வெள்ளி, மார்ச் 09, 2012

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

தேசிய விருதுகள்: வாகை சூடிய தமிழ்த்திரை

மெகா பட்ஜெட் ஆடம்பர செலவுகள் இல்லை. படத்தின் அரை வாசி செலவை சம்பளமாக கேட்கும் நட்சத்திர நாயகர்கள் இல்லை. பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகள் இல்லை. கவர்ச்சியான கதாநாயகி இல்லை. முக்கியமாக ,சேட்டிலைட் டிவிகளில் நிமிடத்துக்கு ஒரு முறை வரும் விளம்பரம் இல்லை. 

இப்படி எதுவுமே இல்லாமல்  ஐந்து தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது தமிழ் திரையுலகம்.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் : அழகர்சாமியின் குதிரை
சிறந்த தமிழ் திரைப்படம்                         : வாகை சூட வா
சிறந்த துணை நடிகர்                                 : அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை )
சிறந்த புதுமுக இயக்குனர்                     : தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம் )
சிறந்த படத்தொகுப்பாளர்                         : பிரவீன் கே .எல் (ஆரண்ய காண்டம் )

சாதிக்க திறமை மட்டுமே போதும் என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. மேற்கூறிய எல்லா படங்களுமே   வசூலில் அடி வாங்கிய படங்களே.
திரையிட சரியான அரங்குகளும் நாட்களும் கிடைக்காமல்  , கமர்சியல் படங்களின் வரவுகளுக்கு இடையே இருந்த மிக குறுகிய காலகட்டத்தில் திரையரங்குகளை சந்தித்தவை.ஆனால் அரங்குகளை நிரப்பவில்லை.  காரணம் - படிக்க பதிவின் முதல் பத்தி.

இப்போதைய காலகட்டத்தில் பலகாரம் சுவையாய் தரமாய் இருப்பதை விட அதை  பார்ப்பதற்கு அழகாக wrap செய்து  மக்களை வாங்க வைக்கும் உத்தியே வெற்றி பெறுகிறது.ஆனால் வெற்றி என்பது வேறு. அங்கிகாரம் என்பது வேறு. இரண்டாவதற்கு , கடின உழைப்பையும்,திறமையையும் தவிர எந்த மேற்பூச்சு வேலையும் தேவை இல்லை. ஆதாரம் -  இந்த ஐந்து விருதுகள்.
திரையுலகின் பல விதிகளை உடைத்திருக்கின்றன மேற்கூறிய படங்கள்.

ஆரண்ய காண்டம் :

கதையும் அதன் களமும் முடிவான உடனே , தயாரிப்பாளருக்கு புரிந்திருக்கும் - கல்லாவை நிரப்ப தேவைப்படும் தாய்க்குலங்கள் ஆதரவு இந்த படத்திற்கு சைபர் என்று. உபயம் - படத்தில் தவிர்க்க முடியாத வசனங்கள்.ஆனாலும் முட்டி மோதி படத்தை வெளியிட்ட சரணுக்கு வாழ்த்துக்கள்.

மீதி வர வேண்டிய சொற்ப  கூட்டத்தையும் சாதாரண தமிழ் ரசிகனுக்கு புரியாத தரமான போஸ்டரின் ஆங்கில தாக்கத்தால் இழந்தது இந்த படம்.


படம் வெளிவந்து ஓடி முடித்த நான்கைந்து நாட்கள் தாண்டியே இது ஒரு தமிழ் படம் என்று பெரும்பானவர்களுக்கு  புரிந்தது.
  ஆனாலும் இயக்குனரும் , தொகுப்பாளரும் படத்தின் நாயகர்களாய் மிளிர்ந்தது சத்தியம்.
படத்தின் வேகத்தில் பிரவீனின் உழைப்பு நன்றாக தெரிந்தது. 
ஆரண்ய காண்டம் , கேங்ஸ்டர் படங்களின்  புது கோணத்தை , வேறு பாணியில் சொல்லும் விதத்தை அறிமுகப்படுத்தியது.

வசனங்களின் கூர்மையையும் , திருப்பங்களையும் நம்பிய இந்த படம்  தமிழ் திரை சரித்திரத்தில் ஒரு மைல்கல்.

அழகர்சாமியின் குதிரை:

வெண்ணிலா கபடிகுழு சுசீந்திரனின் இன்னொரு காவியம். ஒரு கதையை திரைப்படம் ஆக்கும்போது அந்த மாற்றத்திற்கு தேவையான அனைத்தையும் படத்தில் உபயோகித்த விதத்திற்கு பரிசு கிடைத்திருக்கிறது.
அப்புக்குட்டி , அழகர்சாமி பாத்திரத்தின் கனகச்சிதமான நல்ல தேர்வு. இளையராஜா இசை , காட்சிகளில் தெறித்த  உணர்வுகளுக்கு  மேலும் அழுத்தம் கொடுத்திருக்கிறது.


பொழுதுபோக்குக்கு தேவையான அனைத்து நல்ல அம்சமும் படத்தில் உண்டு.ஆனால் அவை யாவும் யதார்த்த   கோட்டுக்குள் மட்டுமே நின்று சாதித்திருக்கிறதே தவிர , காதை அடைக்கும்  குத்து பாட்டும் , கண்ணை உறுத்தும் சண்டை காட்சிகளும் அல்ல. கதை ,குதிரையை சுற்றிய நூலை நழுவவிடாமல் மற்ற துணை கதைகளை இணைத்து சென்ற விதம் அருமை.


ஒரு நடிகனுக்கு , நாயகனுக்கு தேவையான எந்த அடையாளமும் அப்புகுட்டிக்கு இல்லை. அதுவே இந்த வெற்றிக்கும் காரணம். அப்புகுட்டியின் இந்த வளர்ச்சி  கண்டிப்பாக திரையுலகில் நுழைய நினைக்கும் எந்த சாமானியனுக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

சுசீந்திரன் ,தமிழுக்கு இன்னொரு பாரதிராஜாவாக வர தகுதியான இயக்குனர். அவசரப்பட்டு 'ராஜபாட்டையில்' பயணிக்காமல் நிதானமாய் சென்றால் வளர்ச்சி தொடரும்.

வாகை சூட வா:

வசூலில் கடும் இழப்பு , நாயகன் விமல்  , வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வைத்தது. நல்ல படங்களுக்கு மட்டுமே உண்டான சாப நிலை இது.

பீரியட் படங்கள் வரிசையில் நல்ல கருத்தையும் முன்வைத்து வெளியான படம். வெயில் தகிக்கும்  சூழலில் , கலகலப்பான கிராமிய பின்னணியுடன்  அழகான காதலையும் சேர்த்து கொடுத்த படம். கிப்ரானின் இசை புது மாதிரியாய் கிறங்கடிக்க வைத்தது.


விமலின் அப்பாவித்தனமான நடிப்பும் , ஓவியாவின்  வாயாடித்தனம் கலந்த துடிப்பும் , ஏனைய நடிகர்களின் ஆரவாரமில்லாத பங்களிப்பும் , படத்தின்  தரத்தை உயர்த்தியது.   சிறந்த படங்களில் இந்த படத்துக்கு முதலிடம் கிடைத்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.வெகு பொருத்தமான தேர்வு.

-------------------------------------

இந்த படங்கள்  வெளியாகி , மக்களின் மவுத்டாக் மூலம் ' நல்ல படம் , பார்க்கலாம்' என்று கூட்டம் தயாரவதற்குள், திரையரங்குகளில் இருந்து காணாமல் போக நேர்ந்தது.  இது போன்ற நல்ல முயற்சிகளை 'ஆவண படம்' அல்லது  'அவார்டுக்கு மட்டும் தகுந்த படம் ' என்று ஒதுக்குகிற  விபத்தும் எப்போதும் நேர்கிறது.

ஆனால் இந்த மூன்று படங்களும் , ஆவணப்படம் போல  வெறும் செய்தியை மட்டும் சொல்லாமல் அதை சுவாரஸ்யமாகவும் . நகைச்சுவையுடனும்  சொல்லி பார்ப்பவரை சிரிக்க வைத்திருந்தாலும் ,தயாரிப்பாளர்களை அழ வைத்தவை என்பது உண்மை.

ஒரு பெரிய நடிகனின் பட பட்ஜெட்டில் ,இது போன்ற பத்து படங்கள் செய்து விடலாம் என்பது நிதர்சனம்.

ஒரு பக்கம்  , நல்ல படங்களை  கொடுக்க தயாரிப்பாளர்கள் இருக்க வேண்டும். அப்படி மிக கடினப்பட்டு அவர்கள் கொடுக்கும் படத்தை வரவேற்று  அதை காப்பாற்றும் ரசிகர்கள் இருக்க வேண்டும்.  இரண்டும் இல்லை என்றால் நல்ல கதை சொல்லி இயக்குனர்கள் காணாமல் போய் , ஹீரோயிசத்தில் கதையை பலி கொடுக்கும் இயக்குனர்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.

தொடரட்டும் இந்த அங்கீகாரங்கள்.
 
THANKS:
 

கருத்துகள் இல்லை: