வியாழன், பிப்ரவரி 16, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

சசிகுமார் ஏந்திய உண்டியலுக்கு உடனடி ரியாக்‌ஷன்!


பொதுக்காரியம் எதுவென்றாகும் உண்டியல் ஏந்தி (கிட்டத்திட்ட மடிப்பிச்சைதான்) நன்கொடை வசூல் செய்து அதை முடிக்க நினைப்பது காம்ரேடுகளின் வழக்கம்.
கேரளா சினிமாவின் தவிர்க்க முடியாத சினிமா கலைஞன் ஜான் ஆப்ரகாம் மக்களுக்கான சினிமாவைத் தர ( கோவேறுக் கழுதை படம்) உண்டியல் ஏந்தி வசூல் செய்த பணத்தில்தான் பிலிம் ரோல் வாங்கினார்.


தற்போது தமிழ்சினிமாவில் நல்ல சினிமாவுக்காக முயற்சித்து வரும் இயக்குனர் சசிகுமார், மாணவர் நலன் கருதி உண்டியல் ஏந்தி வசூல் செய்தார். அதற்கு தமிழக முழுவதும் இருந்து உடனடி ரியாக்‌ஷன் கிடைத்திருகிறது. பல கல்லூரிகள் அவரது உண்டியலில் நன்கொடை அளிக்க முன்வந்திருகின்றன.
“பத்து இளைஞர்களை என்னிடம் கொடுங்கள். இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுகிறேன்”என்றார் சுவாமி விவேகானந்தர். விவேகானந்தரோடு சசிகுமரை ஒப்பிட முடியாது என்றாலும் ‘‘ஒரு ரூபாய் கொடுங்கள்... கல்வி இல்லாத நிலையே இல்லை என்கிற மாற்றத்தை நிகழ்திக் காட்டுகின்றேன்!’’என்கிறார் இயக்குனர் சசிகுமார்.

கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி அன்னைக் கல்லூரி நடத்திய ஆண்டு விழாவில் மாணவர் மறுமலர்ச்சி திட்டத்தைத் தொடங்கிவைத்து இப்படிப் பேசியிருகிறார் சசிகுமார்.
மாணவர்களே தங்களால் இயன்ற பண உதவியைச் செய்து வசதியற்ற  சக மாணவர்களைப் படிக்க வைக்கும் திட்டம்தான் இது. இதன் தொடக்கமாக தன்னால் முடிந்த தொகையை (ரூபாய் 15 ஆயிரம்) முதல் தவணையாக உண்டியலில் செலுத்திய சசிகுமார்,
அந்த உண்டியலைத் தூக்கியபடி திருவாரூர் மாவட்ட கல்லூரி மாணவர்கள் மத்தியில் வலம்வர, இரண்டு நாட்களிலேயே ஒரு லட்ச ரூபாய் திரண்டு இருக்கிறது. இதன் மூலமாக 40 மாணவர்கள் இந்த வருடம் இலவசப் படிப்பை மேற்கொள்ள முடியும் என அறிவித்து இருக்கிறது அன்னைக் கல்லூரி.

முன்னதாக உண்டியல் ஏந்திக் கிளம்பும் முன் அன்னை கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய சசிகுமார், ‘‘வசதி வாய்ப்புக்களுக்காகவோ,ஆடம்பரத் தேவைக்காகவோ யாரும் நம்மிடம் உதவி கேட்கவில்லை. ‘படிப்பதற்கு உதவி’ என்கிற வார்த்தைகளைக் கேட்கிறபோதே மனது வலிக்கிறது.
‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என அப்போதே சொன்ன வில்லிபுத்தூராரின் வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன. படிக்க வசதி இல்லை என்கிற நிலை இனி எந்தவொரு மாணவருக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே மாணவர் மறுமலர்ச்சி திட்டத்தை வலியுறுத்தி உங்களின் முன்னால் பேசுகிறேன்.
பணம் கட்ட வழியில்லாமல் கல்லூரியில் அட்மிஷன் போட முடியாமல் எத்தனையோ மாணவர்கள் திரும்பிச் செல்கின்ற நிகழ்வுகளை இன்றைக்கும் பல கல்லூரிகளில் பார்க்க முடிகிறது.
அத்தகைய மாணவர்களைக் கைதூக்கிவிடும் விதமாக ஒவ்வொரு கல்லூரிகளிலும் இந்த மாணவர் மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப்பட வேண்டும். இதற்காக எந்தக் கல்லூரி என்னை அழைத்தாலும் மாணவர்கள் மத்தியில் இதுகுறிதுப் பேசவும், கையில் உண்டியல் ஏந்தி பணம் சேகரிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.
லட்ச லட்சமாய் கொடுத்தால்தான் உதவி என்று இல்லை. நம் கையில் கிடைக்கும் ஒரு ரூபாய் காசுகூட உதவிதான். ஒருநபர் ஒரு ரூபாய் கொடுத்தாலும், லட்சம் பேர் கொடுத்தால் அதுவே பல மாணவர்களின் கல்விக்கு உதவும் பெரும்தொகையாக இருக்கும்.
ஒவ்வொரு கல்லூரிகளும் இதற்காகவே ஒரு இடத்தில் உண்டியல் வைத்தால், மாணவர்கள் தங்களால் முடிகிற போதெல்லாம் அதில் பணம் போட்டு உதவுவார்கள். மாணவர்கள் மட்டும் அல்லாது கல்விக்காக உதவ நினைக்கும் யாவரும் இதன் மூலம் கைகொடுப்பார்கள்.
நானும் என்னால் முடிகிற போதெல்லாம் இந்ததிட்டத்துக்கு உதவுவேன். இந்ததிட்டத்தை அமல்படுத்தும் எந்தக் கல்லூரிக்கும் எப்போதும் போக நான் தயாராக இருக்கிறேன். தனி மனித ஒழுக்கம் தொடங்கி சட்டம். ஒழுங்கு பிரச்னை வரை கல்விதான் ஒருவனை தன்மைப்படுத்துகிறது.
கல்விக்கு வழியில்லாமல் போகிற போதுதான் நியாயப்பிறழ்வும், நேர்மையற்றப் போக்கும் ஒருவனுக்கு ஏற்படும் அதனால், ஒருவனுக்கு கல்வி வழங்குவது என்பது அவனை சாதனைக்குரியவனாக மாற்றுவதற்கு மட்டும் அல்ல... அவன் தவறானப் பாதைக்குப் போய்விடாமல் தடுப்பதற்கான சமூகக் கடமையும்கூட!’’ எனச்சொல்ல... கூட்டதில் ஏக கரகோஷம்.
அடுத்த நாளே கோயம்புத்தூர் ஜி.ஆர்.டி. கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து சசிகுமாருக்குப் போன் வந்திருக்கிறது. ‘‘இனி வருடா வருடம் நீங்கள் சிபாரிசு செய்யும் தகுதியான நான்கு மாணவர்களுக்கு இலவசமாகவே சீட் வழங்குகிறோம். உங்களுடைய மாணவர் மறுமலர்ச்சி திட்டம் குறித்தும் உடனடியாக எங்கள் மாணவர்களிடம் கலந்து பேசுகிறோம்!’’ எனச் சொல்லி இருக்கிறார்கள் ஜி.ஆர்.டி. கல்லூரி நிர்வாகிகள்.
சசிகுமாரின் இந்தமுயற்சி குறித்து வி.ஐ.பிக்கள் சிலர் சொல்லியிருக்கும் கருத்துக்கள்:
இயக்குநர் மணிவண்ணன்:

“தம்பி சசிக்குமார் மாணவர்களுக்காக தொடங்கி வைதிருக்கும் இந்ததிட்டம் மகத்தானது. கும்பகோணதில் உருவாகி இருக்கும் இந்த எழுச்சி தமிழகம் முழுக்கப் பரவ வேண்டும். என்னை சிறப்பு விருந்தினராக எந்தக்கல்லூரி அழைத்தாலும், நான் இந்ததிட்டம் குறிது அவசியம் வலியுறுத்துவேன்!’’

தனவேல் ஐ.ஏ.எஸ்:


“கல்விக்கு உதவுகிற ஒருவருடைய சேவை கடவுளுக்குச் சமமானது. சசிகுமார் தொடங்கி வைத்திருக்கும் இந்த முயற்சியை அனைத்துத் தரப்பினரும் கடைக்கோடி கல்லூரிகள் வரை கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். மாணவர்களை வைத்து எத்தனையோ வரலாற்று மாற்றங்கள் இந்த மண்ணில் உருவாகி இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்றாக நிச்சயம் சாதனைப் படைக்கும்!’’
ஜெயக்குமார், மதுவிலக்கு கூடுதல் துணை ஆணையர்:

“வழிமாறிப் போகின்ற இன்றைய இளைய தலைமுறையை உடனடியாக நெறிப்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதற்கானத் துவக்கத்தை இயக்குநர் சசிகுமார் செய்திருக்கிறார். மாணவர்களுக்கு மாணவ சமுதாயமே கைகொடுத்துக் காப்பாற்றும் இந்தப் புரட்சி திட்டம் நிச்சயம் தமிழகத்தையே பேரறிவு பெற்ற மாநிலமாக மாற்றும். இதற்கு என்னால் முடிந்த உதவிகளையும் அவசியம் செய்வேன்!’’

சி.மகேந்திரன், துணைப் பொதுச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி:

“வசதி இல்லை என்பதற்காக இனி எந்தவொரு மாணவனின் கல்வியும் பாதிக்கப்படக் கூடாது. அதற்கான முதல் முயற்சியை இயக்குநர் சசிகுமாரும் கும்பகோணம் அன்னைக் கல்லூரியும்  தொடங்கி இருக்கிறது. அத்தனைக் கல்லூரி மாணவர்களும் இதற்குக் கைகொடுக்க வேண்டும். 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவெடுக்க இது நிச்சயம் உதவும்!’’
நடிகர் விதார்த்:

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் இந்ததிட்டம் மகத்தானது. இனிநானும் ஒவ்வொரு வருடமும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து ஏழைமாணவர்களைப் படிக்க வைக்க உறுதி எடுத்துக் கொள்கிறேன்!’’ இந்த முயற்சியில் சசிகுமாருக்கு வெற்றிகிடைத்தால் அது தமிழக மாணவர்களின் வெற்றியாக இருக்கும்.

THANKS:

http://www.4tamilmedia.com/cinema/cinenews 

கருத்துகள் இல்லை: