக்கொடுத்த பிறகும் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். அதன் உச்சமாக தனது மகளையே தகாத உறவுக்கு உட்படுத்த முயற்சித்திருக்கிறார். ஒரு தாயால் இதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? அதனால், தற்காப்புக்காக கிரிக்கெட் மட்டையால் வீரணனின் மண்டையில் அடித்திருக்கிறார் உஷாராணி. அதற்கு மெடிக்கல் சான்றிதழ் சாட்சி. அடி பலமாகப் பட்டதாலும் போதையில் இருந்ததாலும் சம்பவ இடத்திலேயே வீரணன் இறந்துவிட்டார். வழக்கமாக இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளியைக் கைது செய்து வழக்கை முடிப்போம். ஆனா, இந்தக் கொலையில் அப்படி நடப்பது சரியாக இருக்காது.
இந்திய தண்டனைச் சட்டம் 100 மற்றும் 120-ன் பிரகாரம், ஒரு பெண் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் போராட்டத்தில் கொலை செய்ய நேரிட்டால், அது தண்டனைக்கு உரிய குற்றம் இல்லை. இதில் முடிவெடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அதிகாரம் உள்ளது. இந்த பிரிவின்​படிதான் உஷாராணியை விடுதலை செய்கிறோம். இதுவரை யாரும் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி இருக்காங்களான்னு தெரியல. ஆனால் நான் தொடங்கி வச்சிருக்கேன். நியாயம் இருக்கிறது என நூறு சதவீதம் தெரிந்ததால், இந்த முடிவை எடுத்தேன்,” என்கிறார் கம்பீரமாக.
இந்த முடிவு குறித்து கிளம்பியுள்ள சர்ச்சை குறித்துக் கேட்டபோதும், மிகத் தீர்க்கமாக இப்படிச் சொல்கிறார் எஸ் பி:
“ஒரு பெண் தன் மானத்தை, மகள் மானத்தைக் காக்க நடந்த போராட்டத்தில்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார். வெறும் சாட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு இந்த முடிவை நான் எடுக்கவில்லை. அனைத்துவித சூழல்கள், கண்ணெதிரே தெரிந்த உண்மைகளை கணக்கில் கொண்டுதான் அந்தம்மாவை நான் விடுவித்தேன். உண்மைக்கு தோல்வி கிடைக்காது,” என்றார்.
உஷாராணியும் கோகிலப் பிரியாவும் பேசுகையில், “நரக வேதனையை அனுபவிச்சுட்டோம் சார். பெத்த மகளையே தப்பா நெனைக்கிற அளவுக்குப் போயிட்டார்னா பாத்துக்குங்க. அம்மாவும் தங்கச்சியும் பித்துப்பிடிச்ச மாதிரி இருக்காங்க. எஸ்பி சார் எங்க மேல கருணை காட்டி அம்மாவை விடுதலை பண்ணாம இருந்திருந்தா, நாங்க நாலு பேரும் நடுத்தெருவுல நின்னுருப்போம். எங்களைத் தன்னோட பிள்ளைகளா நெனச்சுக் கருணை காட்டிய எஸ்.பி. சாரோட காலில் விழுந்து கதறணும் போலருக்கு” என்கிறார் கோகிலப் பிரியாவின் அக்கா ராஜபிரியா.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு நேர்மையான அதிகாரியால்தான் இப்படியொரு நியாயத்தை வழங்க முடியும். அஸ்ரா கர்க் தன் நடவடிக்கையால் ஏற்கெனவே நல்ல பெயரைச் சம்பாதித்திருப்பவர்.
மாவட்ட ஆட்சியர் சகாயம் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் போன்றவர்களைப் பெற்ற வகையில் மாநிலத்திலேயே இன்றைக்கு மகா அதிர்ஷ்ட நகரம் என்றால் அது மதுரதேய்ன் என்கிறார்கள் மாவட்ட மக்கள் பெருமையுடன்!
மாவட்டத்துக்கொரு அஸ்ரா கர்க் வேணும்யா!
குறிப்பு: அஸ்ரா கர்க்கை கடந்த மே மாதம் சென்னை அண்ணா நகருக்கு துணை கமிஷனராக நியமித்து ஆணை பிறப்பித்தது தமிழக அரசு. ஆனால் கர்க்கின் சேவை மதுரைக்கு தேவை என்பதால், அந்த உத்தரவை கேன்சல் செய்து, அவரை மீண்டும் மதுரை ரூரல் எஸ்பியாகவே பணியாற்ற அனுமதித்தது!

THANKS:

-என்வழி ஸ்பெஷல்
http://www.envazhi.com/women-killed-her-husband 

கருத்துகள் இல்லை: