ஞாயிறு, மே 27, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

உயர்தரப் புத்தகங்கள் மலிவு விலையில்!

AddThis Social Bookmark Button

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில், ஆழ்வார் புத்தககடை ரொம்ப பிரபலம்.
இங்கு கிடக்கும் (ஆம் கிடக்கும்தான்) பயனுள்ள புத்தகங்கள் ஏராளம். கிட்டத்தட்ட 70 வருடங்களாக இயங்கி வருகிறது இந்த புத்தக கடை.
    
"எத்தனை மருத்துவர்கள், எத்தனை இஞ்சினியர்கள், எத்தனை வக்கீல்களை இந்த கடை உருவாக்கியிருக்கிறது தெரியுமா?" என்றபடி நம் அருகில் வந்து வாஞ்சையுடன் பேச ஆரம்பிக்கிறார் மேரி. ஆழ்வாருக்கும் மேரிக்கும் என்ன தொடர்பு என அவரைப்பாரத்தால் ஆழ்வாரோட மனைவி  என்கிறார்.

ஆம்! இந்த புத்தகக் கடை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஒரு நடைபாதைக் கடை. இங்கு உங்கள் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான அத்தனைப் புத்தகங்களும் கிடைக்கும். ஆனால் தேடினால்தான் கிடைக்கும். இந்த புத்தகத்தைத் தான் வாங்கவேண்டும் என்று நினைத்துகொண்டு நீங்கள் போய் தேடினால் உங்களுக்குக் கிடைப்பது பம்பர் பரிசுதான். நீங்கள் நினைத்தேப் பார்க்காத பொக்கிஷ புத்தகங்கள் தேடலில் உங்களுக்கு கிடைக்கும்.
       
"ரொம்ப கஷ்டப் பட்ட குடும்பத்தில் ஒரு பையன் டாக்டருக்கு படிச்சான். சில சமயம் எங்களிடமுள்ள புத்தகங்களை வாங்குவதற்கு கூட அவனிடம் காசு இருக்காது. ஒருநாள் நானும், அவரும் கலந்து பேசி இந்த பையனுக்கு இலவசமாகவே புத்தகத்தைக் கொடுக்க முடிவு செய்தோம். இப்போ பெரிய டாக்டராகி கோவாவில் வேலை பார்ப்பதாக கேள்விப் பட்டோம்" என்று பெருந்தன்மையுடன் கூறும்,ஆழ்வார் குடும்பம் ஒன்றும் பணக்காரக் குடும்பம் இல்லை. இந்த தம்பதியருக்கு நான்கு பெண்கள். நான்கு பெண்களின் படிப்பு, கல்யாண செலவுகள், இதர செலவுகள் எல்லாமே இந்த புத்தகக்கடை வருமானத்தில் தான்.
       
சிறு குழந்தைகளின் காமிக்ஸ் புத்தகம் முதல், படிப்புப் புத்தகம் வரை, மற்றும் பெரியவர்களின் படிப்புக்கான புத்தகங்கள் என்று மலைபோல் குவிந்துகிடக்கும் புத்தகங்களுக்கு மழை வந்தால் பாதுகாப்பில்லை என்பதுதான் ஆழ்வார், மேரியின் வருத்தம்.

அங்கு புத்தகம் தேடிக்கொண்டிருந்த ரமேஸ் ஒரு வக்கீல். அவரிடம் பேசியபோது,"நான் சின்னப் பையனா இருந்ததிலிருந்தே நான் இங்கு புத்தகம் வாங்கறேன். ஆழ்வார் பெரியவரை மயிலாப்பூரில் நிறைய பேருக்குத் தெரியும். ரொம்ப அருமையான புத்தகங்கள் இங்கே கிடைக்கும்" என்கிறார். ஆழ்வாருக்கு உடல்நலம் சரியில்லை என்பதால், அவர் மருத்துவ மனை சென்றிருந்தார். எனவே அவர் மனைவி மேரியிடம் இந்த கடையை எப்படி ஆரம்பித்தீர்கள் என்றபோது,
        
"என் கல்யாணத்துக்கு முன்னமேயே இந்த கடையை அவர் ஆரம்பிச்சுட்டார். விழுப்புரம் சொந்த ஊர். இங்கு பிழைக்க வந்தவர்தான் அவர். ஒரு வக்கீல் இவரிடம் சில புத்தகங்களை கொடுத்து விற்க சொன்னாராம். அந்த புத்தகம் வித்தவுடன். மேலும் சில புத்தகங்களைக் கொடுத்து விற்க சொல்லியிருக்கிறார். இப்படியே ஆரம்பித்ததுதான் இந்த புத்தக கடை. நாங்களாக  எங்கும் தேடி புத்தகங்கள் வாங்கி விற்பது கிடையாது. நிறைய பேர் எங்களுக்குப் புத்தகங்களை அன்பளிப்பாக கொடுக்கிறார்கள். இப்படித்தான் வாழ்க்கை போகுது. என்றாலும் மழைக் காலத்தில் நாங்கள் படும் கஷ்டத்திற்கு அளவேயில்லை." என்று கண் கலங்குகிறார் ஆழ்வார் மேரி.
      
நிறைய பிரபலங்கள் தங்கள் கடையின் வாடிக்கையாளர்கள் என்று பெயர் சொல்கிறார். ஆனால் அத்தனை பேரும் பெரிய பிரபலங்கள் ஆனதும், அவர்களை என்னால் சந்திக்க முடியவில்லை என்றும் வருத்தப்படுகிறார்.

THANKS:
                      4தமிழ்மீடியாவுக்காக: எழில்செல்வி
படங்கள்: எழில்சூரியா

கருத்துகள் இல்லை: