திங்கள், நவம்பர் 21, 2011

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நடிகர் சிவக்குமாருக்குக் கண்டனம்!

E-mail அச்செடுக்க
நடிகர் சிவக்குமாருக்கு நான் விடுத்த கண்டனக் கடித்தைத்  தொடர்ந்து பல்வேறு கடிதங்கள் சமீபத்தில் அவர் மேடைகளில் ஆற்றிவரும் அவரது அடாவடி பேச்சைக் குறித்து எனக்கு வந்த வண்ணமுள்ளது.

தமிழ்த்திரை உலகில் பவனிவரும் ஒரு சில அறிவுஜீவி நடிகர்களுள் முதன்மையானவர் சிவக்குமார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. "என்னைச் செதுக்கியவர்கள்" என்ற தலைப்பில் தனது சினிமா உலக அனுபவத்தை அவர் வருணிக்கையில் நம் மனது நெகிழ்ந்துப் போகும். "என் கண்ணின் மணிகளுக்கு" என்ற தலைப்பில் அவர் பேசும் உரை நம்மை புல்லரிக்க வைக்கும். "கம்பன் என் காதலன்" என்ற தலைப்பில் அவர் பேசும் இலக்கியப்பேச்சு நம்மைக் கட்டி போடும்.

ஆன்மீகம், இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, சித்தர்கள் பாட்டு, சங்க இலக்கியம், தமிழ்த் திரைப்பட வரலாறு, திருக்குறள் என அனைத்து தலைப்பிலும் மடை திறந்த வெள்ளமென இந்த மனிதன் உரையாற்றுவதைக் கேட்கையில்  'இப்படி ஒரு நினைவாற்றலா இந்த மனிதனுக்கு?" என்று நாம் வியந்து போவோம். தழுதழுக்க உணர்ச்சி பொங்க உரையாற்றும் இத்திறமை இவருக்கு ஒரு வரப்பிரசாதம். அப்படிப்பட்ட ஒரு சிந்தனையாளர்  ஆதாரமில்லாத தகவல்களை எடுத்து வைக்கும்போது நமக்கு வேதனையளிக்கிறது.

நான் விடுத்த இந்த கண்டனக் குரலால் என் மிக நெருங்கிய நண்பர் மணிமாறன் போன்றவர்களுடைய நக்கீரப் பார்வைக்கும் நான் ஆளாக நேர்ந்தது. நமது கலாச்சாரம் கெட்டு அழிந்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுப்பதற்கு நாம் நமது இளந்தலைமுறையை உஷார் படுத்த வேண்டும். இதைத்தான் சிவக்குமார் செய்துக் கொண்டு இருக்கிறார் என்று மணிமாறன் வாதிடுகிறார். மணிமாறன் அவர்களே! உங்களைப் போலவே நானும் சிவக்குமாரின் தீவிர ரசிகனாக இருந்தவன்தான் நான்.

தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா என்ன?

சிவக்குமாரின் எண்ணங்கள் வேண்டுமானால் செத்து ஒழிந்துக் கொண்டிருக்கும் நமது கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தும் முயற்சியாக இருக்கலாம். அதற்காக ஆதாரங்கள் இல்லாத, பீதி கிளப்பக்கூடிய, உண்மைக்கு புறம்பான, அருவருக்கத்தக்க விஷயங்களை மேடையில் வாதங்களாக வைப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பெண்கள் கல்லூரியில் (கல்லூரியின் பெயரை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறேன்) நமது இலக்கியச் செல்வர் சிவக்குமார் ஆற்றிய சொற்பொழிவு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெங்களுரில் ஏதோ ஒரு கல்லூரி வளாகத்தின் உள்ளேயே PUB (ஒயின் ஷாப்) திறந்து வைத்திருக்கிறார்களாம், ஏனென்றால் கல்லூரி மாணவ மாணவிகள் வெளியில் சென்று குடித்து வந்து கல்லூரியின் பெயர் கெட்டுப் போவதால் அதைத் தடுக்கும் விதத்தில் கல்லூரி வளாகத்தினுள்ளேயே இந்த ஏற்பாடாம். ஆளாளுக்கு அவரைப் பிடித்து "அது எந்தக் கல்லூரி? பெயரைச் சொல்லுங்கள்" என்று கூச்சலிட்டு பிரச்சினை செய்ய திக்குமுக்காடிப்போய் எதோ சொல்லி சமாளித்திருக்கிறார்.

மேடையில் உணர்ச்சிகரமாக பேசி 'திரில்' ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசையில் உண்மைக்குப் புறம்பான இது போன்ற செய்திகளை அவர் பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

அதே மேடையில் அவர் கூறிய இன்னொரு செய்தி. ஹைதராபாத்தில் வசிக்கின்ற காதலித்துத் திருமணம் செய்துக்கொண்ட  சென்னையைச் சேர்ந்த இளந்தம்பதியரின் வாழ்க்கை முறையை விவரித்திருக்கிறார். கணவனுடைய நண்பனோடு மனைவியும், மனைவியின் தோழியோடு கணவனும் உறவு வைத்திருந்தார்களாம். இரு ஜோடிகளுக்கும் இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இதனைக் கண்டுக் கொள்ளாமல் பரஸ்பர உறவுகொண்டு வாழ்ந்து வருகிறார்களாம். இதுதான் காதல் திருமணம் செய்துக்
கொண்டவர்களுடைய இன்றைய பரிதாப நிலைமை என்று கூறியிருக்கிறார். சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யாவும் காதலித்துத்தான் திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். அப்படியென்றால் காதலித்து திருமனம் செய்துக் கொண்டவர்கள் எல்லாம் இப்படித்தான் வாழ்க்கை நடத்துகின்றார்கள் என்று சொல்ல வருகிறாரா சிவக்குமார்?

மேற்கூறிய இரண்டு விஷயங்களும் பெரிய சர்ச்சையை உண்டு பண்ண, இதுநாள்வரை ஒழுங்காக பேசிக் கொண்டிருந்த இவர் ஏன் சமீப காலமாக இப்படி விவகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார் என சினிமாத்துறையில் அவருடன் நெருங்கிப் பழகுபவர்களே மனம் வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

- அப்துல் கையூம்

கருத்துகள் இல்லை: