ஒரு
முறை ஒரு உணவு விடுதியில் குடும்பத்துடன் சாப்பிடப் போயிருந்த சமயம். ஒரு
பிரபலம் குடும்பத்துடன் சாப்பிட வந்திருந்தார்கள். கூடவே 3 பணிப்பெண்கள்.
அட! பரவாயில்லையே! வீட்டுப் பணிப்பெண்களை ஒன்றாய் அழைத்து வந்து சாப்பிடும்
சமதர்ம சமுதாயத்திற்கு வித்திடுகிறதே அந்தப் பிரபல குடும்பம் என
நினைத்தேன்..ஓரிரு நிமிடம் போயிருக்கும். உணவுகள் பரிமாற ஆரம்பித்ததும்,
மூன்று பணிப்பெண்களும் அவ்வீட்டுக் குழந்தைகளை ஆளுக்கொன்றாய் அழைத்துக்
கொண்டு ஓட்டல் வாசலில் இருந்த விளையாட்டு அறையில் வைத்து பிஸ்கட், சிப்ஸ்,
கூல்டிரிங்க்ஸ் என பொட்டலத்தை பிரித்து கொடுக்க ஆரம்பித்தனர். ஒருபக்கம்
பிரபலமும் மற்றொரு பக்கம் அவர்கள் வீட்டு பரிதாபங்களும் ஆரவாரமாய் சாப்பிட
ஆரம்பித்தனர்..இன்று இது பிரபல பணக்கார வீட்டில் மட்டுமல்ல.. நகர்ப்புற
மக்களில் பலர் வீட்டில் நடக்கும் விஷயம் தான். இப்போது வேகமாக
உருவாகிவரும், “நேரமில்லை ஜாதி” குடும்பங்களில் இதற்கு கற்பிக்கப்படும் நியாயம் ரொம்ப அதிகம்.

நல்ல
ஆரோக்கியமான குழந்தைப்பருவம் என்பது, வாழ்நாள் எல்லாம் ஆரோக்கியமாக
இருப்பதற்கான அடிப்படை. உங்கள் வீட்டு குழந்தைச் செல்வம் சரியான வேளையில்
சரியான உணவை விரும்பிச் சாப்பிட வைத்து விட்டீர்கள் என்றால் பெற்றோராய்
வாழ்வில் பெரும் பொறுப்பை செய்து முடித்ததாக அர்த்தம். “எனக்கு வேணாம்;
பிடிக்கவேயில்லை;” என்ற
வார்த்தைகளைக் கேட்டு கேட்டு, கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி கடைசியில் மன
நோயாளியாகவே மாறிவிடும் சில அம்மாக்களை எனக்குத் தெரியும். கூடவே “என்
குழந்தை அவங்க அப்பா..அவங்க ஃபேமிலி மாதிரி கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்தி சார்!” என தன் ஏழாம் அறிவில் சுருதி சேர்க்கும், அம்மாவும், “உனக்கு பொறுமையில்லை..பிள்ளைய சாப்பிட வைக்கிறத விட உனக்கு வேற என்ன வேலை?; உனக்கு அக்கறையில்லை..”-என
ஏதோ எக்ஸிபிசனில் குழந்தையை வாங்கி வந்து மாதிரி தனக்கு சம்பந்தமில்லாதது
போல் பேசும் மேல்ஷாவனிஸ அப்பாவும் நிறையவே உள்ள படித்த ஊர் இது. குழந்தைய
சாப்பிட வைப்பதில் அப்பா அம்மா இருவருக்கும் சமபங்கு உண்டு என்பதை
ஒருபோதும் மறக்க வேணாம்.
குழந்தைக்கு உணவூட்டுவது என்பது அறிவியல் இல்லை. ஒரு கலை.
வாழைப்பழத்தில
பொட்டாசியம் இருக்கிறதென்று அக்குழந்தைக்கு தெரியாது..கார்ட்டூனில்
பார்த்த பழம் சாப்பிடும் யானையும், தொலியில் வழுக்கி விழுந்த தாத்தாவும்
மட்டுமே தெரியும். அந்த தாத்தா-யானையில் துவங்கி, பொட்டாசியத்தில் வந்து
சேர்க்கும் வித்தையைச் செய்ய வேண்டியது பெற்றோர் மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக
எந்த பட்டப்படிப்பும் தொலைதூரப்படிப்பாக இந்த வித்தையை நடத்துவதும் இல்லை.
தேவையெல்லாம் நிறைய அக்கறை; நிறைய பொறுமை; கொஞ்சம் மெனக்கெடல்.
குழந்தை
என்ன சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அறிவை இணையத்தில்
தேடும் முன்பு, வீட்டு நல்இதயத்தில் தேடுங்கள். மருத்துவரிடம் கேட்கும்
முன்பு அம்மாவிடம், மாமியாரிடம், பாட்டியிடம் கேளுங்கள். நல்ல
புத்தகங்களிடம் தேடுங்கள். அதே வயசு குழந்தையை வளர்த்துவரும்
பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் பேசுங்கள். 80% சூத்திரங்கள் இதில்
கிடைத்துவிடும். நீங்கள் இதல்லாம் எளிதில் கிட்டாத சென்னை மாதிரி ஆர்டிக்
அண்டார்டிகா கண்டத்தில் ஐயோ பாவமாக வசித்து வருபவராக இருந்தால், உங்களுக்கு
இந்தக் கட்டுரை கொஞ்சம் உதவும்.
1-1/2
வயது மட்டும் தாய்ப்பால் மறுக்காமல், மறக்காமல் கொடுப்பது முதல் கடமை. 5 -
6 மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் மட்டும் போதாத போது கூடுதலாக உணவுத் தேடல்
துவங்கும் போதுதான் ஒவ்வொன்றாய் குழந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
அரிசி-பாசிபருப்பு-கஞ்சி,
நேந்திரபழக் கஞ்சி என துவங்கி 7-8 மாதங்களில் கீரை கடைந்த சாதம், என
தொடரவும். ஒருநாள் அரிசி; மறுநாள் கேழ்வரகு; ஒருநாள்
தினை என குழந்தைக்கு கஞ்சியாகவோ அல்லது குழைந்த சாதமாகவோ
அறிமுகப்படுத்துங்கள். காய்கறி சூப் (நார்களை நீக்கி) 1-வயது குழந்தைக்கு
கொடுத்துவாருங்கள். கொடுக்கும் போதே அந்த காய்கறி குறித்த
கர்னபரம்பரைக்கதையோ, கார்ட்டூனோ சொல்லுங்கள். முடிந்தால் அந்த காய்கறி
வாங்க கடைக்கு அழைத்துச் செல்லுங்கள். மனது ஒட்டினால், வாய் திறக்கும்.
ஒண்ணும் சாப்பிட மாட்டேங்கிறான்; ஒரு டம்ளர் பாலாவது குடி; என பால் ஊற்றி
வளர்ப்பது கெடுதி என்கிறது தற்போதைய உணவு அறிவியல். கொஞ்சம் கூடுதல்
அக்கறையிலோ அல்லது சின்ன புள்ளதானே சாப்பிட்டு போறான் என சோம்பேறிகள்
ரெகமன்டேஷனிலோ பிள்ளை, பிள்ளையார் மாதிரி உருண்டு திரண்டு உருவாக
ஆரம்பித்தால் பாலையும் தயிரையும் கண்ணில் காட்டாதீர்கள். மழலை உடற்பருமனுக்கு தயிர்சாதமும் பாலும் உருளைகிழங்கு சிப்ஸும் சாக்லேட்டும் தான் பெருவாரியான காரணம்.

இனிப்பு
உடலை வளர்க்கும் ஒரு சுவை. வளரும் குழந்தைக்கு குறைந்த அளவில் அது நல்லதே.
வெள்ளைச் சீனியாக இல்லாமல். பனை வெல்லத்தில், நாட்டு வெல்லத்தில் செய்யும்
அடை பிரதமன், நேந்திரம்பழ ஜாம், அதிரசம் –போன்ற உணவுகள் அவ்வப்போது
தரலாம். மில்க் சாக்லேட் அதிகம் வேண்டாம். 10வயதிற்குள்ளாக வயதுக்கு வரும்
பெண்குழந்தைக்கு மில்க் சாக்லேட் காரணமாக இருக்கலாம்
முருங்கைக்
கீரை, சிறு கீரை, அரை கீரை-ஆகியன குழந்தைகட்கான கீரைத் தேர்வில்
முக்கியமானவை. கேரட்டைக் காட்டிலும் முருங்கைக் கீரையில் கண்ணுக்கு தேவையான
கரோட்டின் சத்து அதிகம். உருளை, சேனைக்கிழங்கு(elephant yam)
உடல் எடை தேறாத குழந்தைக்கு மிக நல்லது. வாரம் இருமுறை கொஞ்சம் இஞ்சி,
மிளகுத்தூள்சேர்த்து கொடுக்கவும். பழங்களில் நேந்திரம்பழம், மலைவாழை,
கூழாஞ்செண்டு, மட்டி, கோழிக்கூடு –வகை வாழைப்பழங்கள் ரொம்பவே நல்லது.
மாதுளை, சமீபத்தில் தேசிய உணவியல் கழகத்தால் உலக பழ தரத்தில் முதலிடத்தை
பெற்றுள்ள, நம்ம ஊர் கொய்யா( நல்ல வேளை வழக்கம் போல் நியூசிலாந்தின் கிவி,
ஸ்காண்டினேவியன் ஸ்ட்ராபெர்ரி தான் சிறப்பு என புத்திசாலி விஞ்ஞானிகள்
சொல்லவில்லை), ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களை 2-3 வயதிற்குள் பழக்கிவிடுவது
ரொம்ப அவசியம்.

ஒருமுறை
பஸ்சில் பயணம் செய்யும் போது, ஒரு பெண் தன்னிடமிருந்த ஆரஞ்சை எடுத்து அதன்
சுளையை தன் சுத்தமான கர்சிப்பில் வைத்துச் சுற்றி அதன் கூர் முனையை தன் 7
மாத கைக்குழந்தைக்கு கொடுத்தாள். குழந்தை தாய்ப்பால் அருந்துவது போல்,
பழச்சாற்றை துணியில் சப்பி சாப்பிட்டது. தாகமும் தணித்து, ஊட்டமும் தரும்
அந்த தாயின் வித்தை ஒரு கவிதை போல் மனதில் இன்னமும் இருக்கிறது.
தேவையெல்லாம் அக்கறை மட்டுமே; கலோரி கணக்கு பார்த்து, கடைசியில்
தோற்றுப்போவதல்ல.
கொழுப்பு
பயம் கூடியுள்ள காலம் இது. பொய்யுக்கு பயப்படுவதை விட நெய்யுக்குப்
பலருக்கும் பயம். ஆனால் குழந்தைக்கு பசு நெய்யும், தேங்காய் எண்ணெயும்
ரொம்ப அவசியம். பருப்பு சாதத்தில், பாயாசத்தில் என இதனை சிறிதளவு சேர்ப்பது
முக்கியம். invisible fat- கொழுப்பானது நாம் சாப்பிடும் அரிசி, பருப்பு தானியம் மூலமாக வந்து சேரும். அது போதாது. Poly unsaturated, mono saturated மற்றும் saturated கொழுப்பு வகைகள் சேர்ந்த கொழுப்பு கொஞ்சம் அளவில் குழந்தைக்கு கண்டிப்பாக தேவை. இதில் இருந்து பெறப்படும் essential fatty acids மூலமாகத் தான் fat soluble vitamins வகைகளை, (கண்ணைக் காக்கும் vitamin A அதில் அடக்கம்) கரைக்கும் கொழுப்பு அமிலத்தை, prostaglandins
எனும் உடலுள் ஏற்படும் காயங்கள் ஆற்றுவது முதல் கான்சர் வரை வராது
காக்கும் பொருளை, உருவாக்குவதும் சாத்தியம். அதனால் இரத்தக் கொழுப்பைக்
கண்டு அஞ்சி, எண்ணெயின் மீது அவதூறு பரப்பவேண்டாம். அளவோடு சாப்பிட மறக்க
வேண்டாம். Pre mature baby –என்றால் கண்டிப்பாக பருப்புசாதத்தில் சிறுதுளி தேங்காய் எண்ணெய் விட்டு கொடுங்கள்.
ஆடியோ பாடியோ அல்லது “டாக்டர் மாமகிட்ட சொல்லி முருங்கைக்காய் ஊசி போடச்சொல்லவா? அல்லது செல்லமாய் நான் முருங்கைக்காய் ஊட்டவா?”, என அழகாய் பயமுறுத்தியோ, சாப்பிட வையுங்கள். எதிர்காலத் தலைமுறை எதிர்கொள்ள வேண்டிய நோய்க்கூட்ட சவால்கள் ஏராளம்.
”புஜ்ஜுகண்ணா..இதுதான் கடைசி வாய்..வாங்கிக்கோடா!” என நீங்கள் ஊட்டும் உணவுருண்டை மட்டும் தான் அந்த சவால்களைச் சமாளிக்கக் கூடும்!.....